வீரசிவாஜி வம்சத்தின் இன்னல்களை தீர்த்த தஞ்சாவூர் பங்காரு காமாட்சி.
நிரஞ்சனா
ஒருசமயம் பிரம்மன் காஞ்சி தலத்திற்கு வந்து காமாட்சி அம்மனை தரிசிக்க சென்றார். அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காமாட்க்ஷி ஆலயத்தில் இருக்கும் காயத்தரி மண்டபத்தை மிதித்து விடுகிறார். இதனால் பிரம்மனின் கண்பார்வை குறைந்துவிடுகிறது. திரும்ப சரியான பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சரஸ்வதிதேவியிடம் கேட்டார்.
“மறுபடியும் காஞ்சி தலத்திற்கே சென்று கண்பார்வை கிடைக்க வேண்டுங்கள். நிச்சயம் காமாட்க்ஷி மனம் இறங்கி உங்களுக்கு கண் பார்வையை கொடுப்பார்.” என்றாள் சரஸ்வதி.
சரஸ்வதி தேவி கூறியது போல் பிரம்மன் காஞ்சி தலம் வந்து காமாட்சி அம்மனை வேண்டி தவம் செய்தார். அன்னை காமாட்சி பொன் போல் ஜொலிக்கும் மஞ்சல் நிற ஆடையில் காட்சி தந்தாள். அன்னையை பார்த்த அடுத்த நிமிடமே பிரம்மனுக்கு பார்வை தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் பிரம்மன் மகிழ்ந்து தங்கத்தால் அன்னையை உருவாக்கி வணங்கினார். பிரம்மனின் கைவண்ணத்தால் உருவானதுதான் பங்காரு காமாட்சி அம்மன். பங்காரு என்றால் தெலுங்கில் தங்கம் என்று பொருள்.
ஆற்காட்டு நவாபின் படைகள் கோயில்கள் மீது அடிக்கடி படையெடுத்து தாக்கி செல்வங்களை சூறையாடின. இதனால் ஆற்காட்டுக்கு அருகில் உள்ள காஞ்சி நகரமும் கோயில்களின் செல்வங்களும் சூறையாடப்படக்கூடும் என்கிற அச்சத்தில் 1746-ம் ஆண்டு அன்றைய காஞ்சி சங்காரச்சாரியார் சுவாமிகள், பிரம்மனால் உருவாக்கப்பட்ட பங்காரு காமாட்சியின் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தென்னகம் நோக்கி பயணித்தார். பங்காரு காமாட்சியின் சிலை மிகவும் கனமாக இருந்த காரணத்தால் அதை ஒரு படுக்கையில் மறைத்து வைத்து சென்றார். பங்காரு காமாட்க்ஷியின் சிலை தங்கத்தால் ஆனது என்று நவாபின் படைகளுக்கு தெரியாமல் இருப்பதற்காக அந்த தங்கச்சிலைக்கு புனுகு சாத்தி தங்கசிலையை கருப்பு நிறமாக மாற்றி ஊர் ஊராக சென்று தங்கினார். உடையார்பாளையம் ஜமீன்தார் காஞ்சி கோயிலுக்கு அவ்வப்போது உணவு பொருட்களும் விறகு போன்ற பொருட்களையும் அனுப்பி வைப்பார்கள். சங்காரசாரியாருக்கு உடையார்பாளையத்து ஜமீனின் ஞாபகம் வந்தது. உடனே பங்காரு காமாட்சியை பாதுகாக்க அவரிடம் யோசனை கேட்டார் சுவாமிகள். உடனே ஜமீன்தார் இதை பற்றி அனக்குடி மிராசுதாரரிடம் கூறினார். அந்த மிராசுதாரர், “என் நண்பரான தஞ்சையை ஆண்டு வரும் பிரதாபசிம்ஹன் சிறந்த வீரர். ஹைதராபாத் நிஜாம் படைகளை விரட்டிய மாவீரர். அவரிடம் உதவிகேட்டால் நிச்சயம் அடைக்கலம் தருவார்.” என்று சுவாமிகளிடம் கூறி தஞ்சைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகளை செய்தார் மிராசுதாரர்.
ஆனால் ஆங்கிலேயருக்கும், முகமதியர்களுக்கும் தெரிந்துவிடாமல் இருக்க அனக்குடி, நாகூர், சிக்கல், திருவாரூர், விஜயபுரம் என்று சுற்றி சுற்றி பங்காரு காமாட்க்ஷியை பத்திரமாக சங்கராச்சாரியார் சுவாமிகள் எடுத்து கொண்டு தஞ்சையை அடைந்தார். காமாட்சி அம்மனின் தீவிர பக்தரான தஞ்சை அரசர் பிரதாபசிம்ஹன், அம்மனுக்கு ஆலயம் எழுப்பி அந்த ஆலயத்திலேயே பங்காரு காமாட்சியை பிரதிஷ்டை செய்தார்.
சரபோஜி வம்சத்தில் இருந்த பிரச்சினையை தீர்த்த பங்காரு காமாட்சி
1798-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தஞ்சை சரபோஜி அரசர் கோயிலுக்கு திருப்பணி செய்தார். இராஜகோபுரமும் கட்டினார். என்று மராட்டிய கல்வெட்டுக்கள் சான்றாக சொல்கின்றன. மாவீரர் சிவாஜி மகள் வயிற்று பேத்தியுமான காமாட்சிஅம்மாள்பாயி என்பவருக்கு சில இன்னல்கள் இருந்தது. அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடரிடம் கேட்டார். “கருனையின் சிகரமானவள் அன்னை காமாட்சி. அதிலும் பங்காரு காமாட்சியை வணங்கினால் உங்கள் வாழ்க்கை மாசில்லா தங்கம் போல் அமையும். வெள்ளிகிழமை அன்று விடியற்காலையில் அம்மனுக்கு குங்கும அஷ்டோத்திர அர்ச்சனை செய்யுங்கள். அத்துடன் வயிற்றை குளிர்ச்சியாக்கும் தயிர் சாதத்தை 82 பக்தர்களுக்கு தாருங்கள். உங்கள் இன்னல்கள் நீங்கி மனம் குளிர்ச்சி பெறும்.” என்றார் ஜோதிடர். ஜோதிடர் கூறியது போல் காமாட்சி அம்மாள்பாயி தஞ்சாவூர் பங்காரு காமாட்சி வணங்கி பரிகாரங்களை செய்தார். செய்த சில நாட்களிலேயே அவர் பிரச்சினைகள் தீர்ந்தது.
கல்விஅறிவை வழங்கிய பங்காரு காமாட்க்ஷி
சியாமா சாஸ்திரி தினமும் பங்காரு காமாட்சியம்மனை வணங்கி மனம் லயித்து பாடல்களை பாடுவார். இதனால் அம்மனின் ஆசி சியாமாவுக்கு பரிபூரணமாகியது. கணிதம், மாந்திரீகம், சோதிடம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றார். அத்துடன் அவர் சொல்வது அப்படியே நடக்கவும் செய்தது. இதனால் ஊர்மக்கள் அருள்வாக்கு கேட்பார்கள் சியாமாவிடம். சியாமா தெலுங்கில் அம்மன் மீது வாராளி ராகத்தில் பாடல்களை இயற்றி உள்ளார்.
“காமாட்சி பங்காரு காமாட்சி
நன்னுப் பரோபவே”
என்று தொடங்கும் இந்த பாடல் தெலுங்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
கா என்றால் கலைமகளையும் மா என்றால் திருமகளையும் தன் இருகண்களாக வைத்திருப்பதால் காமாட்சி என்ற பெயர் பெற்றாள். பங்காரு என்றால் தெலுங்கில் பொன் என்று அர்த்தம். அதனால் தஞ்சாவூரில் இருக்கும் பங்காரு காமாட்சியம்மனை வணங்கினால் பொன் போல் வாழ்க்கை ஜொலி ஜொலிக்கும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved