தன்னுடைய கோயிலுக்கு தானே பெயர் வைத்தான் முருகன்.திருப்போரூர் கந்தசாமிகோயில்
நிரஞ்சனா
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார். திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்.? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று மனதில் பல சந்தேக குழப்பங்கள் ஏற்பட்டது சிதம்பர சுவாமிகளுக்கு.
இதனால் மதுரைக்கு சென்று மீனாட்சியம்மனை வேண்டி 45 நாள் கடும் தவம் இருந்தார் சிதம்பர சுவாமிகள். அத்துடன் “கலிவெண்பா” பாடினார். இதை கேட்டு மகிழ்ந்து அவர் தவத்தை ஏற்று அன்னை மீனாட்சி காட்சி தந்து, “தேவையில்லாமல் மன குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். முருகன் உன் தவத்தை ஏற்றுதான் உன் கனவில் காட்சி தந்தான். நீ திருப்போரூருக்கு செல். அங்குதான் அகத்திய முனிவர் முருகபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றார்.
அத்துடன் அலைமகள் அவ்விடத்தில் தவம் செய்து அவருக்கு இருந்த சாபத்தை நீங்கி திருமாலுடன் இணைந்தார். இவ்வாறான சிறப்பு வாய்ந்த இடத்தில் முருகனும் அவருடைய தேவிகளும் மண்ணுக்குள் மறைந்திருக்கிறார்கள். அவர்களை பூமியில் இருந்து எடுத்து அந்த இடத்தில் கோயில் கட்டு” என்றாள் அன்னை மீனாட்சி.
அன்னை அருளியதை போன்று உடனே திருப்போரூருக்கு சென்று பல இடங்களில் சிலையை தேடினார். அன்னை கூறியது போல் ஒரு இடத்தில் முருகபெருமானும் அவருடன் வள்ளி – தேவானை சிலையாக தோன்றினார்கள். அந்த இடத்திலேயே ஆலயத்தை கட்டும் பணியை தொடங்க நினைத்தார். ஆனால் தன்னிடம் அத்தனை பணவசதி இல்லை. அப்படி இருக்கும் போது அன்னை மீனாட்சி தன்னிடம் இப்படி ஒரு திருப்பணிப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரே என்று சிந்தனையில் இருக்கும் போது, திண்டிவனத்தை அடுத்து கிளியனூரிலிருந்து ஒர் அம்மையார், பொன் ஒன்றை எடுத்து வந்து, “சுவாமி நீங்கள் கோயில் கட்டுவதாக கேள்விபட்டேன். என்னுடைய சிறு காணிக்கை.” என்று சிதம்பர சுவாமிகளிடம தந்தார்.
மறுநாளே சென்னை பாளைத்தா செட்டியார் என்பவர் இரண்டு பை நிறைய வராகன்களை திருப்பணிக்காக சுவாமிகளிடம் கொடுத்தார். இதுபோல் இறைவனின் சக்தியால் பலர் சிதம்பர சுவாமிகளுக்கு உதவ முன் வந்தார்கள். ஆலயத்தை நினைத்தது போல் சிறப்பாக கட்டி முடித்ததும் கோயிலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது, ஒரு அழகான பாலகன் அந்த இடத்திற்கு வந்து, “என்ன சாமி தீவிரமான யோசனையோ? முருகா, கந்தா, வடிவேலா, என்று என்ன பெயர் வைக்கலாம் இந்த கோயிலுக்கு என்ற சிந்தனையா.?” என்று அந்த சிறுவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
“தன் மனதில் நினைப்பதை இவன் எப்படி சரியாக சொல்கிறான்?” என்று ஆச்சரியப்பட்டார்.
“சாமீ… நா ஒரு யோசனை சொல்லட்டுமா.?” என்றான் சிறுவன்.
“தாராளமாக சொல்லுப்பா.” என்றார் சுவாமிகள்.
“என் பேரு கந்தன். உங்க பேரு சிதம்பர சாமி. அதனாலே நம்ம ரெண்டு பேருடைய பெயரையும் சேர்த்து, இந்த கோயிலுக்கு “கந்தசாமி” அப்படின்னு பெயர் வைக்கலாம். அதுதான் எனக்கு பிடிச்ச பெயர்.” என்ற சொல்லி விட்டு கோயிலுக்குள் ஓடினான் சிறுவன். அவனை தொடர்ந்து சென்றார் சிதம்பர சுவாமிகள். அந்த சிறுவன் கருவறையில் கால் வைத்தவுடன் அப்படியே மறைந்தான். இதை சுவாமிகளும் மற்றவர்களும் கண்டு திடுகிட்டு அதிசயித்து போனார்கள். தன்னுடைய கோயிலுக்கு தானே பெயர் வைத்தான் முருகன் என்று மகிழ்ந்தார் சுவாமிகள்.
இந்த ஸ்தலத்தில் இரண்டு சக்தி வாய்ந்த இரு சக்கரங்களையும் பிரதிஷ்டை செய்தார் சிதம்பர சுவாமிகள். இந்த இரு சக்கரங்களுக்கு சக்தி அதிகம்.
முனனொரு காலத்தில் விருதாசலத்தில் வீரவலபன் என்பவர் இருந்தார். எந்த வியபாரம் செய்தாலும் நஷ்டம் உண்டானது. என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினார். இதே நிலை நீடித்தால் தற்கொலை செய்வதை விட வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்த முடிவை தன் மனைவியிடமும் கூறினார். இதை கேட்ட அவர் மனைவி மிகவும் வருந்தினாள்.
பெயரில் வீரத்தை வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறாரே என்று அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம் சொல்லி அழுதாள். அதில் ஒரு பெண்மணி, “400 வருடங்களுக்கு முன்பு நம் ஊரில் தவம் செய்த சிதம்பர சுவாமி என்பவர் தன் சக்தியால் உருவாக்கிய தெய்வீக சக்கரங்கள் கந்தசாமி கோயிலுக்குள் இருக்கிறது. அந்த கோயிலுக்கு நீங்கள் சென்று அந்த சக்கரங்களுக்கு அபிஷேகம் செய்தால், நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்று அனுபவத்தில் உணர்ந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் ஏன் இந்த பரிகாரத்தை செய்து பார்க்க கூடாது?” என்றாள் அந்த பெண்மணி.
இதை கேட்ட வீரவலப்பன் மனைவிக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. தன் கணவரை அழைத்து கொண்டு திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சிதம்பர சுவாமிகள் பிரதிஷ்டை செய்த இரு சக்கரங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தார்கள்.
இதன் நற்பலனை சில மாதங்களிலேயே தெரிந்தது. வீரவலபன் செய்த வியபாரத்தில் கூட்டு சேர புதிய ஒப்பந்தம போட வந்தார் ஒரு நண்பர். அந்த நபருடன் வீரவலபனும் இணைந்து நஷ்டத்தில் இருந்த வியபாரத்தை சரி செய்து புதிய வளர்ச்சியை அடைந்தார்கள். நல்ல ஏற்றத்தையும் மகிழ்ச்சியான மாற்றத்தையும் தந்தது கந்தசாமியின் அருளால்தான் என்பதை உறுதியாக நம்பினார்கள் அந்த தம்பதிகள். அறுபடை வீடுகளையும் தரிசித்த புண்ணியத்தை திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று வந்தால் பெற்று விடலாம் என்பது சிதம்பர சுவாமிகளின் அருள்வாக்கு.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved