வம்பாக வந்த தோஷங்கள் தீர்க்கும் கடம்பவனேஸ்வரர்
நிரஞ்சனா
கடம்பந்துறை என்ற இத்தலம் இன்று குளித்தலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் இந்த கோயில் இருக்கிறது.
காசிக்கு போனால் பாவம் தொலையும் என்பது போல் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் காசிக்கு வந்த புண்ணியம் கிடைக்கும் என்கிறது ஸ்தலபுராணம். ஆம்.. காசியில் இருக்கும் சிவாலயம் வடக்கு நோக்கி அமைந்திருப்பது போன்று, இந்த ஆலயமும் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதனால் இந்த திருக்கோயில் தட்சிணகாசி என்ற பெயரும் பெற்றிருக்கிறது.
இந்த கோயிலில் இருக்கும் லிங்கம் பல நூற்றாண்டுகளுக்கு பழமையானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த கோயில் உருவாக காரணமாக இருந்த புராண சம்பவத்தை பார்ப்போம்.
பிரம்மன், தன்னுடைய படைக்கும் தொழிலில் சலிப்படைந்தார். யாராருக்கு எந்த பிறப்பு என்று பாவ புண்ணியம் கணக்கு பார்த்து பார்த்து சலித்து விட்டது. இதனால் சிவபெருமானிடம் சென்று, “நான் உங்களுடனே மற்ற சிவகணங்கள் போல இந்த கைலாயத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்கு படைக்கும் தொழில் வேண்டாம்.” என்று மனவருத்தத்துடன் கூறினார்.
“உன் மனம் பக்குவம் அடைய நீ திருகடம்பந்துறைக்கு சென்று நீராடி, என்னையும் அபிஷேகம் செய்து வா. உன் மனம் அமைதியடையும். அத்துடன் நீ விரும்பியது போல் என்னுள் வந்தடைவாய்.” என்றார் இறைவன்.
பிரம்மனுக்காக தற்காலிகமாக திருகடம்பந்துறையில் கடம்பவனேஸ்வர லிங்கமாக காட்சி கொடுத்தார் சிவபெருமான். பல வருடங்கள் பிரம்மன் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அமைதி அடைந்தார். சிவபெருமான் அங்கு தோன்றினார்.
“நீ விரும்பிய படி என்னுடன் எப்போதும் இருப்பாய். உன் மனம் அமைதியடையும்.” என்று பிரம்மனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான். “அய்யனே..எனக்காக தற்காலிக லிங்கமாக காட்சி தந்த தாங்கள் இனி இவ்விடத்திலேயே நிரந்தரமாக தங்க வேண்டும்.” என்று கேட்டு கொண்டார் பிரம்மன்.
“அப்படியே ஆகட்டும். நீயே நமக்கு இங்கே ஒரு ஆலயம் எழுப்பு.” என்றார் சிவபெருமான். பிரம்மனும் உடனே பிரம்ம தீர்த்தத்தை உருவாக்கி ஆலயப்பணியை தொடங்கி சிறப்பாக ஆலயத்தை கட்டினார்.
இந்த கோயிலுக்கு வந்த பயனால் சப்தமாதர்களின் தோஷம் நீங்கியது. அப்படி என்ன தோஷம் அது?
சிவனை நினைத்து தவம் செய்து அதிக சக்தியை பெற்றான் தூம்ரலோசன். இதனால் அவனின் அட்டகாசம் தலை தூக்கியது. இவனின் தொல்லை தாங்காமல் துர்கையிடம் முறையிட்டார்கள் முனிவர்களும், தேவர்களும். போர்களம் வந்து நின்றாள் துர்க்கை. துர்க்கைக்கு துணை நின்றார்கள் சப்தமாதர்கள். அசுரர்கள் துர்க்கையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறி ஒடினார்கள். ஆனால் அசுரர்களை விரட்டி கொண்டே சென்றார்கள் சப்தமாதர்கள். அசுரர்கள் காத்தியாயன முனிவர் ஆசிரமத்திற்குள் சென்று ஒளிந்துக் கொண்டார்கள். இதை அறியாமல் தவத்தில் இருந்தார் காத்தியாயன முனிவர்.
விரட்டி கொண்டு வந்த சப்தமாதர்கள், காத்தியாயன முனிவரை கண்டு, அசுரர்களில் ஒருவன்தான் முனிவர் வேடத்தில் இருக்கிறான் என்று தவறாக எண்ணி முனிவரை கொன்று விடுகிறார்கள். முனிவரை கொன்ற பாவத்தால் சப்தமாதர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. திண்டாடி போனார்கள். இதனால் பல கோயில்களுக்கு சென்றும் பலன் கிடைக்கவில்லை. தங்களுக்கு வந்த இன்னலை அகத்திய முனிவரிடம் சொன்னார்கள் மாதர்கள்.
“திருகடம்பந்துறைக்கு சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி கடம்பவனேஸ்வரரை வணங்கினால் உங்கள் தோஷம் நீங்கும்.” என்றார் அகத்திய முனிவர். முனிவரின் வாக்குபடி சப்தமாதர்கள் திருகடம்பந்துறைக்கு வந்து வழிப்பட்டு தங்கள் தோஷத்தை அகற்றி கொண்டார்கள். அத்துடன் இந்த கோயிலின் சிறப்பு தெரிந்து அந்த கோயிலிலேயே தங்கி விட்டார்கள் என்கிறது ஸ்தலபுராணம்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு திருச்சி நவாபின் மந்திரியாக இருந்த பாகசாலையைச் சார்ந்த சரவண முதலியாருக்கு சில பிரச்சனைகள் உண்டானது. அந்த பிரச்சினை சுமுகமாக தீர்ந்தால் திருக்கடம்பந்துறை ஆலயத்திற்கு திருப்பணி செய்து அத்துடன் கோயிலுக்கு தேர், ஆபரணங்கள் காணிக்கை தருவதாக வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த சிவபெருமான், சரவண முதலியாரின் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைத்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த முதலியார், திருவாடுதுறை ஆதீன மடாதிபதியின் நட்பை பெற்று,தன் வேண்டுதலை நிறைவேற்றினார்.இந்த கடம்பாவனேஸ்வரரையும் –அன்னை முற்றிலாமுலையம்மையையும் தரிசித்தால் வம்பாக வந்த தோஷங்கள் நீங்கும். ஏற்றம் ஏற்படும்.
“சிற்றிடையும் இருகரமும் சேவடியும் மலர் முகமும்
பற்றிடுவோர் வினையொழிக்கும் பாங்கருணைத் திருநோக்கும்
உற்றடியார் பணி கடம்பவனமேவும் ஒரு தேவி
முற்றிலா முலையம்மை முளரிமலர் அடி போற்றி”
© 2011 bhakthiplanet.com All Rights Reserved