கப்பல் கேப்டனுக்கு உதவிய திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமியின் தம்பி
நிரஞ்சனா
திருவனந்தபுரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வர்கலா ஸ்ரீஜனார்த்தன சுவாமி கோயில். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள்,திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபா சுவாமி, வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பெரிய சகோதரர், இவருடைய தம்பி ஸ்ரீ பத்மநாபசுவாமி. இளையவர்தான் வர்க்கலை ஸ்ரீஜனார்த்தன சுவாமி. சகோதரர்கள் மூவரின் கண்களும் ஒரே அமைப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.
வர்கலா என்கிற இந்த இடமே அமைதியின் இருப்பிடம் என்றார் நாரதமுனிவர்.
ஒளிந்துக்கொண்டு விளையாடுவதில் குழந்தைகளுக்கு மட்டும் மகிழ்ச்சியல்ல இறைவனுக்கும் இது போல் விளையாடுவதில் விருப்பம். ஒருநாள் தம்புராவை மீட்டியப்படி பாடிக் கொண்டே தன் தந்தையை பார்க்க வந்தார் நாரதர். நாரதருக்கு தெரியாமல் அவர் பின்புறமாகவே சென்றார் ஸ்ரீமகாவிஷ்ணு. தன் மகன் பின்னால் விஷ்ணு பகவான் வருவதை பார்த்த பிரம்மன், விஷ்ணுவின் காலில் விழுந்து ஆசிப் பெற்றார். அடுத்த வினாடியே விஷ்ணுபகவான் அங்கிருந்து மறைந்தார். அப்போது அங்கு இருந்த ஒன்பது முனிவர்களும், விஷ்ணுபகவான் வந்து சென்றதை கவனிக்காமல் பிரம்மன், நாரத முனிவரின் காலில்தான் விழுந்து ஆசிப் பெற்றார் என்று தவறாக புரிந்துகொண்டு, “என்ன பாவம் செய்துவிட்டீர்கள். மகன் காலில் தந்தை விழுவதா.? அது மாபெரும் குற்றம்”. என்று இன்னும் ஏதேதோ சொல்லிவிட்டார்கள்.
நாரதர் தன் ஞானத்தால் நடந்தது என்ன? என்று அறிந்து முனிவர்களிடம் தெரிவித்தார். அதை கேட்ட முனிவர்கள், “ஐயோ சரியாக புரிந்து கொள்ளாமல் பிரம்மனை அபாண்டமாக பேசிவிட்டோமே..” என்று மனம் கலங்கினார்கள். அடுத்தவர்கள் மீது அபாண்டமாக பேசியதால் இத்தனை வருட காலம் தவம் செய்த பலன் இல்லாமல் போய்விட்டதே என்ற கூறி வருந்தினர்.
“கவலை வேண்டாம் முனிவர்களே.” என்று கூறிய நாரதர் தன் கையில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து, “இதை பூமியை நோக்கி வீசுகிறேன். இது எங்கு போய் விழுகிறதோ அந்த இடம் உங்களுக்கு தவம் செய்ய ஏற்ற இடம்.” என்றார் நாரதர்.
நாரதர் தன் அங்கவஸ்திரத்தை பூமியை நோக்கி வீசினார். “வர்கலா” என்ற இடத்தில் அது விழுந்தது. அந்த இடத்தில் ஒன்பது முனிவர்களும் தவம் செய்ய துவங்கினார்கள். அப்போது ஒரு முனிவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதனால் விஷ்ணுபகவானை நினைத்து தவம் செய்தார். விஷ்ணுபகவான் தன் கையில் இருந்த சக்ராயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கினார். அந்த குளமே இன்று “ஸ்ரீ சக்கர தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது.
பாண்டிய மன்னரின் பிரம்ஹத்தி தோஷம் நீங்கிய இடம்
பாண்டிய மன்னர் ஒருவருக்கு பல பிரச்சினைகள் உண்டானது. எதனால் தனக்கு இத்தனை இன்னல்கள் என்று பிரசனம் பார்த்த போது, “உங்களை பிரம்ஹத்தி தோஷம் பிடித்திருக்கிறது. பொதுவாக அரசர்கள், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்போது அந்த அரசர்களுக்கு இப்படி ஒரு தோஷம் ஏற்படும். அதனால் நீங்கள் பல திருதலங்களுக்கு திருப்பணி செய்தும் யாத்திரை சென்றும் உங்கள் பாவத்தை போக்கிக் கொள்ளுங்கள்” என்று பிரசனத்தில் கூறப்பட்டது. பாண்டிய மன்னரும் பல ஆலயங்களுக்கு தன் பரிவாரங்களுடன் சென்றார். திருப்பணிகளை செய்து வந்தார். வர்கலா கடற்கரை பகுதிக்கு வந்த போது, அவர் மனதில் ஏதோ ஒரு புத்துணர்ச்சியும், அமைதியும் மகிழ்ச்சியும் உண்டானது. மன்னரின் மனதில் இருந்த பாரம் விலகியது போல் இருந்தது. இந்த இடத்திற்கு ஏதோ ஒரு தெய்வசக்தி இருப்பதை உணர்ந்தார் அரசர். அதனால் அன்றைய பொழுதை அங்கேயே கழித்தார்.
அன்றிரவு பாண்டிய மன்னரின் கனவில் ஸ்ரீஜனார்த்தன சுவாமி தோன்றி, “கடலின் மேல் பூக்கள் மிதக்கும். அந்த இடத்தில் என் விக்கிரகம் இருக்கிறது. அந்த விக்கிரகத்தை எடுத்து, எனக்கு இந்த ஊரில் ஆலயத்தை கட்டு.” என்றார் ஸ்ரீஜனார்த்தன சுவாமி.
கனவில் இறைவன் சொன்னது போல தன்னுடன் இருந்த பணியாளர்களிடம் கூறி மறுநாளே கடலை நோக்கி சென்று பார்த்தார். கனவில் இறைவன் கூறியது போல் கடலில் ஒரு பகுதியில் மலர்கள் மிதந்தது. அந்த இடத்தில் நீச்சல் வீரர்களை அனுப்பி விக்கிரகம் ஏதேனும் இருக்கிறதா என்று தேட சொன்னார் மன்னர். இறைவன் கூறியது போல் ஸ்ரீஜனார்த்தன சுவாமியின சிலை கிடைத்தது. அந்த சிலையை எடுத்து கரைக்கு வந்து வர்கலா என்கிற அந்த இடத்தில் அழகிய ஆலயம் கட்டினார் பாண்டிய மன்னர்.
கோயிலுக்கு பெரிய மணியை காணிக்கையாக தந்த கப்பல் கேப்டன்
ஒருநாள் அரபிக்கடலில் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் கப்பல் ஒன்று திணறியது. “புயலும் இல்லை மழையும் இல்லை. ஆனால் கப்பல் நகர மறுக்கிறதே.. இனி என்ன செய்வது.?” என்று தெரியாமல் பதறினார் அந்த கப்பலின் டச்சுக் கேப்டன். அப்போது அந்த கப்பலில் பயணம் செய்த ஒருவர், “இந்த கடற்கரையின் அருகில்தான் ஸ்ரீஜனார்தன சுவாமி கோயில் இருக்கிறது. நாம் ஸ்ரீஜனார்த்தன சுவாமியை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. நிச்சயம் அவர் நம்மை காப்பாற்றுவார்” என்றார்.
“ஆபத்தில் இருக்கும் போது தவளை கத்துவதும் பல்லியின் குரலும் இந்தியர்களாகிய உங்களுக்கு அருள்வாக்காகதான் இருக்கும்.” என்று கிண்டல் செய்தான் அந்த கப்பலில் இருந்த ஒருவன். ஆனாலும் இந்த ஆபத்தில் இருந்து தப்பினால் போதும் என்று அந்த டச்சுக்காரரான கப்பல் கேப்டன், ஸ்ரீஜனாதர்தன சுவாமியை நம்பினார். நம்பிக்கையுடன் வேண்டினார். ஆச்சரியம் நிகழ்ந்தது. நகர முடியாமல் அரபிக்கடலில் சிக்கி கொண்டு போராடிய கப்பல், அடுத்த நிமிடமே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இயல்பு நிலைக்கு வந்தது. ஆச்சரியப்பட்டார் கேப்டன். பாதுகாப்பாக துறைமுகம் வந்து சேர்ந்ததும், ஸ்ரீஜனார்த்தன சுவாமியை தரிசித்து, இந்த கோயிலுக்கு ஒரு பெரியமணியை காணிக்கையாக தந்தார். அந்த கேப்டன் தந்த பெரியமணி மூலஸ்தானத்தின் அருகில் கட்டி பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மனஅமைதி பெறவும், ஜாதகதோஷங்கள் நீங்கவும், பெரும் ஆபத்துகளில் இருந்து விடுபடவும் வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி கோயிலுக்கு சென்று ஸ்ரீ ஜனார்த்தன சுவாமியை வணங்குவோம் வளம் பெறுவோம். ♦
© 2011 bhakthiplanet.com All Rights Reserved