ஸ்ரீஇராமருக்கு உதவிய மானாமதுரை சோமநாதர்
நிரஞ்சனா
மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50கி.மீ.தொலைவில் மானாமதுரை என்ற தலம் அமைந்துள்ளது. இங்கு சோமநாதர் திருகோயில் உள்ளது.
முனிவர்கள் தவம் செய்ய சிறந்த இடத்தை தேடி கொண்டு வந்தார்கள். எந்த இடமும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. இப்படியே தேடி தேடி சென்றதில், மிக பிரமாண்ட வில்வ மரங்கள் படர்ந்து விரிந்து இருந்த பகுதிக்கு வந்தார்கள். வில்வ இலையின் நறுமனமும் காற்றில் தென்றலாய் வீசியது. “அடடா… இத்தனை வில்வ மரங்களா? சிவனே மகிழ்ந்து இந்த இடத்தில் தவம் செய்கிறாரோ?“ என்று மகிழ்ந்த முனிவர்கள், அந்த இடத்திலேயே தவம் செய்ய ஆரம்பித்தார்கள்.
பல வருடங்கள் அந்த இடத்தில் முனிவர்கள் தவம் செய்ததால் ஈசன் மகிழ்ந்து, உலகமே அதிரும்படியாக பாதாளலோகத்தில் இருந்து லிங்க வடிவில் வெளிப்பட்டார். பாதாளத்தை பிளந்து பூலோகத்தில் சிவலிங்கம் வந்திருப்பதை கண்ட முனிவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அந்த லிங்கத்தை வைத்து பூஜிக்க தொடங்கினார்கள்.
இராமருக்கு அகத்தியரின் ஆலோசனை
இராவணனிடம் இருந்து எப்படி சீதையை மீட்பது என்று வழி தெரியாமல் ஸ்ரீராமசந்திரர் சிந்தித்து கொண்டு இருந்தார். இதற்கு இராவணனை பற்றி நன்கு அறிந்த அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார். “குலவி தன் குட்டி குலவியின் உணவுக்கு, வெட்டுகிளியின் சிறகுகளை நீக்கி உயிரோடு அதை தன் குட்டிகளுக்கு கொடுக்கும். இறந்த வெட்டுகிளியை சாப்பிட்டால் அதன் உடலில் உள்ள விஷதன்மை தன் குட்டிகளை பாதிக்கும் என்று குலவிக்கு தெரியும். யார் இந்த புத்தியை குலவிக்கு தந்தது.? இறைவனை தவிர வேறு யார் அந்த புத்தியை குலவிக்கு தந்திருக்க முடியும். குலவி இனத்தை படைத்ததற்கு முன்னதாகவே அதற்கு வெட்டுகிளிதான் உணவு என்று வெட்டுகிளியை முதலில் படைத்தான் இறைவன்.
இப்படியாக, எந்த ஒரு ஜீவன் பிறப்பதற்கு முன்னதாகவே அந்த ஜீவனுக்கு இவ்வூலகில் தேவையானவற்றை இறைவன் செய்து விட்டுதான் பூலோகத்தில் பிறக்க வைக்கிறான். ஆகவே இராமா… நீ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் ஈசனை நம்பு. எல்லாம் நன்மையாகவே நடக்கும்.“ என்று ஸ்ரீஇராமருக்கு நல்லாசி வழங்கினார் அகத்திய முனிவர்.
இராவணனை போரில் சந்திப்பதற்கு முன்னதாக வில்வ காட்டில் இருக்கும் சோமநாத ஈஸ்வரரை வணங்க ஆசி பெற வந்தார் ஸ்ரீராமர். அவருடன் வானர வீரர்களும் வந்தார்கள். காட்டில் சோமேஸ்வரரை ஸ்ரீராமர் வணங்கி கொண்டு இருந்தார். பல நாட்கள் நடந்து வந்ததால் வானர வீரர்களுக்கு பசி ஏற்பட்டது.
“குடிக்க தண்ணீர் கூட இல்லாத இந்த காட்டுக்குள் ஸ்ரீராமர் அழைத்து வந்துவிட்டாரே.“ என்று பசி மயக்கத்தால் கோபத்தில் சத்தம் போட ஆரம்பித்தார்கள். அவர்களின் பசியை போக்க ஈஸ்வரரிடம் உதவி கேட்டார் ஸ்ரீ ராமசந்திரர். சோமேஸ்வரரும் அவர்களுக்கு இந்த ஊரில்தான் தண்ணீருக்கான குளத்தையும், உணவையும் கொடுத்தார்.
மானாமதுரையில் சோமேஸ்வரர் கோயில்
பாஞ்சால நாட்டில் கன்னியாகுச்சம் என்ற நகரில் ஸ்தூலகர்ணன் என்ற மன்னன் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு காட்டில் தவம் செய்ய சென்றார். அப்போது வில்வ காட்டில் அழகான சிவலிங்கத்தை தரிசித்து அதை தொட்டு பார்த்தார். அப்போது வானத்தில் ஒரு அசரீரி குரல் கேட்டது. “இந்த பகுதியில் நீ ஈசனுக்கு கோயிலை எழுப்பி, இந்த சிவலிங்கத்தை அந்த திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்.“ என்று அசரீரி குரல் கூறியது. அசரீரி கூறியது போல் காட்டை அழித்து நகரமாக்கினார். அங்கு திருக்கோயிலை கட்டி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அத்துடன் அந்த பகுதியில் மக்களையும் குடியமர்த்தினார். மானாமதுரையில் இருக்கும் சோமநாதரை வில்வதினால் அர்ச்சனை செய்து வணங்கினால் பெரும் சிவயோகம் உண்டாகும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
Niranjana madam ur article is very fine.
ஸ்ரீஇராமருக்கு உதவிய மானாமதுரை சோமநாதர் ஆன்மிக கட்டுரை சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து படித்து வருகிறேன்.