Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

வறுமை வழிந்த வீட்டில் குபேரன் குடிபுகுந்தான்: குங்குலியக்கலய நாயனார் வரலாறு

  அறுபத்து மூவர் வரலாறு

 பகுதி 9  

நிரஞ்சனா

சென்ற பகுதியை படிக்க

திருக்கடவூரில் கலயனார் என்பவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அதனாலேயே தினமும் சிவபெருமான் ஆலயத்தில் நாள் தவறாமல் குங்குலிய தூபம் போடுவதை சிவபணியாக கடைபிடித்து வந்தார். கலயனாராக இருந்தவரை ஊர் மக்கள் குங்குலியக்கலயனார் என்று அழைத்தார்கள். தன்னிடம் அன்பாக இருப்பவரிடம் வம்பாக திருவிளையாடல் புரிந்து பக்தியை சோதிப்பது அய்யன் சிவபெருமானுக்கு பிடித்தமான ஒன்று. இதில் குங்குலியக்கலயனார் மட்டும் விதிவிலக்கா என்ன.? அதனால் ஈசன், கலயனாரை சோதிக்க ஆரம்பித்தார். குடும்பஸ்தர்களுக்கு சோதனை பணத்தால்தான் ஏற்படும் என்பதால் பண பிரச்சினையை கொடுத்தார் கலயனாருக்கு ஈசன்.

திடீர் பணப் பிரச்சினை ஏற்பட்டதால் என்ன செய்வது? – ஏது செய்வது? என்று சிந்தித்தார். அந்த சிந்தனை குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்பதில் அல்ல அச்சிந்தனை, அப்பன் சிவனுக்கு இனி எவ்வாறு தினமும் குங்குலியச் சேவை செய்வது? என்பதே அவர் கவலை. அதனால் தன் பெயரில் இருந்த நிலத்தை விற்று அந்த பணத்தில் தினமும் சிவலாயத்திற்கு குங்குலியத்தால் வாசனை புகையை பரவச்செய்தார். நிலம் விற்ற பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தன் குடும்பத்திற்காக என்று செலவு செய்யவில்லை. சில மாதங்களில் அத்தனை பணமும் சிவசேவைக்கே குங்குலிய புகையாக கரைந்தது. கலயனாரின் மனைவியும் குழந்தைகளும் பசியால் வாடினார்கள்.

தன் குழந்தை பசி மயக்கத்தில் துவண்டு கிடப்பதை பொருக்க முடியாமல் கலயனாரின் மனைவி, தன்னுடைய திருமாங்கல்யத்தை கழற்றி, “இதை விற்று நெல் வாங்கி வாருங்கள்” என்றாள்.

திருமாங்கல்யத்தை பெற்று கொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார் கலயனார். அப்போது அவர் கண்களில் சிவாலயம் தெரிந்தது. “இன்று சோமவாரம் ஆயிற்றே… பணம் இல்லாமல் குங்குலிய சேவையை எப்படி செய்வது?” என்ற சிந்தனையில் இருந்த போது அவர் எதிரில் குங்குலிய வியபாரி வந்து கொண்டு இருந்தார். குங்குலிய வியபாரியை கண்ட கலயனார் மகிழ்ச்சியடைந்தார். அந்த குங்குலிய வியபாரியிடம், “அய்யா…உங்களிடம் இருக்கும் குங்குலியம் முழுவதையும் என்னிடம் தாருங்கள். அதற்கு ஈடாக எம்மிடம் பொன் நகை ஒன்று இருக்கிறது.” என்றார் கலயனார். அதன்படி திருமாங்கல்யத்தை கொடுத்து வியபாரியிடம் இருந்து குங்குலிய மூட்டையை வாங்கி மகிழ்ச்சியுடன் திருக்கோயில் சென்றார்.

குங்குலிய மூட்டையை ஒர் இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, அதில் இருந்து நிறைய குங்குலியத்தை எடுத்து கோயில் முழுவதும் வாசனையை புகையால் பரவச் செய்தார். அங்கு இருந்த ஒருவர், “என்ன கலயனாரே.. சாம்பிராணி புகை போடுவது போல் குங்குலியத்தை இப்படியா போடுவது” என்றார். “சிவதொண்டு செய்வதில் கணக்கு பார்க்க கூடாதய்யா” என்ற கலயனார், தன் சிவதொண்டில் மெய் மறந்து இருந்தார். சிவ தொண்டு செய்து முடிந்ததும் தன் வீட்டின் நினைவு வந்தது. “இரவாகிவிட்டதே.. அய்யோ நெல் வாங்க மனைவி கொடுத்த திருமாங்கல்யத்தை விற்று குங்குலியம் வாங்கி விட்டேனே.. வீட்டுக்கு சென்றால் மனைவி திட்டுவாளே” என்ற கவலையால் சிவன் கோயிலிலேயே உறங்கிவிட்டார் கலயனார்

அதே சமயம் கலயனாரின் வீட்டில்….

கலயனாரின் மனைவி, தன் கணவர் இன்னும் வீடு வந்து சேரததால் கவலை அடைந்தாள். இதுவரை இப்படி அவர் இரவு நேரத்தில் வெளியே எங்கும் தங்கியதில்லையே… அவருக்கு என்ன ஆனதோ என்று பயந்து போனாள். கவலை ஒரு பக்கம் பசி மறுபக்கம் வாட்டி வதைத்து உறங்கிவிட்டாள். அது உறக்கமா மயக்கமா என்று வறுமையை அனுபவித்தோர் அறிவர்.

அப்போது அவளுக்கு ஒரு கனவு. கனவில் வந்தது கணவன். அவன் அருகில் இறைவன். “பெண்ணே கலங்காதே. உன் கணவனுக்கு எந்த தீங்கும் இல்லை. இதோ பார் நம் கோயிலில்தான் உறங்கிக்கொண்டிருக்கிறான். நம் ஆலயத்தில் உன் கணவன் குங்குலிய திருப்பணி இன்று செய்தான். வறுமையை துச்சமாக மதித்து எம் மீது கொண்ட பக்தியே பெரிது என நிருபித்தான். இனி இவன் குங்குலியக்கலய நாயனார் என அழைக்ப்படுவான். அவன் சேவைக்கு எமது அன்பு பரிசு. கண் திறந்து பார்.” என்று இறைவன், கலயனாரின் மனைவியின் கனவில் கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு விழித்து பார்த்த கலயனாரின் மனைவி நம்ப முடியாமல் திகைத்தாள். அவள் வீட்டில் நெல் மூட்டைகளும், பொன் நகைகளும் குவிந்துக் கிடந்தது. வறுமை வீடு – வசந்த மாளிகையாக ஜொலித்தது.

திருக்கோயிலில்…

உறங்கிக் கொண்டிருந்த குங்குலியக்கலய நாயனாரை யாரோ பலமாக தட்டி எழுப்பி சென்றது போல உணர்ந்து, கண் விழித்து பார்த்தார். தட்டி எழுப்பியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் மனைவியின் நினைவு வந்தது. “சரி அவள் என்ன திட்டினாலும் பரவாயில்லை. என் அன்புக்குரியவள் தானே திட்டுகிறாள். அதனால் என்ன குறைந்துவிடப் போகிறோம். இறைவன் இருக்கிறான். பொறுமையாக இருக்கலாம்.“ என்ற எண்ணத்தில் வீட்டை நோக்கி நடந்தார்.

தன்னுடைய தெருவில் வீட்டை தேடினார். இது என்ன மாயம்.? நம் தெருதானே இது.? ஆனால் நம் வீட்டை காணவில்லையே. நாம் உறக்கத்தில் நடக்கிறோமா? என்று யோசித்தபடி திரும்பி நடந்தார். அப்போது ஒரு மாளிகையில் இருந்து குங்குலியகலய நாயனாரின் குழந்தையும் – மனைவியும் உறவினர்களும் ஓடி வந்தார்கள்.

“நில்லுங்கள். எங்கே போகிறீர்கள். வீட்டுக்குள் வாருங்கள்.” என்று மனைவி அழைத்தாள்.

“நம் வீடு எங்கே.?” என்றார் குழப்பத்துடன் நாயனார்.

“இதோ இதுதான் அப்பா” என்று தன் குழந்தை காட்டிய வீட்டை பார்த்து பிரமித்தார். நேற்றுவரை வறுமை வழிந்த வீட்டில் இன்று குபேரன் குடிபுகுந்தான். எப்படி இது சாத்தியம் – என்ன நடந்தது? என்று யோசித்தார். நடந்ததை மனைவியும் உறவினர்களும் விவரித்தார்கள். வசதிகள் வந்தாலும் உறவுகள் கிடைத்தாலும் தன் சிவ தொண்டில் தொடர்ந்து வந்தார் குங்குலியக்கலய நாயனார்.

இது எப்படி சாத்தியம் என்று சிலருக்கு கேள்வி எழலாம். மாயாஜாலவித்தை தெரிந்தவர் மா கொட்டையை வைத்து ஒரு நிமிடத்திலேயெ மாமரத்தை வளர்த்து காட்டுகிறார். தாஜ்மகாலையே மறைத்து காட்டுகிறேன் என்று ஒரு மேஜிக் நிபுணர் சொல்கிறார். ரெயிலேயே ஒரு நிமிடத்தில் மறைத்துகாட்டி அதிசயிக்க வைக்கிறார்கள். இப்படி இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களே அதிசயங்களை வித்தைகளை செய்து காட்டும்போது இறைவன் ஏன் குங்குலியக்கலய நாயனார் வாழ்க்கையில் இப்படி ஒரு அதிசயத்தை செய்திருக்க மாட்டார் என்று என்னதான் தோன்றுகிறது நமக்கு.

குங்குலியக்கலய நாயனாரின் புகழ் ஊர் முழுவதும் தெரிந்தது. அப்போது திருப்பனந்தாள் என்ற ஊரில் ஒரு பெண்மணிக்காக சிவலிங்கம் கொஞ்சம் சாய்ந்திருந்தது. அந்த லிங்கத்தை நிமிர்த்த நினைத்தார் சோழ மன்னர். ஆனால் முடியவில்லை. மன்னருக்கு உதவினார் குங்குலியக்கலய நாயனார். அது எப்படி?

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 16 2011. Filed under அறுபத்து மூவர் வரலாறு, ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »