திருப்பங்களை தரும் திருப்பத்தூர் யோக பைரவர்
நிரஞ்சனா
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் குடி கொண்டிருக்கும் யோக பைரவர்.
பொதுவாக பைரவர் சூலம் மற்றும் நாய் வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் யோக நிஷ்டையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதால் “யோகபைரவர்” என்று அழைக்கப்படுகிறார்.
பைரவர் உருவான கதை
சிவபக்தரான இரண்யாட்சகனுக்கு அந்தாகாசூரன், சம்பாசூரன் என இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் கூட சிவபக்தர்களாக இருப்பதால் தட்டி கேட்க ஆள் இல்லாமல் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை செய்து வந்தார்கள். இதனால் முனிவர்களும் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று எங்களை காப்பாற்றுமாறு முறையிட்டார்கள். மனம் இறங்கிய ஈசன், “கவலை வேண்டாம். எந்த ஒரு செயலுக்கும் காரணம் இருக்கும். அதனால் நீங்கள் கவலையடைய வேண்டாம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய ஒருவன் வருவான்.” என்று கூறி தன் சக்தியால் பைரவரை உருவாக்கி அசூர சகோதரர்களிடம் அனுப்பினார் சிவபெருமான்.
ஈசனின் தூதுவராக வந்த பைரவரை சட்டை செய்யவில்லை அசூரர்கள். இதனால் பெரும் கோபம் கொண்ட ஈசன், தூதுவராக முன்பு அனுப்பிய பைரவரையே போர் வீரனாக அனுப்பி அசூர சகோதரர்களை கொன்று வீழ்த்தினார். சிவபெருமானின் உத்தரவின் பேரில் அசூரர்களை கொன்றாலும் உயிர்களை கொன்ற பாவத்தால் பைரவரை பிரம்ஹத்தி தோஷம் பிடித்து கொள்கிறது.
இந்த தோஷத்தில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சிவனிடம் முறையிட்டார் பைரவர். “நீ கொன்றைமர காட்டு பகுதிக்கு சென்று என்னை நினைத்து தவம் செய். உன் தோஷம் நீங்கும். அத்துடன் உன்னை உலகமே வணங்கும். உன்னை வணங்குபவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது அருள் செய்.” என்றார் சிவபெருமான். சிவனின் உத்தரவு படி கொன்றைமர காட்டு பகுதிக்கு வந்த பைரவர் அமைதியாக தியானம் செய்தார். இதன் பலனாக பைரவருடைய தோஷம் நீங்கியது. அத்துடன் சிவ அருளால் பல யோகங்களையும் பெற்றார். இதனால் தேவர்கள் பைரவரை யோகபைரவர் என்று புகழ்ந்தார்கள்.
பைரவரின் மகிமை
சனிஸ்வரரை யமதர்மராஜன் மிகவும் அவமானப்படுத்திவிடுகிறார். இதனால் மனம் வருந்தி தன் தாய் சாயாதேவியிடம் முறையிடுகிறார் சனி. “கலங்காதே. சிங்கத்துக்கு நேரம் கெட்டால் நரி கூட நீதிபதியாகும். இது இயற்கை. அதனால் நீ யமனை வெற்றி பெற பைரவரை வணங்கு. எல்லாம் நன்மையாக அமையும்.” என்றாள். தாய் கூறியது போல் சனிபகவான் பைரவரை வணங்கினார். பைரவரின் ஆசியை பரிபூரணமாக பெற்ற பிறகு யமதர்மராஜானே சனி பகவனை பார்த்து மரியாதை செலுத்தும் படியாக உயர்ந்தார். இதன் பிறகு சில காலம் கழித்து ஈஸ்வரரை பிடிக்க முயன்ற சனி, சனிஸ்வர பட்டமும் பெற்றார். பைரவரை தன் நண்பராகவும் குருவாகவும் மதித்தார் சனிஸ்வர பகவான்.
இதன் பிறகு நவகிரகங்களான சூரியன் முதல் கேது பகவான் வரை பைரவர் பல துணை பெயர்களில் கிரகங்களின் சக்தியாக இருக்கிறார். காட்டில் முனிவர்கள் எந்த இறைவனை தவம் செய்வதாக இருந்தாலும் முதலில் பைரவரை வணங்கிய பிறகுதான் இறைவனையே வணங்குவார்கள். “எப்படி கண்களை இமை காக்கிறதோ, அதுபோல் பைரவர் இமையாக இருந்து தன்னை வணங்கும் பக்தர்களை காப்பார்.” என்கிறார் வால்மீகி முனிவர்.
திருப்பத்தூர் என்ற பெயர் வந்ததற்கான காரணம்
கொள்ளையனாக இருந்த வால்மீகி, தன் தவறை உணர்ந்து சிவபெருமானை நினைத்து பைரவர் இருக்கும் இடத்தில் தவம் செய்தார். பல வருடங்களாக தவம் செய்ததால் வால்மீகி முனிவர் உடலை கரையான் புற்று கட்டியது. இனியும் வால்மீகியை சோதித்து அமைதியாக இருப்பது நன்மையல்ல. என்று ஈசன் கருதி வால்மீகிக்கு நேரில் காட்சி தந்து, “வால்மீகி” என்று முதலில் சிவபெருமான்தான் அவருக்கு பெயர் வைத்து அழைத்தார். சிவனின் குரல் கேட்டு வால்மீகி முனிவர் புற்றை உடைத்து கொண்டு வெளியே வந்தார்.
“வால்மீகி நீ புற்றில் இருந்து வந்ததால் உன் பெருமை நிலைத்து இருக்க, இந்த இடம் புத்தூர் என்ற பெயர் பெறட்டும்.” என்றார் சிவபெருமான். அதுவே இன்று திருப்பத்தூர் என்று நாம் அழைக்கிறோம்.
கோயில் உருவான கதை
அரசர் ஒருவர் நாய் வாகனம் இல்லாத யோகபைரவர் இருப்பதாக கேள்விப்பட்டு இந்த காட்டுப் பகுதிக்கு சென்று பார்த்தார். யோக பைரவரை கண்ட அரசர், இறைவனுக்கு திருக்கோயில் கட்டினார்.
பரிகாரம்
தேய்பிறை, அஷ்டமி திதிகளில் யோக பைரவருக்கு வடைமாலை அணிவித்தால், வேண்டியது உடனே நடக்கும். சத்ரு தொல்லையில் இருந்து விடுதலை அடைய யோக பைரவரை வணங்கினால் நன்மை ஏற்படும். பில்லி சூனியம் கஷ்டங்கள் விலக விரோதிகளின் தொல்லையில் இருந்து விடுதலை பெறவும், திருமணம் நடக்கவும் இந்த யோக பைரவரை வணங்கினால் எல்லாமே வெற்றியாக அமையும். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி நல்லெண்ணையில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். நல்ல வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் 9 வாரம் யோக பைரவருக்கோ அல்லது உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பைரவர் கோயிலுக்கோ, சூரியனுக்கு உகந்த ஞாயிற்று கிழமையில் விளக்கு ஏற்றலாம். திருமணம் தடைப்பட்டவர்கள் 9 வாரம் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் தீபம் ஏற்றினால் நல்ல வரன் அமையும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved