வேண்டியதை வேண்டியவுடன் தரும் ஸ்ரீபத்மநாப சுவாமி
நிரஞ்சனா
திவாகர முனிவர் ஸ்ரீமன் நாராயணனை தன் மகனாக அடைந்து சீராட்டி வளர்க்க விரும்பினார். அதனால் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து கடும் தவம் இருந்தார். முனிவரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பெருமாள், குழந்தை உருவத்தில் திவாகர முனிவர் முன் தோன்றி “என்னை அன்பாக வளர்த்தால் நான் உங்களுடனே இருப்பேன். அதை மீறி என் மேல் சிறு கோபத்தை காட்டினாலும் அடுத்த நொடியே நான் உங்களை விட்டு பிரிந்து விடுவேன்.” என்றார். ஸ்ரீமன் நாராயணனின் இந்த நிபந்தனைக்கு சம்மதித்து குழந்தை உருவத்தில் இருந்த பெருமாளை தூக்கிக்கொண்டு தன் குடிலுக்கு வந்து சீராட்டி அன்பை பொழிந்து வளர்த்து வந்தார் முனிவர்.
ஒருநாள் முனிவர் பூஜித்து வந்த சாளகிராமத்தை எடுத்து விளையாடி கொண்டு இருந்தது குழந்தை. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு குழந்தையை கடிந்துக் கொண்டார். வளர்ப்பு தந்தையான முனிவர் தன் நிபந்தனையை மீறியதால் அடுத்த நொடியே குழந்தை உருவத்தில் இருந்த ஸ்ரீநாராயணன் மறைந்து விட்டார். “ஐயோ பெரும் தவறு இழைத்துவிட்டேனே. கோபம் செல்வத்தை இழக்கச் செய்யும் என்பார்களே… என் செல்வத்தை கோபத்தால் இழந்தேனே..” என்று மனம் கலங்கினார்.
“பெருமானுக்கு உகந்தது சாளகிராமம் அதை பெருமானே எடுத்து விளையாடியதில் என்ன தவறு இருக்கப்போகிறது.? கோபத்தில் எழுபவன் நஷ்டத்தில் உட்காருவான் என்பது என் விஷயத்தில் உண்மையாகிவிட்டதே” என்றும் அழுது புலம்பினார் முனிவர்.
தன் தவறை மன்னித்து மீண்டும் தனக்கு காட்சி கொடுக்கும் படி மன்றாடினார், கதறினார் முனிவர்.
திவாகர முனிவரின் கதறல் தாங்காமல், என்னதான் இருந்தாலும் தன் வளர்ப்பு தந்தையாயிற்றே என்று மனம் இறங்கிய ஸ்ரீமன் நாராயணன், “என்னை காண அனந்தன் காட்டிற்கு வா.” என்று பகவான் ஸ்ரீநாராயணனின் அசரீரியாக சொன்னார்.
“எல்லாமே காடாகத்தான் இருக்கிறது. இதில் எங்கே அனந்தன் காடு இருக்கிறது என்று யோசித்தப்படி பல காடுகளாக தேடி வந்தார். தேடி தேடி சோர்வடைந்தே போனார் முனிவர். ஓர் இடத்தில் சில்லென்று தென்றலாய் காற்று வீசிய திசையை நோக்கி சென்றார். அது ஒரு கடற்கரை. அந்த கடற்கரை ஓரத்தில் இருந்த காட்டுபகுதிக்குள் சென்று பார்த்தார் முனிவர். அங்கு ஸ்ரீமன் நாராயணன், அழகாவும் ஆனந்தமாகவும் படுத்துக் கொண்டு சயன நிலையில் திவாகர முனிவருக்கு காட்சி தந்தார். இதுவே “அனந்தன் காடு” என்பதை முனிவர் அறிந்து மகிழ்ந்தார்.
பத்மநாபசுவாமி கோயில் உருவான வரலாறு
சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஏற்பாடுகள் செய்ததாக ஓலைச்சுவடிகள் வாயிலாக தெரிகிறது. திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-ல் கோயில் புதுப்பிக்கப்பட்டது. பெருமாளுக்கு விசேஷமான சாளகிராமத்தாலேயே மூலவரை செய்ய ஆசைப்பட்ட அரசர், 12000 சாளக்கிராமத்தினாலும் கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட மூலவர் அனந்தசயன மூர்த்தியை உருவாக்கினார்.
இந்த மூலவரின் சிலை 18 அடி நீளத்தில் இருக்கிறது. பத்மநாப சுவாமியை தரிசிக்க வேண்டும் என்றால் மூன்று பகுதியாகத்தான் தரிசிக்க வேண்டும். முதல் நடைவழியில் பத்மநாப சுவாமியின் முகத்தையும், இரண்டாவது நடைவழியில் சுவாமியின் தேகத்தையும், மூன்றாம் நடைவழியில் பாதங்களையும் தரிசிக்க வேண்டும்.
அரசர் மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்ய பொன் பொக்கிஷங்கள், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டார். இதன் பிறகுதான் திருவிதாங்கூர் அரசர் பரம்பரையினர் “பத்மநாபதாசர்” என்று அழைக்கப்பட்டனர்.
ஆங்கிலேயேர்களிடம் இருந்து நம் இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்த பிறகு அப்போதைய திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ பத்மநாபதாச சித்திரை திருநாள் பாலராம வர்மாவிடம், சர்தார் வல்லபபாய் பட்டேல், “உங்களுக்கு எவ்வளவு அரசு மான்யம் வேண்டும்.?” என்று கேட்டார்.
“எங்களுக்கு மான்யம் ஏதும் வேண்டாம். எங்கள் பத்மநாபசுவாமி கோயிலை மட்டும் எங்கள் கட்டுபாட்டில் விட்டு விடுங்கள்.” என்றார் அரசர். அதனால்தான் இன்றுவரை இந்த கோயில் மட்டும் கேரளா அரசின் தேவசம்போர்டு வசம் இல்லாமல் அரச குடும்பத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
பத்மநாபசுவாமிக்கு இந்திய ராணுவம் கொடுத்த மரியாதை
இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் பத்மநாபசுவாமிக்கு 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செய்யும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்தது.
நினைத்ததை நினைத்தவுடன் செயல்படுத்தும் சுவாமி
பல தடவை முயற்சித்தும் அது சரியாக நடக்காமல் ஏதாவது ஒரு தடை வந்துக் கொண்டிருந்தால் ஸ்ரீபத்மநாப சுவாமியிடம் வேண்டி கொள்வார்கள் அரச குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள். சில நாட்களிலேயெ அந்த வேண்டுதல் பலித்து விடும். இதனால் மகிழ்ச்சியடைந்தவர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதால் தங்கத்தையும் விலை உயர்ந்த ரத்தினங்களையும் காணிக்கையாக கொடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள் நலம் பெற வேண்டும் என்று பிராத்தனை செய்வார்கள். அந்த பிராத்தனைக்கு பலன் கிடைத்தவுடன் துலாபாரமாக இப்போது கோயில்களில் தரப்படும் சக்கரை, பழங்கள் போன்று, அந்த காலத்தில் துலாபாரத்தில் பொன் நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை தந்தார்கள் பக்தர்கள். ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் நம்மாழ்வாரின் பாடல்கலிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. வேண்டியதை வேண்டியவுடன் தருபவர்தான் நம் ஸ்ரீபத்மநாபசுவாமி.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved