ஸ்ரீமகாலஷ்மி மும்பையில் விரும்பி வாசம் செய்வது ஏன்?
நிரஞ்சனா
“இந்த ஊரிலேயே பிறந்து இந்த ஊரிலேயே வளர்ந்த எங்ககிட்ட பணம் இல்லை. ஆனா சொந்த ஊரைவிட்டு வந்த உங்க கிட்ட மட்டும் எப்படி சேடு எங்க ஊருக்கே கடன் தர அளவுக்கு கட்டு கட்டா பணம் இருக்கு” இது ஒரு படத்தில் மார்வாடி சேட்டிடம் நடிகர் ஒருவர் பேசிய வசனம். இதை சிந்தித்து பார்த்தால் உண்மையாகதானே இருக்கிறது.
எதனால் வடஇந்தியர்களிடம் பணம் கொட்டி கிடக்கிறது என்றால் காரணம் ஸ்ரீமகாலஷ்மியின் பேரருள் அவர்களுக்கு இருக்கிறது. அவள் விரும்பி வாசம் செய்யும் இடம் கூட மும்பை என்கிறது புராணம்.
மும்பையை ஸ்ரீமகாலஷ்மி விரும்பிய காரணம் என்ன?
ஒரு சமயம் ஸ்ரீமகாலஷ்மி கந்தல் புடவை கட்டி கொண்டு தலைகூட சரியாக வாராமல், பார்க்கவே அருவெறுப்பான வேடத்தில் ஒரு பிச்சைகாரியை போல் ஒவ்வோரு ஊராக சென்று கொண்டு இருந்தாள். ஒருநாட்டின் எல்லையில் கால் வைத்ததும் அங்கு இருக்கும் முதல் வீட்டில், “தாயே பசிக்கிறது.. உணவு தாருங்கள்” என்று கேட்டாள். பிச்சைகாரியை விட மோசமாக துர்நாற்றம் வீசும் அளவுக்கு இருக்கிறாளே என்று கேவலமாக நினைத்து, “வெள்ளிகிழமை அதுவுமா இப்படியா வந்து நீற்பாய். சீ போ மூதேவி” என்று அந்த வீட்டு பெண்மணி கூறினாள். இப்படியே பல ஊர்களிலும் துரத்தினார்கள். மும்பை எல்லையில் கால் வைத்ததும் அங்கு ஒரு வீடு இருந்தது. வழக்கம் போல மகாலஷ்மி, “தாயே பசிக்கிறது. உணவு இருந்தால் தாருங்கள்” என்று தழுதழுக்கும் குரலில் அழைத்தாள்.
அந்த வீட்டின் பெண்மணி வெளியே வந்து பார்த்து, “பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாய் நீ சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருக்கும் போல் தெரிகிறது வீட்டுக்குள் வந்து சாப்பிடு” என்றாள் அந்த வீட்டு பெண்.
“வேண்டாம் அம்மா. நான் இன்று தீட்டு. வீட்டுக்குள் வரக்கூடாது. என்றாள் ஸ்ரீமகாலஷ்மி.
“எல்லா பெண்களுக்கும் வரும் இயற்கையான விஷயம்தான் இது. கவலைபடாதே. நீ வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிடுவதால் என் வீடு ஒன்றும் இடிந்து விடாது.” என்று ஸ்ரீமகாலஷ்மியை சமாதனாப்படுத்தி வீட்டுக்குள் உட்கார வைத்து சாப்பாடு போட்டாள். பிறகு தன்னிடம் இருந்த புடவை சிலவற்றையும் தந்தாள்.
“திருமகள் மகிழ்ந்தாள். “அம்மா..நான் எத்தனையோ ஊர்களுக்கு சென்று இருக்கிறேன். எல்லோரும் என் உருவத்தை பார்த்து விரட்டினார்களே தவிர, இவள் உதவி கேட்டு வந்த பெண் ஆயிற்றே என்று யாரும் பரிதாபப்படவில்லை. ஆனால் இந்த ஊரில் இருக்கும் நீயோ என் மேல் எத்தனை கருனை காட்டியிருக்கிறாய். நான் யார் தெரியுமா?” என்ற ஸ்ரீமகாலஷ்மி அந்த வீட்டு பெண்ணுக்கு தன் உண்மையான உருவத்தில் தோன்றினாள். நற்குணம் உள்ள உனக்காக இந்த ஊரிலேயே நிரந்தரமாக தங்குகிறேன்” என்று கூறி ஸ்ரீமகாலஷ்மி மும்பையிலேயே தங்கிவிட்டதாக புராண சம்பவம் சொல்கிறது.
ஸ்ரீமகாலஷ்மி ஆலயம் மும்பை கடற்கரை ஓட்டி அமைந்திருக்கிறது. இங்கே கோயில் கட்டுவதற்கு முன்பு அதாவது 1785 ஆம் ஆண்டு, இந்த இடத்தில் இருந்து வொர்லி பகுதியுடன் இணைப்பதற்காக கடற்கரையோரம் ஒரு தடுப்பு சுவர் கட்,டி அதனையோட்டி சாலை அமைக்க தீர்மானித்தனர் ஆங்கிலேயேர்.
இதற்கான பணி ஒப்பந்தத்தை, ராம்ஜி ஷிவ்ஜி என்பவரிடம் ஒப்படைத்தனர். தடுப்பு சுவர் கட்டும் பணி சுறுசுறுப்பாக நடந்து வந்த சமயத்தில் சுவராக அமைக்கப்பட்ட கற்கள் கடல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டது. இப்படியே ஓவ்வொரு முறையும் இவ்வாறே நடந்ததால், பல ஆயிரம் நஷ்டம் அடைந்தார் ராம்ஜி. அத்துடன் மன உலைச்சலுக்கும் ஆளானார் ராம்ஜி.
“அரபிக்கடலில் சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகியோரின் சிலைகள் இருக்கிறது. அவற்றை கொண்டு வந்து கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தால், உன் கவலை தீரும்.” என்று ஸ்ரீமகாலஷ்மி ராம்ஜி கனவில் கூறினாள். மறுநாளே தன் பணியாட்களை அழைத்து கொண்டு அரபிக்கடலில் வலைவீசி தேடினார். கனவில் சொன்னது போல எந்த சிலையும் கிடைக்கவில்லை. காலையில் ஆரம்பித்த கடலில் சிலை தேடும் பணி, சூரியன் மேற்கை நோக்கி இறங்கி கொண்டு வந்தான். இருந்தாலும் நம்பிக்கையுடன் முயற்சித்து கொண்டு இருந்தார்கள் பணியாளர்கள். அப்போது இவ்வளவு நேரம் கிடைக்காத மூன்று தெய்வங்களும் மறைந்து வேடிக்கை காட்டும் விளையாட்டை நிறுத்திக் கொண்டு, தோன்றினார்கள். சிலைகளை கண்ட ராம்ஜியும் வேலையாட்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
அந்த மூன்று சிலைகளை எடுத்து கொண்டு மும்பை கடற்கரை அருகே ஆலயம் கட்டி அந்த ஆலயத்தில் மூன்று சிலைகளையும் பிரதிஷ்டை செய்து வணங்கினார். இதன் பிறகு தடுப்பு சுவர் கட்டும் போது கடல் அலைகள் அந்த கற்களை நெருங்க முடியாமல் திரும்பி சென்றது. தடுப்பு சுவர் கட்டி சாலை அமைத்தார் ராம்ஜி ஷிவ்ஜி.
நம் ஊர் அர்ச்சனை பொருட்கள் போல அல்லாமல், இனிப்பு, தாமரைப் பூ, சிவப்பு, பச்சை கலரில் “சுனரி” எனற துணி வகையை ஒரு தட்டில் வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி கொண்டு முப்பெரும் தேவிகளை தாய் வீட்டு சீதனமாக நினைத்து தந்தாள் செல்வ வளம் கிடைக்கும் என்று அந்த ஊர் மக்கள் நம்பிக்கை. ஒன்பது தடவை இந்த தேவிகளை தரிசித்து இந்த அர்ச்சனை பொருட்களை தந்து வந்தால், பரதேசியாக இருப்பவர்களும் கோடிஸ்வரர் ஆகும் வரத்தை முப்பெரும் தேவிகளும் நமக்கு தருவார்கள் என்கிறது ஸ்தல புராணம். உழைப்பால் உயர்ந்து கோடிஸ்வரர் வரிசையில் இருப்பவர்களும் இந்த திருக்கோயிலுக்கு வந்து வணங்கி தேவிகளுக்கு நன்றி தெரிவித்து ஆசி பெற்று செல்கிறார்கள். ஸ்ரீமகாகாளி, ஸ்ரீமகாசரஸ்வதி, ஸ்ரீமகாலஷ்மி என்கிற முப்பெரும் தேவிகள் இருந்தாலும் ஸ்ரீமகாலஷ்மி ஆலயம் என்றுதான் அழைக்கிறார்கள் இந்த ஆலயத்தை.
நாமும் மும்பை ஸ்ரீமகாலஷ்மியை தரிசித்து எல்லா வளங்களையும் பெற்றிட வேண்டும். அதற்கு முதலில் ஸ்ரீமகாலஷ்மி நம்மை அழைக்க வேண்டும். நிச்சயம் அழைப்பாள்.