Friday 27th December 2024

தலைப்புச் செய்தி :

பச்சைக்கந்த சுவாமிகள் செய்த அற்புதம்

நிரஞ்சனா

சேலம் ஆத்தூர் சாலையில் உள்ள வாழப்பாடியிலிருந்து 5கி.மீ தொலைவில்  பேளூர் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில்  வெள்ளூர் என்று அழைக்கப்பட்ட இடத்தை இன்று பேளூர் என்று அழைக்கிறோம். பதரிகா ஆசிரமத்தில் இருக்கின்ற முனிவர்கள் வேத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இருந்தாலும் மழையில்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டது. உண்ண உணவு இல்லாமல் தவித்தார்கள். இதனால் வசிஷ்டரிடம் முறையிட்டார்கள். இவரின் வழிகாட்டுதலில் கொங்கு நாட்டில் வெள்ளாறு பாய்ந்து வளப்படுத்தும்  இடத்திற்கு குடிவந்தார்கள். அந்த நகருக்கு வெள்ளூர் என்று பெயர் வைத்து அழகான நகரமாக உருவாக்கினார்கள். ஆனாலும் பதரிக ஆசிரம பகுதியில் நிலவும் வறட்சி நிலையை எண்ணி வருந்தினார்கள்.

முனிவர்களின் கஷ்டத்தை பார்த்து மனவருந்திய சக்திதேவி, சிவனிடம் முறையிட்டாள். நந்திதேவரை அனுப்பி, “நீ முனிவர்களுடைய இன்னல்களை தீர்க்க பரிகாரம் சொல்லிவிட்டு வா.“ என்றார் ஈசன்.

முனிவர் வேடத்தில் சென்ற நந்திதேவர் மற்ற முனிவர்களை சந்தித்து, “வசிஷ்டர் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினால் வறட்சி நீங்கும்.“ என்று பரிகாரம் சொன்னார். நந்திதேவரின் ஆலோசனைப்படி முனிவர்கள் ஒன்று கூடி வசிஷ்ட முனிவர் மேற்பார்வையில் மிக பெரிய யாகம் நடத்தினார்கள். அவிர்ப்பாகத்தை ஏற்று சிவ-சக்தி அந்த இடத்தில் காட்சி கொடுத்தார்கள். இதன் பிறகு வறட்சி நீங்கி செழுமையான வளர்ச்சி ஏற்பட்டது. சிவசக்தி காட்சி கொடுத்த இடத்தில் தானாகவே ஒரு சிவலிங்கம் தோன்றியதால், “தான்தோன்றீஸ்வரர்“ என்ற பெயர் உண்டானது.

ஒரு ஊரில் உரோமசன் என்ற திருடன் இருந்தான். திருடிய பணத்தை தவறான வழியில் செலவழித்து வந்தான். இதனால் உடலில் பல வியாதிகள் குடி கொண்டது. அவனை நெருங்கவே அவன் கூட்டாளிகள் பயந்தார்கள். அருவருப்பாக பார்த்தார்கள். உரோமசன் உடலில் புண்கள் அதிகமானது. அந்த புண்ணில் இருந்து ரத்தம் சொட்ட தொடங்கியது. இதனால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதுவரை தான் செய்த கொடுமைகளை எண்ணி கதறி அழுதான். தன்னால் சுகபோகமாக வாழ்ந்தவர்கள் இன்று கேவலமாக நடத்துகிறார்களே என விரக்தி அடைந்தான். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற எண்ணத்தில் கால்போன போக்கில் எங்கோ போய் கொண்டு இருந்தான் உரோமசன். அவன் எதிரில் ஒரு முனிவர் வந்து கொண்டு இருந்தார். உரோமசனை கண்டு பரிதாபப்பட்டு, ”நீ வெள்ளூருக்கு சென்று “தான்தோன்றீஸ்வரரை“ வழிபடு. உன் வியாதிகள் நீங்கும்.” என்றார். முனிவர் கூறியது போல் ஆலயத்தின் வாசலில் கால்வைத்த உடன் அவன் உடலில் ஏதோ நல்ல மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். இறைவனுக்கு சேவை செய்வதை தன் கடமையாக ஏற்றான். பிறகு படிபடியாக உடல்வியாதிகள் நீங்கி குணம் அடைந்தான் உரோமசன். இவரே உரோமசர் என்று அழைக்கப்படுகிறார்.

கொங்கு நாட்டில் கரங்கன் என்பவருக்கு நல்ல குணம் படைத்த மதுமதி என்ற மனைவி அமைந்திருந்தாள். மிகச் செல்வந்தராக இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாததால் மனம் கலங்கினார்கள். இதனால் தினமும் சோமநாத பெருமானை வணங்கி தங்கள் மன குறையை சொல்லி வந்தார்கள் தமபதியினர். இவர்களின் வேண்டுதல் ஒருநாள் பலன் கிடைத்தது. முன் ஜென்ம தீய பலன் குறைந்ததால் அழகான பெண் குழந்தைக்கு தாயானாள் மதுமதி. அந்த குழந்தைக்கு சோமாவதி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்கள்.  குழந்தை பருவத்தை இருந்து மங்கை பருவம் அடைந்தாள் சோமாவதி. சகல வசதியும் அழகும் நிறைந்திருந்தாலும் சோமாவதிக்கு ஏற்ற மணமகன் அமையவில்லையே என்று கவலை ஏற்பட்டது பெற்றோர்க்கு. இதனால் வெள்ளூருக்கு வந்து தான்தோன்றீஸ்வரனின் திருக்கோயிலுக்கு சென்று, ஆலயத்தின் அருகேயே குடும்பத்தோடு தங்கினார்கள். மகளின் திருமணம் முடிந்தால்தான் ஊருக்கு திரும்புவோம் என்ற முடிவுடன் இருந்தார்கள் கரங்கனும் அவன் மனைவியும். ஒருநாள் சோமாவதி பொற்கதிர் ஒடையில் நீராடியதால் அவள் உடல் பொன்போல் மின்னியது. இதை கண்ட பெற்றோர்கள், தங்கள் மகள் தங்கசிலை போல் மாறியதை கண்டு கவலை அடைந்தார்கள். “கவலை வேண்டாம். உன் மகள் இனி காஞ்சனாங்கி என்று அழைக்கப்படுவாள். இன்னும் மூன்று தினத்தில் உன் மகளுக்கு ஏற்ற மணமகன் அமைவான். கவலைவேண்டாம்.“ என்ற கோயிலில் அசரீரி கேட்டது.

இறைவன் சொன்னப்படி, நிடத நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் சோமாவதி என்ற காஞ்சனாங்கிக்கும் நல்லமுறையில் திருமணம் நடந்தது. திருவெள்ளூர் திருத்தலத்தில் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் கருவறை கட்டியது “பச்சைக்கந்த சுவாமிகள்.“ அந்த கட்டட பணி நடந்த சமயம், கட்டட தொழிலாளர்களுக்கு சம்பளமாக பணத்திற்கு பதில் விபூதியை கொடுப்பார். அந்த விபூதியை பெற்ற வேலையாட்களுக்கு  அவர்களின் உழைப்புக்கேற்ப சிவபெருமான் அருளால் பணமாக மாறிவிடும்.

பச்சைக்கந்த சுவாமிகளின் சிலையும் மாணிக்கம் செட்டியார் என்பவரின் சிலையும் இந்த கோயிலில் இருக்கிறது.

யார் இந்த மாணிக்க செட்டியார்.? எதற்காக கோயிலில் அவருக்கு சிலை.?

மாணிக்க செட்டியார் என்பவர் எருதுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றியவாறு ஊர் ஊராக சென்று மிளகு வியபாரம் செய்து வந்தார். ஒருநாள் அதிகநேரம் வியபாரம் நடந்ததால் தன் இருப்பிடம் திரும்ப இரவு ஆகிவிட்டது. இனிமேல் வீட்டிற்கு செல்ல முடியாது. அப்படியே பயணித்தாலும் வழியிலேயே கள்வர்கள் பணத்தை கொள்ளையடித்து விடுவர் என்ற பயத்தால்  ஒர் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வ்நத ஒருவர், “அய்யா… எனக்கு தலைவலியாக இருக்கிறது. மிளகு கொஞ்சம் கொடுங்கள்.“ என்றார். “இது மிளகு மூட்டை கிடையாது. உளுந்து.“ என்று கூறி அந்த நபரை சமாளித்து அனுப்பினார் செட்டியார். விடிந்தது – மிளகு மூட்டையை திறந்து பார்த்தார் செட்டியார். மிளகு மூட்டை உளுந்து மூட்டையாக மாறி இருந்தது. அதை கண்டு மனம் பதறி வெள்ளூர், தான்தோன்றிஸ்வரரின் கோயிலுக்கு சென்று, பொய் சொன்னதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மனம் திருந்தியவர்களை மன்னிப்பது தானே தெய்வத்தின் குணம். அதனால் சிவபெருமான் ஒரு சித்தர் வடிவில் தோன்றி, “நீ தங்கி இருந்த இடத்திற்கே திரும்பி சென்று, ஒரு கைபிடி அளவு மண்ணை கொண்டு வந்து அந்த மண்னை உளுந்து மூட்டையின் மீது தெளி. மறுபடியும் அந்த உளுந்து மூட்டை மிளகு மூட்டையாக மாறும்.“ என்று கூறி மறைந்தார் சித்தர் வடிவில் வந்த சிவபெருமான். மாணிக்க செட்டியார் தங்கிய இடத்தை இன்று உளுந்தூர்ப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு, தான்தோன்றீஸ்வரருக்கு பல திருப்பணிகளை செய்ததால் மாணிக்க செட்டியாரின் சிலையும் கோயிலில் இடம் பெற்றது.

இங்குள்ள இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்தால், திருமணபாக்கியம் – குழந்தை பாக்கியம் உண்டாகும். தீராத வியாதியும் தீரும்.

 

 

© 2011  bhakthiplanet.com   All Rights Reserved

 

 

 

Posted by on May 2 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »