யோகமான வாழ்க்கையை தரும் அரசிலிநாதர் திருக்கோயில்
நிரஞ்சனா
திண்டிவனம்-பாண்டிச்சேரி (வழி கிளியனூர்) பாதையிலுள்ள ஒழுந்தியாபட்டு நிறுத்தத்தில் இறங்கி 2கி.மீ சென்றால் விழுப்புரம் மாவட்டம் அரசிலிநாதர் திருக்கோயில் இருக்கிறது.
வேடன் சிவலிங்கம் ஆன சம்பவம்
கீழைச் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த சத்தியவிரதன் என்ற அரசர் வேங்கி நகரைத் தலைநகராக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். சிவனுக்கு ஒரு அழகான நந்தவனம் அமைத்து, அந்த நந்தவனத்தில் பூக்கும் மலர்களை பறித்து சிவபெருமானுக்கு சமர்பித்து வந்தார். சில நாட்களாக நந்தவனத்தில் இருந்து மலர்கள் கிடைக்காமல் இருந்தது. இந்த தகவல் அரசர் சத்தியவிரதனுக்கு தெரிவித்தார்கள் காவலர்கள். யாரோ பூக்களை திருடிச் சென்று விடுகிறார்கள் என்று அரசர் முடிவுசெய்து நந்தவனத்திற்கு காவல் பலப்படுத்தினார். அப்படி இருந்தும் மலர்கள் திருடப்பட்டுகொண்டுதான் இருந்தது. இனியாரையும் நம்பி பயன் இல்லை, என்ற முடிவு செய்து அரசரே நந்தவனத்தில் காவல் இருந்தார். அப்போது, நந்தவனத்தில் இருந்த செடிகளில் இருக்கும் மலர்களை தின்று கொண்டு இருந்தது ஒரு மான்.
“இறைவனுக்காக அமைத்த நந்தவனத்தில், இந்த மான் புகுந்து இத்தனை நாள் அட்டகாசம் செய்து வந்ததா.? இந்த திருட்டு மானை கொன்றால்தான் ஆத்திரம் அடங்கும்.” என்று முடிவுசெய்து வில்லெடுத்து குறி பார்த்து மான் மீது அம்பு வீசினார் அரசர். மான், அரசரின் குறியில் இருந்து தப்பி ஒடியது. மானை பின்தொடர்ந்து ஒடினார் அரசர். அப்போது திடிரென்று ஒரு வேடன் அடர்ந்த புதருக்குள் இருந்து ஓடி வந்து, “நில். மான் என்னுடையது. இதை கொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை” என்று கூறினான். இதனால் ஆத்திரம் அடைந்த அரசர் வேடனிடம் மோதினார். சில மணி நேரத்திலேயே வேடனிடம் தொடர்ந்து சண்டையிட முடியாமல் சோர்வடைந்தார் அரசர். இதை கண்ட வேடன், “பிழைத்து போ” என்று கூறி மீண்டும் புதருக்குள் சென்றுவிட்டான்.
“எனக்கு ஒரு வேடன் உயிர் பிச்சை போடுவதா” என்று கோபம் கொண்டு, வேடனை பிடிக்க அரசரும் புதருக்குள் புகுந்தார்.
அதிர்ச்சி அடைந்தார் அரசர்.
ஆம்… வேடன் மறைந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்தார். இதை கண்ட அரசர் தன்னிடம் வேடன் உருவத்தில் வந்தது ஈசனா என்று மகிழ்ச்சியடைந்தார். அப்போது வானத்தில் ஒரு அசரீரி ஒலித்தது, “சத்தியவிரதா… இந்த இடத்தில் நமக்கு ஓர் ஆலயம் எழுப்பி, அக்கோயிலுக்கு “அரசிலிநாதர்” என்று பெயர் வை” என்ற உத்தரவிட்டார் இறைவன். அரசரும அச் சிவலிங்கம் இருந்த இடத்தில் அழகாக ஆலயத்தை எழுப்பினார்.
கி.பி- 1120-ம் ஆண்டு இத்திருக்கோயிலின் மகிமையை புரிந்து கொண்டனர் மக்கள்
கி.பி 1120-ம் ஆண்டு நல்லூழான் பச்சை செல்வன் என்பவனுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் வருந்தி அரசிலிநாதரிடம் வேண்டினான். அரசரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்தார் ஈசன். மன உலைச்சல் கொடுத்து கொண்டு இருந்த துன்பங்கள் நீங்கியது. எத்தனையோ நாட்களாக இருந்த தன்னுடைய மனபாரத்தை பன்னிரண்டு நாட்களிலேயே இறைவன் தீர்த்து வைத்ததால் அரசிலிநாதருக்கு பல திருப்பணிகளை செய்தான்.
சோபனன் வாழ்கைக்கு ஏற்றத்தத்தை தந்த அரசிலிநாதர்
விழிப்புரத்தில் சோபனன் என்பவர் வீடு வீடாக யாசகம் கேட்டு உணவு உண்டு வந்தான். இவன் சிறந்த சிவபக்தன். தினமும் அரசிலிநாதரை தரிசித்து வருவான். எப்போது விடிவு காலம் பிறக்கும? என்று கண்ணீர் விட்டு அழுவான். இதை கண்ட அக்திருக்கோயிலில் இருந்த ஒரு சாமியார், “உன் கவலை தீர மற்றவர்களுக்கு உதவி செய்” என்றார். “நானே ஒரு யாசகன். நான் எப்படி அடுத்தவர்களுக்கு உதவ முடியும்?” என்றான் சோபனன். “பணத்தால் உதவினால்தான் அது உதவியா? மற்றவர்களின் தாகத்தை தீர்த்தலும் உதவிதான். நீ தண்ணீர் பந்தல் வை. இந்த சேவையை நீ தொடர்ந்து செய்வதால் மற்றவர்களின் வயிறு குளிர்ச்சி பெறும். உன் வாழ்க்கை மாற்றம் பெறும்” என்றார் சாமியார்.
சாமியார் ரூபத்தில் ஈசனே அருள்வாக்கு சொல்வது போல் இருந்தது சோபனனுக்கு. உடனே சிறுபந்தல் போட்டு அதில் ஒரு பானையை வைத்து தண்ணீர் பந்தல் போட்டுவிட்டான். பலர் சோபனனின் தண்ணீர் பந்தலுக்கு சென்று தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்து, “யார் இந்த புண்ணியவானோ நன்றாக இருக்க வேண்டும்.” என்று வாழ்த்திவிட்டு சென்றார்கள். ஒருநாள்,
சோபனனின் தண்ணீர் பந்தலுக்கு நீர் அருந்த விச்வாஸு என்ற வியாபாரி வந்தார். சோபனனின் பேச்சும் அவனின் நல்ல குணமும் வியாபாரிக்கு பிடித்து விடுகிறது. அதனால் அந்த வியாபாரி தன் கடைக்கு சோபனனை வேலைக்கு சேர்த்துக் கொண்டார். சோபனனின் நேர்மையும், சுறுசுறுப்பும், உழைப்பும் மிகவும் கவர்ந்தது விச்வாஸுக்கு. அதனால் தன் மகளை சோபனனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதனால் சோபனன் பல கோடிகளுக்கு செல்வந்தரானார். “தெருகோடியில் இருந்தவன் அரசிலிநாதரின் ஆசியால் கோடிகளுக்கு அதிபதியானான்” என்று ஊர்மக்கள் பேசினார்கள். இதை உண்மையான வார்ததை என்று ஆமோதித்தான் சோபனன்.
அடியவர்களின் சிந்தையுள் ஊறும் தேன் போலத் திகழ்பவர். வானவர்களால் போற்றப்படுபவர். வீண்பொழுதைப் போக்காத அடியார்களுக்கு அருள் புரிபவர். தனது பொன்னடிகளை உளமார வழிபடும் அன்பர்களால் அடையத்தக்கவர். பொய்மையில்லாதவர். உண்மையின் மறுவடிவாக விளங்குபவர். இத்தகைய தன்மைகளை உடைய ஈசன் கோயில் கொண்டுள்ள தலமே அரசிலியாகும்.
என்று பல சிவத்தலங்களை தரிசித்துவிட்டு அரசிலிக்குத் திருஞான சம்பந்தர் வந்து அரசிலிநாதரை தரிசித்து போற்றுகிறார். அரசிலிநாதரை வணங்கினால் அரசு வேலை, அரசாங்க ஆதரவு கிடைக்கும். தீராத கஷ்டங்களும் நீங்கி ஏற்றமான வாழ்க்கை அமைந்திடும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved