மகான்கள் நிகழ்த்திய அட்சய திரிதியை அற்புதங்கள்
நிரஞ்சனா
தஞ்சை அரசர் விஜயராகவ நாயக்கர். இவர் ஆட்சி காலத்தில் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. தன் கஜானாவில் இருந்த பணத்தால் வேறு ஊரில் இருந்தெல்லாம் தானியங்களை வாங்கி வந்தார். இப்படியே பல மாதம் செய்ததால் விஜயராகவ அரசின் கஜானா காலியானது. ஊரே உணவு இல்லாமலும் பண வசதி இல்லாமலும் அவதிப்பட்டது. இதை பிரச்சனைக்கு தீர்வு என்ன? யோசனையில் ஆழ்ந்தார் மன்னர். அப்போது அமைச்சர் ஒருவர்,
“அரசே முன்னொரு காலத்தில் இப்படிதான் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதற்கு காரணம் கிரகங்கள்தான் என அறிந்தார் இடைக்காடர் எனும் சித்தர். அச்சித்தர் எப்படியாவது நவகிரகங்களை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதனால் நவகிரகங்களை அழைத்த அவர் அக்கிரகங்களுக்கு அன்னதானம் அளித்தார். நன்றாக உணவு உண்ட காரணத்தால் கிரகங்களுக்கு உறக்கம் வந்து தூங்கிவிட்டனர். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த சித்தர், அந்த கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தால் நாட்டுக்கு மழை பெய்யுமோ அதன்படி உறக்கத்தில் இருந்த அந்த கிரகங்களை மாற்றி அமைத்தார். அவர் திட்டம் பலித்தது. மழை பொழிந்தது – வளர்ச்சி பிறந்தது.“
அதற்கு அரசர், “என்ன அமைச்சரே… என்னை குழந்தையென நினைத்து விட்டீர்களா…? ஏதோ மாயாஜால கதை சொல்கிறீர்கள்.“ என வேதனையிலும் சிரித்தார் மன்னர்.
“இல்லை அரசே… இயற்கையை மாற்றும் சக்தி சித்தர்களிடம் இருக்கிறது என்கிறேன். மனித ரூபத்தில் இருக்கிற சித்தர்கள் – மகான்கள் மூலமாக கொடுமைகள் மாறும். வளமை கிடைக்கும் எனபதே என் கருத்து.“
“உண்மைதான் அமைச்சரே… அத்தகைய மகிமை வாய்ந்த சித்த புருஷர் யார்?“
“இருக்கிறார் அரசே…. அவர்தான் மகான் ஸ்ரீஇராகவேந்திரர். நீங்கள் எனக்கு கட்டளையிட்டால் அந்த மகானை நம் நாட்டுக்கு அழைத்து வருகிறேன். நல்லது நடக்கும் மன்னா.“ என்ற அமைச்சர், மன்னர் விஜயராகவ நாயக்கர் விருப்பப்படி அப்போது கும்பகோணத்தில் இருந்த ஸ்ரீ இராகவேந்திரரை ஒரு அட்சய திரிதியை நாளில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தார் அமைச்சர். அப்போது ஸ்ரீஇராகவேந்திரர், அரண்மனை களஞ்சியத்தில் இருந்த நெல்லில் பீஜாக்ஷர மந்திரத்தை எழுதி அரண்மனை களஞ்சியத்தில் வைத்தார். பிறகு ஒரு கைபிடி நெல் எடுத்து மன்னரிடம் அந்த நெல்லை தந்து அட்சயம் என்று ஆசி கூறி வழங்கினார். நாட்டில் மழை பொழிந்தது. விவசாயம் செழித்தது. அரண்மனை களஞ்சியத்தில் நெல் குவிந்தது. நாடு வளர்ச்சி அடைந்தது.
இப்படி அட்சய திரிதியை அன்று நடந்த அற்புதங்கள் பல.
ஆதிசங்கரர் நிகழ்த்திய அட்சய திரிதியை அற்புதம் தெரியுமா?
ஸ்ரீஆதிசங்கரர் சோமதேவர் என்பவர் வீட்டின் முன்பாக சென்று “பவதி பிக்ஷாந்தேஹி“ என ஒருமுறை உச்சரித்தார். “இதுவே ஒரு யாசகன் வீடு. இது தெரியாமல் இந்த வீட்டுக்கு யாரோ ஒரு அந்தணர் யாசகம் கேட்டு வந்துள்ளாரே. அவருக்கு யாசகம் தருவதற்கு வீட்டில் ஏதும் இல்லையே….அம்மா இது என்ன சோதனை.?“ என்று தன் குடும்ப வறுமையை நினைத்து அழுதாள் அந்த குடும்பத்தின் தலைவி.
மறுபடியும் ஆதிசங்கரர் “பவதி பிக்ஷாந்தேஹி“ என்று குரல் கொடுத்தார். “அடடா… சிவனே நேரில் வந்திருப்பது போல தெய்வீகமாக இவன் இருக்கிறானே. இவனிடம் வீட்டில் ஒன்றும் இல்லை போ என்று எவ்வாறு கூறுவது?. அப்படிச் சொன்னால் அவன் முகம் வாடிவிடுமே. இறைவா ஏன் இந்த கொடுமையான வறுமை.“ என்ற கலங்கி நின்றாள் சோமதேவர் மனைவி.
ஆதிசங்கரர் மூன்றாவது முறையாக “பவதி பிக்ஷாந்தேஹி“ என்றார். தண்ணீரில் விழுந்தவன் தப்பி பிழைக்க தெய்வம் மூன்று முறை சந்தர்ப்பம் தரும். அந்த மூன்று சந்தர்ப்பத்தில் தண்ணீரில் விழுந்தவன் தப்பிக்க வழி தேட வேண்டும். நான்காவது சந்தர்ப்பம் கிடையாது – மரணம்தான் முடிவு. அதைபோல இந்த அந்தணச் சிறுவன் “பவதி பிக்ஷாந்தேஹி“ மூன்றுமுறை சொல்லிவிட்டான். நான்காவது முறை சொல்ல மாட்டான். சாபம் விடுவான். இருக்கின்ற வறுமை போததென்று அவன் சாபக் கொடுமை வேறு சுமக்க வேண்டும். வேண்டாம் அந்த நிலை. வீட்டில் எது இருக்கிறதோ அதை கொடுப்போம்.“ என்று அந்த தாய் தேடினாள். அவள் வீட்டில் சாப்பிடும்படி ஏதும் இல்லை. ஒரு காய்ந்த நெல்லிக்கனியை தவிர.
அந்த காய்ந்த நெல்லிக்கனியை தயக்கத்துடன் ஆதிசங்கரருக்கு தந்தாள். அதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட ஸ்ரீஆதிசங்கரர், அந்த தாயின் தயக்கத்தை – அந்த குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்தார். “அம்மா, ஏன் உங்கள் கண்களில் கண்ணீர். நீங்கள் தந்த இந்த நெல்லிக்கனி ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது. இன்று அட்சயை திருதியை. தூய அன்புடன் நீங்கள் தந்த தானத்தில் நான் மனம் மகிழ்ந்தேன். என்று கூறி, ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரத்தை பாடி, ஸ்ரீமகாலஷ்மியை அழைத்தார் ஆதிசங்கரர். ஆதிசங்கரரின் அழைப்பை ஏற்று அன்னை ஸ்ரீமகாலஷ்மி வந்தாள். தானம் தந்த அந்த பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையெ பொழிந்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஒரு அட்சய திருதியை என்பது குறிப்பிடதக்கது.
முன் ஜென்மத்தில நம்மை அறியாமல் ஏதாவது ஒரு பாவத்தை யாருக்காவது செய்து இருப்போம். அந்த தீயவினை இந்த ஜென்மத்திலும் நிழல் போல் தொடர்ந்து வரும். அந்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய உகந்த தினம் அட்சய திரிதியை. அன்றைய தினத்தில் உங்களால் இயன்ற அளவு அன்னதானம் செய்தால், முன் ஜென்மத்தில் உங்களால் அவதிப்பட்டவர்கள் இந்த பிறவில் நீங்கள் செய்யும் அன்னதானத்தில் பங்கேற்று உணவு சாப்பிடக் கூடும் என்கிறது சாஸ்திரம். இதனால் நம் முன் ஜென்ம பாவங்கள் குறைகிறது. இறைவன் விரும்பினால் முற்றிலும் அந்த பாவம் விலகுகிறது. அதனால் அட்சய தினத்தன்று அன்னதானம் செய்யுங்கள்.
அதுபோல – அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள், சக்கரை, உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும். சக்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி அந்த இடத்தில் ஆசி வழங்க வருவாள்.
ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வறுமை ஒழியும்.
சூரிய பகவானிடம் திரௌபதி அட்சய பாத்திரம் வாங்கிய நாளும் அட்சய திரிதி திருநாள்தான்.
© bhakthiplanet.com All Rights Reserved