சமயத்தில் துணை வருவாள் சமயபுரத்தாள்
நிரஞ்சனா
திருச்சியின் வடக்கே காவிரியின் வடகரையில் சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தபடி பகதர்களின் குறைகளை தீர்க்கிறாள் சமயபுரத்து மாரியம்மன்.
ஸ்ரீரங்க வைணவி
ஸ்ரீரங்கத்தில் வைணவியாக அம்மன் குடிகொண்டு இருந்தாள். வைணவி அதிக உக்கிர சக்தி கொண்டவளாக இருந்தாள். இதனால் ஸ்ரீரங்கத்தில் மழை இல்லாமலும் வெயிலாலும் அவதிப்பட்டார்கள் ஊர் மக்கள். இதற்கு வைணவி உக்கிர அம்மனே காரணம், வைணவியை வேறு இடம் மாற்றுங்கள் என வான சாஸ்திர ஜோதிடர் ஒருவர் ஐயர் சுவாமிகளிடம் கூறினார்.
“ஸ்ரீரங்கபெருமாளின் தங்கை இந்த வைணவி அம்மன். அவளை எப்படி நாடு கடத்துவது?” என்று சிந்தித்தார் ஐயர்.
“வைணவி வேறு ஒரு ஊரில் குடி இருக்க ஆசைப்படுகிறாள் அதனால்தான் இதுபோல் பாதிப்பு நம் ஊருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் நீங்கள் கவலையடைய வேண்டாம். தைரியமாக வைணவியை வேறு ஒரு ஊருக்கு கொண்டு போய்விடுங்கள்.” என்று ஐயர் சுவாமிகளிடம் ஜோதிடர்கள் கூறினார்கள்.
ஊரின் நன்மைக்காக வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து வேறு ஊரில் வைத்துவிடும்படி தன் ஆட்களிடம் உத்தரவிட்டார் ஐயர். ஆட்களும் வைணவி சிலையை வடக்கு நோக்கி எடுத்து சென்றார்கள். பயணத்தின் போது வைணவி சிலையை எடுத்து செல்ல செல்ல அம்மன் சிலை பாரம் அதிகமானது. இதனால் பாரம் தாங்கமல் பணியாட்கள் அதிக கலைப்பு அடைந்து, அம்மன் சிலையை ஓர் இடத்தில கீழே வைத்தார்கள்.
கலைப்பு தீர்ந்த பின் வைணவி சிலையை எடுக்க முயற்சித்த போது அவர்களால் அந்த சிலையை தூக்க முடியவில்லை. வைணவி இங்கு குடியிருக்கவே விரும்புகிறாள் என்பதை உணர்ந்து, வைணவியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். வைணவி அமர்ந்த இடத்தின் பெயர் சமயபுரம் கண்ணணுர் அரண்மனை மேடு.
கோயில் உருவான கதை
கண்ணணூர் அரண்மனை என்ற பெயர் இருந்தாலும் அது காட்டுபகுதியாக இருந்தது. சமையலுக்காக அடுப்பு பற்ற வைக்க மர கட்டை எடுக்க காட்டுபகுதிக்கு வந்த ஒருவர், அந்த இடத்தில் வைணவி அம்மன் சிலையை கண்டு ஊர்மக்களிடம் கூறினார். ஊர்மக்களும் அந்த அம்மன் சிலையை ஊருக்குள் எடுத்து வர முயற்சித்தார்கள். ஆனால் சிலையை அசைக்க முடியாத காரணத்தால் அந்த இடத்திலேயெ அம்மனுக்கு பூஜை செய்தார்கள்.
விஜயநகர மன்னர் விஜயரெங்க சொக்கநாதர், தென்னாட்டின் மீது படை எடுக்க சமயபுரம் பக்கமாக வந்து கண்ணணூர் வரும் போது இருட்டிவிடுகிறது. அதனால் அங்கேயே தங்கினார். அங்கு இருந்த கண்ணணூர் அம்மனை கண்ட அரசர், “அம்மா…நான் போரில் வெற்றி பெற்றால் உனக்கு ஆலயம் கட்டுகிறேன்.” என்று வேண்டிக்கொண்டார்.
தன் படையை விட அதிக பலம் வாய்ந்த தென்னாட்டை எப்படி வெற்றி பெருவது என்ற சிந்தனையோடு இருந்தார். ஆனால் அம்மனின் மேல் அதிக நம்பிக்கை கொண்டதால் தைரியமாக போர் செய்தார். தான் எதிர் பார்த்ததை விட விரைவாக போர் செய்து வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்கு காரணம் கண்ணணூர் அம்மன்தான் என்று உறுதியாக நம்பினார். சொன்னப்படி கண்ணணூர் அம்மனுக்கு கோயிலும் கட்டினார்.
அம்மனுக்கு பிடித்த பிரசாதம்
சியமளா என்ற பெண் குழந்தைக்கு உடல் உஷ்ணத்தால் கட்டிகள் அதிகமாகி கொண்டே வந்தது. இதற்கு பல இடத்தில் வைத்தியம் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் அவளுடைய பெற்றோர்கள் மனம் கலங்கினார்கள். இதற்கு தீர்வே இல்லாமல் இருக்கிறதே என்று கவலையடைந்தார்கள். இனிமேல் எந்த வைத்தியம் செய்தாலும் தீர்வு கிடைக்காது, இன்னும் மருந்து சாப்பிட்டால் உடல் வியாதிக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் மருந்தால் இன்னும் உடல் உஷ்ணம் அதிகம் ஆகி உடல் தோல்கள் பாம்பை போல் உறிந்துக் கொண்டு வந்துவிடும், உயிருக்கே ஆபத்தாகி விடலாம் என்று மருத்துவர்கள் குழந்தைக்கு சியமளாக்கு மருந்து கொடுக்க தயங்கினார்கள்.
“இனி மருத்துவரை நம்புவதை விட தெய்வத்தை நம்புங்கள். தீராத வியாதியும் தெய்வசத்தியால் தீரும். முள்ளை முள்ளால் எடுப்பது போல் கண்ணணூர் மாரியம்மனை வணங்கினால், அந்த உஷ்ண தெய்வம் நிச்சயம் உன் மகளை காப்பாள்” என்றார்கள் தெரிந்தவர்கள். யார் மூலமாகவோ தெய்வத்தின் வாக்காக எண்ணினர் பெற்றோர். உடனே சமயபுரம் அம்மனிடம் சென்றனர். “எங்கள் மகள் பிழைத்தால், உனக்கு நீர்மோரும், பானகம், இளநீரும் தருகிறோம்.” என்று வேண்டிக் கொண்டார்கள் இதன் பிறகு சில நாட்களிலேயே சியமளா நல்ல உடல்நலம் அடைந்தாள்.
சியமளாவின் பெற்றோர்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செய்தார்கள். பக்தர்களுக்கு இளநீர், மோர், பானகத்தை கொடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டார்கள். இதன் பிறகே இந்த ஆலயத்தில் இளநீர், மோர், பானகம் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதிகள் நீங்கும். எடுக்கும் எந்த நல்ல முயற்சியும் வெற்றி பெறும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved