Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

முருகனை வணங்கினால் நோய் இல்லை;சிவன்மலை – குமரப்பெருமான்

நிரஞ்சனா

காங்கேயம்- திருப்பூர் நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கிறது சிவன்மலை குமரப்பெருமான் ஆலயம்.

சிவன்மலை உருவான கதை

தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர புதல்வர்களாலும் பூலோக மக்களுக்கு மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானிடம் முனிவர்களும் பக்தர்களும் முறையிட்டார்கள். அசுரர்களின் உலோகத்தலான கோட்டைகளை அழிக்க சிவபெருமான் பிரமாண்ட தேர் உருவாக்கி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு போரிடும்போது வில்லாக இருந்து மேருமலையின் ஒரு பாகம் பூமியில் விழுந்தது. அதுவே சிவன்மலை என்று அழைக்கப்படுகிறது.

அகத்திய முனிவரால் இந்த பகுதிக்கு வந்த முருகன்

அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருக பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்து சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான்.   

நோய்க்கு மருந்து முருகனே என்றார் கௌதம மகரிஷி

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். “சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.” என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

1717-ம் ஆண்டு முதல் முருகனின் மகிமையை அறிந்தார்கள்.

சிவன்மலை கிராமத்தில் முருகன் கோயில் இருப்பதை கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற தனவந்தர்கள் சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் முருகனுக்காக திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள். 1717-ம் ஆண்டு சர்க்கரை மன்றாடியார் வம்சத்தை சேர்ந்த ஒருவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சல் அடைந்தார். அந்த இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்தால் சிவன்மலையில் தேர் வருவதற்கு பாதை அமைத்து தருவதாக வேண்டினார். பக்தர்களை காண விரும்பிய முருகன் அந்த பக்தனின் நியாயமான பிராத்தனைக்கு செவி சாய்த்தார். அவர் கஷ்டங்கள் தீர்ந்தது. வேண்டிய படி முருகனின் தேர் வீதி உலா வர சிவன்மலையில் பாதை அமைத்தார் அந்த பக்தர்.

வெண்குஷ்டத்தை போக்கிய முருகன்

வள்ளியாத்தாள் என்ற பெண்ணின் மகன் விசுவநாதன் வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டான். இதற்கு நிறைய வைத்தியம் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. திக்கற்றவனுக்கு தெய்வம்தான் துணை என்பதால் வள்ளியாத்தாள், சிவன்மலை முருகனை பற்றி அறிந்து தன் மகனை அழைத்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்று முருகனை வணங்கி அர்ச்சனை செய்தாள். இதன் பலனாக சில மாதங்களிலேயே தெரிந்தது. ஆம்… விசுவநாதனின் வெண்குஷ்டம் நோய் நீங்கியது. இதனால் மகிழ்ந்து,

ஐயா சிவமலைவாழ் ஆண்டவனே பன்னிரண்டு

கையாஎன் சேய்விசுவின் காலதனில்-மெய்யாக

வந்த வெண்குட்டமதை மாற்றிக் கருணையது

தந்தவனே நின் தாள் சரண்

இப்படி பாடல் மூலமாக சிவன்மலை முருகனை போற்றினாள் வள்ளியாத்தாள். சிவன்மலை குமரப்பெருமானை வணங்கினால் தீராத வியாதிகளை தீர்ப்பான் சிவகுமரன்.

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 28 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முருகன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »