Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ஏற்றத்தை தரும் வனசாஸ்தா

நிரஞ்சனா

திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் பாங்கோடு என்ற இடத்தில் சாஸ்தா நகரில் ஒரு விலங்கு ஒன்றின் மேல் அமர்ந்திருக்கிறார். ஆம்.. சாஸ்தா பொதுவாக புலி மீது அமர்ந்திருப்பதைதான் பார்த்திருக்கிறோம் ஆனால் இநத வனசாஸ்தா குதிரை மேல் அமர்ந்திருக்கிறார் அதன் காரணத்தை பார்ப்போம்.

திருவிதாங்கூர் நாட்டின் அரசர் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா, ஒருசமயம் குதிரையில் நகர்வலம் வந்துக் கொண்டு இருந்தார். உடன் வந்தவர்களுடன் பேசி கொண்டே வந்தாலும் ஏதோ காரணத்தால், இல்லை இல்லை… ஏதோ காரணம் என்று சொல்வதற்கு பதிலாக, தெய்வ அனுகிரகத்தால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  

வழி தவறி வெகு தூரம் வந்த காரணத்தால் ஊர் திரும்ப வழி தெரியாமல் திணறினார். அப்போது ஒரு பாலத்தை கண்டார். அந்த பாலத்தின் வழியாக செல்ல முயன்ற போது மன்னரின் குதிரை அந்த பாலத்தில் பயணிக்க மறுத்து அப்படியே நின்றது. எவ்வளவோ அதட்டியும் அந்த குதிரை பாலத்தை நோக்கி செல்லவில்லை. பொதுவாக குதிரைக்கு ஒரு குணம் இருக்கிறது. அதை நம் கட்டளைக்கு பணிய வைக்க முதலில் அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். அப்போதுதான் அந்த குதிரை தன் எஜமானுக்கு கட்டுபட வேண்டும் என விரும்பும். அதைவிடுத்து அந்த குதிரையை ஆரம்பத்திலிருந்து அதட்டினால் யார் பேச்சையும் கேட்காது. தன் போக்கில்தான் போகும்.

அதனால்தான் ஒருவிஷயத்தில் பிடிவாதமாக இருப்பவர்களை குதிரை கொம்பாக இருக்கிறானே என்பார்கள். மன்னரும் இப்படி பிடிவாதம் பிடித்த குதிரையை இனி நம் வழிக்கு கொண்டு செல்ல முடியாது என்று முடிவு செய்து அதன் போக்கிலேயே விட்டார் அரசர்.

அந்த குதிரை வேறு வழியாக சென்று ஒரு சிலையின் அருகே நின்றது. அது ஒரு காடு. சிலையை கண்ட ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா அந்த சிலையை எடுத்து பார்த்தார். அது எந்த கடவுளின் சிலை என்றே தெரியவில்லை. இருந்தாலும் எல்லாம் நன்மைக்குதான், காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்ற எண்ணத்துடன் அந்த சிலையை எடுத்துக் கொண்டு குதிரை மேல் அமர்ந்து கொண்டார். அப்போது அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. மன்னரின் கையில் இருந்த அந்த சிலையின் கண்களில் இருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அந்த ஒளி வட்டமாக டார்ச்லைட் ஓளியை போன்று தெரிந்தது. இதை கண்ட மன்னர் முதலில் பயந்தார். பிறகு இது இறைவனின் செயல் என்பதை உணர்ந்தார்.

சிலையின் கண்களில் இருந்து வெளிப்பட்ட அந்த ஒளி ஒரு திசையை நோக்கி சென்றது. அந்த ஒளி எந்த திசையில் பாய்கிறதோ அந்த வழியிலேயே குதிரையும் சென்று கொண்டு இருந்தது. அந்த ஒளி திருவிதாங்கூருக்கு வழிகாட்டி கொண்டே வந்தது. அரசரின் அரண்மனைக்கு வந்ததும் சிலையின் கண்களில் தென்பட்ட ஒளி மறைந்தது.

இச்சிலை தெய்வசக்தி படைத்தது. இது எந்த தெய்வத்தின் சிலை என்பதை அறிய தேவ பிரச்னம் நடத்திக் அருள் கேட்டார்.

“இந்த சிலை இருந்த இடத்தில் அதாவது, பல யுகங்களுக்கு முன்னதாக அந்த இடத்தில் குதிரை மீது வனசாஸ்தா அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கி வந்தார். அந்த வனசாஸ்தா சனி தோஷத்தை போக்கும் ஆற்றல் படைத்தவர். உங்கள் ஜாதகப்படி சனிஸ்வரால் பாதிப்பு ஏற்பட இருக்கிறது. அதை போக்கதான் உங்களுக்கு சாஸ்தாவின் சிலை கிடைத்திருக்கிறது. இந்த சாஸ்தா வனசாஸ்தா என்பதால்  இயற்கை சூழ்நிலையில்தான் ஆலயத்தை கட்ட வேண்டும்.” என்று தேவ பிரச்னத்தில் தெரிவிக்கப்பட்டது.  

தேவ பிரச்னத்தில் அருள் சொன்னது போல் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா, மேற் கூரை இல்லாமல் நான்கு மூலைகளிலும் இடையிலும் கல் தூண்கள் அமைக்கப்பட்டு, ஒரு பீடத்தில் குதிரை மேல் அமர்ந்திருக்கும் வனசாஸ்தா விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த வனசாஸ்தாவை வணங்கினால் சனி தோஷம் இருந்தாலும் நீங்கும். இதனால் இந்த திருக்கோயிலுக்கு சனி கிழமைகளில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அத்துடன் சனீஸ்வரரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தால், எப்படி தீபச்சுடரின் அருகில் சென்றால் பூச்சிகள் பஸ்பமாகி விடுகிறதோ அதுபோல் சனிஸ்வரர் தரும் பெரிய பாதகத்தை தடுக்க முடியும் என்கிறது ஸ்தலபுராணம்.  

இந்த ஆலயத்தின் விசேஷம், வனசாஸ்தாவுக்கு சந்தனகாப்பு செய்வதுதான். தினமும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறி மகிழ்ச்சியுடன் வனசாஸ்தாவின் மேனியை குளிர்விக்க சந்தனகாப்பு செய்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி விடுகிறார்கள். ♦

 

 

© 2011  bhakthiplanet.com   All Rights Reserved

Posted by on Jun 4 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »