வம்சத்தை வாட்டும் சாபத்திற்கு பரிகார கோயில்
நிரஞ்சனா
நம் முன்னோர்களுக்கு சாபம் ஏற்பட்டு இருந்தால் அவர்களின் வம்சத்தில் பிறப்பவர்களுக்கு சாபம் தொடரும். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் ஆலயம் இதற்கு பரிகார கோயிலாக இருக்கிறது. இஷ்வாகு வம்சத்தை சார்ந்த பரத கண்டத்தையாண்ட பகீரதன் என்ற அரசர், நீதியை நிலைநாட்டி பல நன்மைகளை தன் நாட்டு மக்களுக்கு செய்து வந்தார்.
பகீரதனால் வந்த கங்கை நதி
இந்த பகீரதன்தான் கங்கை, பூமிக்கு வர காரணமாய் இருந்தவர். முன்னொரு சமயத்தில் சகரன் என்ற அரசர் அசுவமேத யாகம் செய்தார். இவரின் யாகத்தை பார்த்து பயந்த இந்திரன், இந்த யாகத்தின் பயனால் எங்கே தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி அந்த யாகத்தை நிறுத்த எண்ணி யாகத்திற்காக வைத்திருந்த எந்த தோஷமும் இல்லாத குதிரையை பாதாளலோகத்தில் கபிலமுனிவரின் அருகில் கட்டிவிட்டு சென்றான் இந்திரன்.
யாக குதிரையை காணாது அதை தேடி சென்ற சகரனின் புத்திரர்கள், குதிரை கபிலமுனிவரின் அருகில் கட்டப்பட்டு இருப்பதை கண்டு, முனிவர்தான் குதிரையை கடத்தி வந்திருப்பார் என்று தவறாக புரிந்து கொண்ட சகரனின் புத்திரர்கள் முனிவரை கொல்வதற்காக நெருங்கினார்கள். தவம் கலைந்ததால் கோபமாக கண் திறந்தார் முனிவர். முனிவரின் உக்கிர பார்வையால் சகரனின் புத்திரர்கள் சாம்பலானார்கள். நடந்த விபரீதம் அறிந்து ஓடோடி வந்தார் சகரன். முனிவரின் கோபம் இன்னும் குறையவில்லை. “சகரா… உன் புத்திரர்களின் சாம்பலை கங்கை நதியில் கரைத்தால்தான் அவர்களுக்கு முக்தி ஏற்படும்.” என்றார் கபிலமுனிவர்.
சகரனால் கங்கையை தேட இயலவில்லை. சகரனின் வம்சத்தில் வந்தவர்தான் பகீரதன். சாபத்தால் தன் முன்னோர்கள் முக்தி அடையாமல் அவதியுறுவதை அறிந்து பிரம்மனை வேண்டி தவம் இருந்தார். தவத்தை ஏற்ற பிரம்மன், கங்கையை பூலோகத்திற்கு அனுப்பி வைக்க சிவபெருமானிடம் கேட்டுக்கொண்டார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் துன்பங்களை கடந்து தன் தவத்தில் பகீரதன் உறுதியாக இருப்பதை கண்ட சிவபெருமான், தன் சிரசில் அமர்ந்திருக்கும் கங்கையை பூமிக்கு அனுப்பினார். கட்டுக்கடங்காத பெரும் நதியாக வேகமெடுத்து ஓடி வரும் கங்கையை நல்ல வழி அமைத்து பக்குவமாக பூமிக்கு அழைத்து வந்த பகீரதன், அந்த கங்கை நதியில் தம் முன்னோர்களின் அஸ்தியை கரைத்து அவர்களுக்கு முக்தி அளி்த்தார். பகீரதனின் பெரும் முயற்ச்சியால் கங்கை பூமிக்கு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்கிற பெயரும் பெற்றாள்.
இப்படி பல நன்மைகளும் யாராளும் சாதிக்க முடியாததை சாதித்த அரசர் பகீரதன், ஒருசமயம் நாரதமுனிவரின் சாபத்திற்கு ஆட்பட்டார். சாபத்தின் காரணமாக பகீரதன், பல இன்னல்களுக்கு ஆளானார். தன்னுடைய முயற்சிகளில் தோல்வியை சந்தித்தார். மீண்டும் நற்பெயருடன் வாழவும் நாரதரின் சாபத்தில் இருந்து விடுபடவும் என்ன செய்ய வேண்டும் என்று தவசிமுனிவர்களிடம் கேட்டார் பகீரதன்.
“முயல் வேகத்தில் கெட்ட நேரம் வந்தால், நத்தை வேகத்தில்தான் விடிவுகாலம் பிறக்கும். தாங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள் 1008 சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டால் நாரத சாபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.” என்றார் முனிவர்கள். தனது நாடு முழுவதும் தீர்த்த யாத்திரை சென்று பல இடங்களில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு வரும் போது புரசுமரங்கள் நிறைந்திருந்த புரசைக்காட்டிலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பகீரதன். லிங்கத்திற்கு தன் கமண்டலத்தில் வைத்திருந்த, கங்கை நீரால் அபிஷேகம் செய்தார். இங்கேதான் அவருக்கு அற்புதம் நிகழ்ந்தது. பல ஊர்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து கங்கை நீரால் அபிஷேகம் செய்த பலன், நிறைவாக இந்த புரசைவனத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது லிங்கத்தில் இருந்து அசரிரீயாக இறைவனின் குரல் ஒலித்தது. “பகீரதா… உன் வழிபாட்டை ஏற்றோம். நாரத முனிவரால் ஏற்பட்ட சாபம் உனக்கு நீங்கியது. கங்கை நீரால் அபிஷேகம் செய்ததால் நாம் இங்கே கங்காதரேஸ்வரராக இருப்போம். ஒரு கிணறு உருவாக்கி நீ கொண்டு வந்த கங்கை தீர்த்தத்தை அதிலே விடு. உன் புகழ் சொல்ல கங்கை இங்கேயும் இருப்பாள்” என்று இறைவன் அருளினார். புரசுமரங்கள் சூழ்ந்த காட்டில் ஆலயத்தை எழுப்பினார் பகீரதன். பின் வந்த காலத்தில், அரசர் தொண்டைமான் திருப்பதி,திருமுக்கூடல் போன்ற ஆலயங்களுக்கு திருப்பணிகளை செய்யும்போது, புரசுகாட்டில் சிவன் கோயில் இருப்பதை கேள்விப்பட்டு புரசுகாட்டை அழித்து மக்களை குடியேற்றினார் தொண்டைமான். இந்த பகுதி இன்று புரசைவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
திருமணம் பாக்கியம் தரும் கங்காதரேஸ்வரர்
வேதநிதி என்ற பெண்ணுக்கு திருமண வயதை தாண்டியது. வரன் வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தள்ளிகொண்டே போனது. இதனால் வேதநிதியின் பெற்றோர் கவலையடைந்தார்கள். மகளின் திருமணத்தை பார்க்காமலேயே மரணம் அடைந்து விடுவோமே என்று அஞ்சினார்கள். ஒருநாள் வேதநிதியின் பெரியம்மா வேதநிதியிடம், ”நீ பிரதோஷ நாளில் கங்காதரேஸ்வரர்ருக்கு தேன் அபிஷேகம் செய். நிச்சயம் திருமணம் பாக்கியம் ஏற்படும்.” என்றாள். இரண்டு பிரதோஷ தினதன்று இறைவனுக்கு அபிஷேகம் செய்தாள். இதன் பலனாக இவளின் வசதியை விட அதிக வசதி கொண்ட வரன் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
இத்திருக்கோயில் திருமண தடை, முன்னோர்களுக்கு ஏற்பட்ட சாபம், எதிரிகளால் தொல்லை ஆகிய இம்மூன்றுக்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக இருக்கிறது. ஜாதகதோஷத்தால் இன்னல்களுக்கு ஆட்பட்டவர்களும் பிரதோஷம் அன்று இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். ♦
© 2011 bhakthiplanet.com All Rights Reserved