ஒரு மனிதனின் ஆயுள்காலம்; பகுதி 2
விஜய் கிருஷ்ணாராவ்
இதற்க்கு முன் இருந்த பிறவியில் நாம் செய்த நல்வினை – தீவினைதான் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது. இந்த ஜென்மத்தில் ஒரு மகா அயோக்கியன், பாவ – புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாதவன், அதனால் தன்னுடைய வளர்ச்சிக்காக எதையும் செய்ய துணிந்தவன், ஆனால் அவனுக்குதான் இறைவன் அமோகமான வாழ்க்கையை தந்திருக்கிறான். எத்துணை இன்பங்களை உலகில் இறைவன் வைத்தானோ அத்துணை இன்பங்களும் அவனுக்கே கிடைத்து விடுகிறது. அவனை பார்த்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? கடவுளே இல்லை என்று அவனை போலவே நீங்களும் சொல்வீர்கள்.
ஆனால் உண்மை என்ன?
அந்த அயோக்கியன் நன்றாக இருப்பதற்கு என்ன காரணம்.? அவனை போலவே மோசடி செய்தவன் அழிந்துவிட்டிருப்பான். ஆனால் இவன் மட்டும் சுகமாக இருககிறானே எப்படி?
இந்த கேள்விக்கு பதில்தான் கர்மா. அதாவது முன் ஜென்ம புண்ணியவான் அவன். முந்தைய பிறவியில் எத்தனை பேருக்கு வள்ளலாக வாரி வாரி தந்தானோ, அத்தனையும் இந்த பிறவியில் அவனுக்கு இறைவனால் திருப்பி தரப்படுகிறது. எத்தனை யாகங்கள் செய்தானோ? எத்தனை கோயிலுக்கு திருப்பணி செய்தானோ? எத்தனை பேருக்கு அன்னதானம் செய்தானோ? அவன்தான் இந்த ஜென்மத்தில், சென்ற பிறவியில், தான் தந்ததை திரும்பப் பெறுகிறான்.
அவனின் சென்ற ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் என்கிற முதலீட்டுக்கு, இன்றைய பிறவியில் இராஜயோகம் என்கிற வட்டி கிடைக்கிறது.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தால் நீங்கள் தரும் காசோலை செல்லுபடியாகும். அப்படிதான் இது. அவன் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாமல் அயோக்கியதனம் செய்கின்றான் என்பது வேறு விஷயம். அவன் கணக்கில் புண்ணியம் இருக்கிறது, அதை திரும்ப பெறுகிறேன். அதுதான் உண்மை.
ஆயுளும் அப்படிதான்.
ஒரு உயிர் தாயின் கர்ப்பத்தினுள் நுழையும் முன்னரே அந்த உயிர் தொண்ணுறு ஆண்டுகள் பூமியில் இருக்கட்டும் என்று இறைவனால் கட்டளையிட்டப்பட்டு அனுப்பப்டுகிறது. அந்த தொண்ணுறு வயது வரை எப்படி அந்த ஆத்மா பூமியில் வாழ வேண்டும் என்பதையும் அந்த ஆத்மாவின் முன்ஜென்ம பாவ புண்ணிய விவகாரங்கள் என்ன என்பதையும் அதற்கென்று இருக்கும் எமலோக தேவர்கள் (கடவுள் அல்ல) என்கிற அதிகாரம் படைத்தவர்கள் ஒரு ஆத்மாவை வழி நடத்துகிறார்கள். அந்த ஆத்மா தொண்ணுறு ஆண்டுகள் பூமியில் இருக்க வேண்டும் ஆனால் தொண்ணுறு ஆண்டுகள் அந்த ஆத்மா யார் யாருக்கெல்லாம குழந்தையாக பிறக்க வேண்டும் எத்தனை பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதற்கேற்ப பிறக்க வைக்கப்படுகிறது.
அதன்படி, பிறந்த நாற்பதாவது ஆண்டில் ஒரு விபத்தில் இறந்துவிட வேண்டும் என விதி இருக்கிறது என வைத்துக்கொள்வோம், அதன்படியே நாற்பது வயதில் உடல் இறந்து விடுகிறது. ஆனால் இறைவன் தந்த உயிர் பூமியில் தொண்ணுறு ஆண்டுகள் அல்லவா?, அதன்படி மிச்சம் இருக்கிற ஆண்டுகள், பல பெற்றோர்களுக்கு மாறி மாறி பிறந்து இறக்கிறது.
இப்படியே ஒருவரின் முன்ஜென்மவினைப்படி கொடிய வினைகள் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் வாரிசாக அந்த ஆத்மா பிறக்கிறது. இறக்கிறது. கடைசியில் மீண்டும் இறைவனிடமே ஆத்மா சென்றடைகிறது. சிலருக்கு ஏழு வயது குழந்தை, பண்ணிரெண்டு வயது குழந்தைகள் எல்லாம் அற்ப ஆயுளில் முடிந்து போவதற்கு இதுவே காரணம்.
இப்படிப்பட்ட கொடுமையான விஷயங்கள் நடக்காமல் இருக்க ஒரே வழி, நேர்மை – ஒழுக்கம் – அன்பு – மரியதை – யாவும் இறைவன் செயல் என்கிற நம்பிக்கை வேண்டும். தெய்வ சிந்தனை எப்போதும் வேண்டும். நமக்கு ஒருவன் கெடுதல் செய்தாலும் அவனை மன்னித்துவிடுவது நல்லது. பழி வாங்குவதை கனவிலும் நினைக்கக்கூடாது. இவைதான் நல்ல வாழ்க்கை அமைவதற்கு வழிகள்.
ஒருவனை தண்டிப்பதற்கு இறைவன் இருக்கிறான், சட்டம் இருக்கிறது. நாமே தண்டனை தருவதாக நினைத்தால், பழி வாங்க துணிந்தால், எந்த ஜென்மத்திலும் தீவினை விடாது. வாழ்வின் வெற்றி – தோல்விகளுக்கு முன்ஜென்மம் வினைதான் காரணம். இதுவே சத்தியமான உண்மை. அதற்குதான் நம் பெரியவர்கள் அழகாக சொன்னார்கள்,
“எதெல்லாம் உனக்கு நடககக் கூடாது என்று நீ நினைக்கிறாயோ அதையெல்லாம் நீ பிறருக்கு செய்யாதே.”♦
© 2011 bhakthiplanet.com All Rights Reserved