Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

சங்கடங்களை போக்கும் ஸ்ரீசங்கர நாராயணன்

நிரஞ்சனா 

 திருநெல்வேலியில் இருந்து 54.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சங்கரன் கோயில்.  

சங்கரநாராயணன் தோன்றிய கதை

ஒருமுறை பார்வதிதேவிக்கு, தன் கணவர் சிவபெருமான் உயர்ந்தவரா அல்லது தன் அண்ணன் ஸ்ரீமகாவிஷ்ணு உயர்ந்தவரா என்ற கேள்வி எழுந்தது. அதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளவும் விரும்பினார். “சிவனுக்கு புலிதோலும் திருவோடும்தான் சொந்தம். மயானமே அவன் இருப்பிடம். அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தார்கள் விஷ்ணுபக்தர்கள்.

“உன் அண்ணனான விஷ்ணுவை பற்றி குறை சொல்கிறோம் என்று தவறாக நினைக்க வேண்டாம். செல்வந்தனாக இருந்தாலும் குபேரனிடம் கடன் வாங்கி இன்றுவரை கடன்காரன் என்ற பெயரோடு இருப்பவர். முனிவரின் காலால் உதை வாங்கியவர். இப்படிப்பட்ட பெருமாள் நம் சிவனுக்கு இணையாவாரா?” என்றார்கள் சிவபக்தர்கள்.

இருபக்தர்களின் பேச்சை கேட்டு மேலும் குழப்பம் அடைந்தாள் பார்வதி. இவர்கள் இருவரில் யார் உயர்தோர் என்பதை அறிந்தே தீர வேண்டும், இதை அறியாமல் விடுவதாக இல்லை என்று முடிவு செய்து  புன்னைவனத்தில் பார்வதி தேவி தவம் செய்தாள்.

பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின் தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் காட்சி தந்தார்கள். “பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம்.? நாங்கள் இருவரும் சமமானவர்கள்தான். உடல் இல்லையெனில் ஆத்மாவுக்கு மதிப்பில்லை. ஆத்மா இல்லையெனில் உடலுக்கு மதிப்பில்லை. இரண்டும் சேர்ந்து இருக்கும்வரைதான் நல்லது. அதுபோல உடலும் ஆத்மாவும் போன்றதே நாங்கள். எங்கள் இருவரின் துணை உள்ளோரே வளம் பெறுவர். அதனால் உன் வீணான சந்தேகத்தை ஒழி.“ என்றார் ஈசன்.

“ஹரனும் உன் அண்ணனான இந்த ஹரியும் சம உயர்வு கொண்டவர்களே என்பதை உணர்ந்தாயா என் தங்கையே.” என்று புன்னகைத்தார் ஸ்ரீமாகவிஷ்ணு. சிவபெருமானும் ஸ்ரீமன் நாராயணனும் ஹரிஹரலிங்கமாக மாறினர். அச்சிவலிங்கத்தை வணங்கி அன்னை பார்வதிதேவி மனம் தெளிந்தாள்.

தோட்ட காவலர் மூலமாக வெளிப்பட்ட சிவலிங்கம்

பாண்டிய நாட்டை ஆண்டு வந்த உக்கிரபாண்டியன் மணலூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். இவர் சிறந்த மதுரை மீனாட்சியம்மனின் பக்தர். தன் நாட்டில் எந்த கள்வர்களாலும் ஆபத்து ஏதும் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில காட்டுப்பகுதியில் கூட காவலர்களை பணியமர்த்தி நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். அதில் புன்னை வனகாட்டை அழகான தோட்டமாக மாற்றி, “காப்பரையன்” என்ற காவலரை புன்னைதோட்டத்திற்கு காவலராக நியமித்திருந்தார். ஒருநாள் ஒரு பாம்பு, காப்பரையன் கண் முன்னால் ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது. அதை கண்ட அந்த காவலர், பாம்பை கொல்ல தன் கையில் வைத்திருந்த கோடாரியால் தாக்க முயன்று கோடாரியை வீசினார். கோடாரி குறி தவறி அங்கு இருந்த புற்று ஒன்றை குத்தி தாக்கியது. கோடாரியால் தாக்கப்பட்ட மறுவிநாடியே அந்த புற்றில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.

இதை கண்ட காப்பரையன் பதட்டம் அடைந்து நடுங்கி அரசரிடம் இவ்விஷயத்தை சொல்ல அரண்மனைக்கு விரைந்து வந்து அரசரிடம், தான் கண்ட காட்சியை கூறினார். உக்கிரபாண்டியன் தன் சேவகர்களுடன் காவலர் காப்பரையனையும் அழைத்துக்கொண்டு புன்னைதோட்டத்திற்கு வந்தார்.

காவலர் சொன்னது போல் புற்றில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது. அந்த புற்றின் அருகில் சென்று தன் காவலர்களை அந்த புற்றை மெல்ல கலைக்கச் சொன்னார் அரசர். காவலர்களும் அந்த புற்றை மெல்ல கலைத்தார்கள். அப்போது அந்த புற்றுக்குள் இருந்த ஒரு பாம்பு சரசரவென வெளியே ஒடி வந்து எங்கோ மறைந்தது. பாம்பின் மேல் கூர்மையான ஆயுதம் பட்டதால்தான் ரத்தம் வடிந்தது என்று கருதினர் காவலர்கள். எல்லோரும் திரும்பி செல்ல நினைத்தபோது காப்பரையன் அந்த பாம்பு சென்ற தடத்தை கவனித்தான். பாம்பு ஓடி மறைந்த பாதையில் அந்த பாம்பின் தடம்தான் இருந்ததே தவிர இரத்தம் சொட்ட பாம்பு ஓடியதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதனால் காப்பரையன் சந்தேகம் கொண்டு மீதி இருந்த அந்த பாம்பு புற்றை முழுவதுமாக இடித்து பார்க்க எண்ணி இடித்தான். இதை கவனித்த அரசர் காப்பரையன் என்ன செய்கிறான் என்பதை பேசாமல் கவனித்தார்.

அப்போது எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக அந்த புற்றுக்குள் இருந்து சுயம்புவாக ரத்தம் வடிந்தபடி ஓர் சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த லிங்கத்தின் மேல் கூர்மையான ஆயுதம்பட்டதால்தான் லிங்கத்தில் இருந்து ரத்தம் வடிவதை கண்ட அரசரும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்து பதறினார்கள். அப்போது வானில் இருந்து ஒரு அசரிரீ ஒலித்து.. “உக்கிரபாண்டியா… இந்த இடத்தில் நாம் இருக்கிறோம். நீ நமக்கு ஒரு கோயில் கட்டு. இந்த சிவலிங்கம் ஹரியும் ஹரனும் இணைந்த வடிவம். ஆகவே இதன் நாமம் ஸ்ரீசங்கரநாராயண லிங்கம் என்று வருங்காலம் அழைக்கட்டும்” என்று கூறி அசரிரீ மறைந்தது. உக்கிரபாண்டியன் இறைவன் உத்தரவை ஏற்று ஸ்ரீசங்கரநாராயணணுக்கு திருக்கோயில் எழுப்பினார்.   

பரிகாரம்

ராகு – கேது பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க, நாகசின்னத்தை இங்குள்ள உண்டியலில் போட்டால் தோஷம் விலகும். உடல் உபாதை உள்ளவர்கள் அந்த கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி கோயில் பிரசாதமாக கொடுக்கும் புற்றுமண்ணை நெற்றியில் தொடர்ந்து வைத்து கொண்டு வந்தால் விரைவில் உடல்நலம் பெறுகிறார்கள். சர்ப்பதோஷ ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் யோகதிசை நடந்தாலும் அந்த யோகத்தை அடைய முடியாது. அப்படியே பெற்றாலும் முழுமையான நற்பலன் கிடைக்காது. அப்படிப்பட்ட சர்ப்பதோஷ ஜாதகர் இந்த திருக்கோயிலுக்கு வந்து ஸ்ரீசங்கரநாராயணனை வணங்கி வாசனை மலர்களை கொடுத்து இறைவனை வணங்கி பிரசாதமாக கொடுக்கும் புற்றுமண்னை விபூதியில் கலந்து 48 நாள் தொடர்ந்து நெற்றியில் வைத்து வந்தால் தோஷங்கள் நீங்கி ஏற்றம் ஏற்படும்.

  © 2011  bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Jul 15 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »