ஒப்பில்லா வாழ்வு தரும் ஒப்பிலியப்பன்
நிரஞ்சனா
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீஒப்பிலியப்பன் கோயில் சிறப்பை இன்று பார்ப்போம். ஸ்ரீமன் நாராயணனிடம் துளசிதேவி, “மகாலஷ்மியை தங்கள் மார்பில் சுமக்கிறீர்கள். அதுபோல் எனக்கும் உங்கள் இதயத்தில் இடம் வேண்டும்” என்றாள். “என்னுள்ளே இருக்கும் உனக்கு, எந்த இடத்தில் இடம் தருவது என நீயே சொல்” என்று துளசியை சமாதானம் படுத்தினார் பெருமாள். இருந்தாலும் துளசி மனம் சமாதானம் அடையவி்ல்லை.இனி எவ்வளவுதான் துளசியிடம் எடுத்துச் சொன்னாலும் துளசி கேட்கும் மனநிலையில் இல்லை என்று நினைத்து,
“நீ மார்க்கண்டய முனிவருக்கு மகளாக வளர்ந்து, பிறகு நேரம் வரும் போது, உன்னை நான் திருமணம் புரிகிறேன். மூலிகையாக உருப்பெற்று நீங்கா புகழ் பெறுவாய். எப்போதும் நீ என்னுடனே இருக்கும் வகையில் என் பக்தர்கள் என்னை வணங்கும் போது உன்னை மாலையாக செய்து என் மார்பில் அணிவிப்பார்கள். நான் இருக்கும் இடமெல்லாம் என் கழுத்தில் மாலையாக நீ இருப்பாய் துளசி.” என்று அருளினார்.
மார்க்கண்டய முனிவர் காவேரிக்கரையில் தவம் செய்து கொண்டு இருந்தார். முனிவர், இறைவனுக்கு மலர் பறித்து அர்ச்சனை செய்வது வழக்கம். அந்த நந்தவனத்தில் அழகான பெண் குழந்தை முனிவரை நோக்கி தன் பிஞ்சு கரங்களை நீட்டி அழைத்தது. இதை கண்ட முனிவர் இந்த அழகான குழந்தை யாருடையது என்று சிந்தித்தார். யாராவது குழந்தையை தவற விட்டார்களா? என அங்கும் இங்குமாக தேடினார். குழந்தைக்கு யாரும் உரிமை கொண்டாடததால் இந்த குழந்தையை நாமே வளக்கலாம். காரணம் இல்லாமலா இறைவன் இந்த குழந்தையை நம் கண்களில் படும்படி வைத்திருப்பார். எல்லாம் நன்மைக்காகதான் இருக்கும் என்று கருதி குழந்தையை தன் குடிலுக்கு எடுத்து சென்று, தன் குழந்தையை போல் சீராட்டி வளர்த்தார்.
குழந்தைக்கு பூர்வ ஜென்மத்தின் பெயரே சூட்டினார். ஆம்.. “துளசி” என்று அவர் அறியாமலே இந்த பெயர் அவர் மனதில் தோன்றியதால் அந்த பெயரையே சூட்டி வளர்த்தார் மார்க்கண்டய முனிவர். துளசி பருவம் அடைந்தாள். இருந்தாலும் குழந்தையை போலவே செல்லமாக வளர்த்து வந்ததால் துளசி சமையல் எதுவும் கற்காமல் தந்தையின் அரவனைப்பிலேயே இருந்தாள். தன் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும். சிவனின் அருளால் காலனை விரட்டி உலக புகழ் பெற்ற நாம், நம் புகழுக்கு இணையாக ஒரு மணமகனை பார்த்து துளசிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் மார்க்கண்டயர் குடிசைக்கு ஒரு முதிய வயது முனிவர் வந்தார். தனக்கு உணவு படைக்கும்மாறு கேட்டு கொண்டார். உணவு கொண்டு வரும்படி துளசியிடம் சொன்னார் மார்க்கண்டய முனிவர். உணவு பரிமார வந்த துளசியை கண்ட முதியவர்,“அடடா.. என்ன அழகு. இவள் இந்திரலோகத்து பெண்ணா? அல்லது பரந்தாமனின் தங்கை பார்வதியின் தோழிகளில் ஒருத்தியா?” என்று வர்ணித்தார். இதை கண்ட துளசியின் தந்தை சற்று அச்சம் அடைந்தார்.
“சுவாமி.. நீங்கள் பசிக்கு உணவு கேட்டீர்கள். உணவை தந்தோம். சாப்பிட்டுவிட்டு கிளம்புங்கள்“ என்றார்.
“நான் சாப்பிட வேண்டும் என்றால் உன் மகளை எனக்கு திருமணம் செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் பட்டினி கிடந்து சாவேன். ஒரு சந்யாசியை கொன்ற பாவம் உன் வம்சத்தை கெடுக்கும்“ என்றார் கிழ முனி.
“சந்யாசி என்று தாங்களே கூறுகிறீர்கள். அப்படி இருக்கும் போது ஒரு சந்யாசிக்கு எப்படி என் மகளை திருமணம் செய்து தர முடியும்.? வாழ போகும் இடத்தில் என் மகளுக்கு மாமியார்-மாமனார் போன்றவர்கள் இருந்தால்தானே என் மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அது மட்டும் அல்லாமல் நீங்கள் கிழவர். உங்களுக்கு எப்படி திருமணம் செய்து தர முடியும்.? என்றார் மார்க்கண்டய முனிவர்.
“என்னை கிழவன் என்று சொல்கிறாய். இருக்கட்டும் இருக்கட்டும். ஆனால் நீ உன் மகளை எனக்கு திருமணம் செய்து தரவில்லை என்றால் என்னை போல் உன் மகளையும் கிழவியாக்கி திருமணம் செய்து கொள்கிறேன். அப்போது உனக்கு மகிழ்ச்சியாக இருக்குமா?” என்றார் கிழ முனிவர்.
“ஐயா.. நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். என் மகளுக்கு சமையல் செய்ய தெரியாது. அப்படியே செய்தாலும் சரியாக உப்பிட்டு சமைக்கக் கூட தெரியாது” என்றார் துளசியின் தந்தை.
“அவ்வளவுதானே… உணவில் உப்பில்லாமல் நான் சாப்பிடுகிறேன். உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு” என்றார் கிழவர். இதை கேட்ட துளசி, கண் கலங்கினாள்.
“இது என்ன கொடுமை? இந்த கிழவனையா நான் திருமணம் செய்ய வேண்டும். பெருமாளே… உன் பக்தையான எனக்கு இப்படி ஒரு சோதனையா? இனி நான் வாழ்வதை விட சாவதே மேல்” என்று கலங்கினாள் துளசி.
துளசியின் கண்ணீரை கண்ட கிழவர், இனியும் இவளை சோதிக்க கூடாது என எண்ணி, “துளசி… நான் யார் என்று தெரியவில்லையா.? மார்க்கண்டயா… எல்லாம் அறிந்த முனிவனான உனக்கும் நான் யார் என்று தெரியவில்லையா.? என்னை நன்றாக பார்.” என்று கூறி கிழ உருவத்தில் இருந்து பெருமாளாக சுய உருவம் கொண்டு காட்சி தந்தார். துளசிக்கு தன் முன் ஜென்ம நினைவு வந்தது. பெருமாளின் காலில் விழுந்து வணங்கினாள்.
மார்கண்டயா…துளசியை இப்போது எனக்கு திருமணம் செய்து தர சம்மதமா? என்றார். “பெருமாளே… நான் பாக்கியவான்.” என்று கூறி துளசியை பெருமாளுக்கு திருமணம் செய்து வைத்து, “என் மருமகனே… நீ யாருக்கும் ஒப்பில்லாதவன்.” என்று கூறி மகிழ்ந்தார் மார்க்கண்டய முனிவர்.
“இன்று முதல் உன் மகளான என் மனைவி துளசிக்காக உணவில் நான் உப்பை விலக்கி கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பிரசாதமாக உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்.” என்று அருளினார் ஸ்ரீஒப்பிலியப்ப பெருமாள்.இதை கேட்ட துளசி மிக்க மகிழ்ச்சியடைந்தாள்.
மார்க்கண்டய முனிவரிடம் பெருமாள், பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெண் கேட்டு, ஐப்பசியில் அதே திருவோண நட்சத்திரத்தில் துளசியை திருமணம் செய்து கொண்டார். அதனால் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் சன்னதியில் சாம்பிரானி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் ஸ்ரீமகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஒப்பிலியப்பனை வணங்கினால் தடைபட்ட திருமணம் விரைவில் நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், செல்வம் பெருகும்.♦
© 2011 bhakthiplanet.com All Rights Reserved