பக்தர்களின் குறை தீர்க்க சென்னைக்கு வந்த பழனியாண்டவர்
நிரஞ்சனா
பக்தர்களின் குறைகளை தீர்க்க சென்னைக்கு வந்த பழனியாண்டவர், வடபழனி முருகன் என்கிற பெயரால் ஆசி வழங்கி கொண்டு இருக்கிறார்.
சிவபெருமான் அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை வில்லாக வளைத்த இடம்தான் புலியூர் கோட்டம். இன்று இதுவே கோடம்பாக்கம் – வடபழனி என்று அழைக்கப்படும் பகுதியாக இருக்கிறது. இப்படி மகன் முருகன் வருவதற்கு முன்னதாகவே அப்பன் சிவன் வந்த இடம் இது.
இந்த வடபழனி கோயில் சுமார் 150 வருடங்களுக்கு முன்பு உருவானது என்கிறார்கள்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.
அண்ணாசாமி நாயகர் என்பவர் தீவிர முருக பக்தர். எந்நேரமும் முருகா, முருகா என்ற சொல்லி வருவார். ஒருநாள் அவருக்கு கடுமையான வயிற்று வலி வந்தது. அந்த வலி கொஞ்சம் கூட குறையாமல் தீவிரம் அடைந்து கொண்டே இருந்தது. இதற்கு பல மருத்துவர்களை பார்த்தும் மருந்துகளை சாப்பிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. வலியால் பேசக் கூட இயலாமல் அவதிப்பட்டார். பழனிக்கு சென்று பழனியாண்டவரிடம் முறையிட்டால் தன் வயிற்றுவலி நீங்கும் என்று அண்ணாசாமியின் மனதில்பட்டதால், பழனிக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு வந்து கொண்டு இருந்தார். அப்போது வழியில் ஒரு சாமியார் குறுக்கிட்டார்.
“நீ பல முருகன் திருதலங்களுக்கு சென்று வா. உன் விதி மாறும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பதை நீ அனுபவத்தில் உணரவே அப்பன் முருகன் உன்னை இப்படி ஆட்டிபடைக்கிறான். எதற்கும் கலங்காதே. வெண்ணை திரண்டு வரும் வேளையில் பானையை உடைத்த கதை போல நம்பிக்கையை தளரவிடாதே. உனக்கு முருகபெருமானின் அருளும் ஆசியும் கிடைக்கும் நேரம் இதுவே என்பதால் உன்னை சோதித்து பார்க்கிறான் என் அப்பன் முருகன். இந்த நேரத்தில்தான் இன்னும் தண்டாயுதபாணியை முழு மனதுடன் நீ வணங்க வேண்டும். மருத்துவரால் கைவிடப்பட்ட நிராயுதபாணியாக இருக்கும் உனக்கு, தண்டாயுதபாணிதான் மருத்துவர்.” என்று அந்த சாமியார் அண்ணாசாமிக்கு ஆறுதலும், முருகனை விட்டால் உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதையும் உணர்த்தினார்.
பழனி மலையின் அடிவாரத்தில் சாமியார் சொன்னது, அந்த முருகனே கூறியது போல் இருந்தது. அதனால் பல முருகப்பெருமான் திருதலங்களுக்கு சென்று இறைவனை வணங்கி வந்தார் அண்ணாசாமி.
ஒரு ஆலயத்தில், “முருகா” என்று கூற கூட முடியாதபடி வயிற்று வலி இருப்பதால் இந்த நாக்கு இருந்தென்ன பயன் என்று கூறி, தன் நாக்கை வெட்டி கொண்டார். இதை கண்ட அந்த ஆலயத்தில் இருந்த பக்தர்கள் பதறினார்கள். அண்ணாசாமி நாயகர் மயங்கி விழுந்தார். சுற்றி இருந்தவர்கள் கோயில் தீர்த்தத்தை தெளித்து அண்ணாசாமியின் மயக்கத்தை தெளிய வைத்தார்கள். கண் விழித்த அண்ணாசாமி அழுதப்படி,
“என்னை எதற்காக பிழைக்க வைத்தீர்கள்.? நான் பேசும் சக்தியை இழந்து விட்டேன்” என்று கத்தி கொண்டே கூறினார். சுற்றி இருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். நாக்கு வெட்டிக்கொண்டவர் தெளிவாக பேசுகிறாரே என்று வியந்தனர். அதேசமயம் தன் வயிற்று வலி மறைந்ததை உணர்ந்தார் அண்ணாசாமி நாயகர். இந்த சம்பவத்திற்கு பிறகு முருகப் பெருமானின் ஆசியால் குறி சொல்லும் ஆற்றலை பெற்றார்.
“உன் விதி மாறும்” என்றாரே பழனி கோயிலில் இருந்த சாமியார், அவரை பார்க்க பழனிக்கு மீண்டும் சென்றார். ஆனால் அந்த சாமியாரை எங்கும் காண முடியவில்லை. காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எல்லாம் மாறும் என்றாரே, அந்த மகானின் நினைவாக பழனியில் இருந்து ஒரு முருகப்பெருமானின் பெரிய படத்தை வாங்கி வந்தார் அண்ணாசாமி நாயகர். சென்னைக்கு வந்து தன் இடத்தில் கீற்றுக்கொட்டகை அமைத்து அந்த இடத்திலேயே பழனியில் இருந்து வாங்கி வந்த படத்தை வைத்து வழிப்பட்டு வந்தார். அந்த படத்தின் முன்பாக அமர்ந்து பழனியாண்டவர் அருளால் பிரச்னையென வருபவர்களுக்கு குறி சொல்லியும் வந்தார். இதனால் அந்த இடம் “குறிமேடு” என்று மக்களால் அழைக்கப்பட்டு புகழ் அடைந்தது.
நல்லநேரம் வந்தால் நல்லோர் துணை கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இரத்தினசாமி செட்டியார் என்பவர் அண்ணாசாமி நாயகருக்கு நண்பராக அறிமுகமானார். இருவரும் சேர்ந்து முருகப்பெருமானுக்கு சிறு கோயில் ஒன்றை கட்டினார்கள். பழனியில் இருந்து வந்த முருகனின் நினைவாக “வடபழனி முருகன்” என்று பெயர் பெற்றது திருக்கோயில். வடபழனி முருகனை வணங்கினால் என்றும் எப்போதும் வெற்றியான வாழ்க்கை நிச்சயம். திருமணம் தடைப்படுபவர்கள் வடபழனியாண்டவரை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் பெறுவர். வடபழனி முருகப் பெருமானுக்கு மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்தால் தீராத வியாதியும் தீரும், வறுமை விலகும். எண்ணற்ற நன்மைகள் தேடி வரும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved