பக்தி மனம் இருந்தால் இறைவன் கூட பக்தனுக்கு அடிமை
இறைவனை வேறெங்கும் தேடாதே,அவர் உன் உள்ளத்தில்தான் இருக்கிறார் என்பார் பெரியோர். ஒருவன் கடும் தவம் செய்து ஸ்ரீமந் நாராயணனை அழைத்து, “இவ்வுலகில் எந்த இடம் பெரியதோ அந்த இடத்தில் நான் வாழ அருள் தர வேண்டும்.“ என வேண்டினான்.
அத்தகையோர் பெரிய இடம் உன் மனம்தான்.“ என்றார் ஸ்ரீமந் நாராயணன்.
அதற்கு பக்தன், “இல்லை சுவாமி… உலகிலேயே பெரிய இடம் இருக்கிறது“ என்று வாதம் செய்தான்.
“நான் வாமன அவதாரம் எடுத்த போது, கடலையும் வானத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு எங்கு போவது என்ற கவலையில் இருந்த மகாபலி சக்கரவர்த்தி தலையில் கால் வைத்தேன். உலகத்தையே அளந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்… பக்தனுடைய மனமே பெரியது“ என்று சொல்லி அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் வருகிறார். அவருடைய தெய்வீக தன்மையை பார்த்து கணிகண்ணன் என்பவர் ஆழ்வாரின் நண்பராகிறார். பிறகு ஆழ்வாரின் தெய்வபக்தியையும் அவருடைய பெருமையையும் தெரிந்த கொண்டு சிஷ்யராகவே மாறினார்.
இவர்களுடைய பக்தியின் திறனையும் புலமையையும் அறிந்த பல்லவ அரசன், கணிகண்ணனை அழைத்து, தம்மை பற்றி புகழ்ந்து உன் குருநாதரான திருமழிசை ஆழ்வாரை பாட சொல்.“ எனக் கேட்டான்.
“திருமாலை பாடிய வாயால் மானிட ஜென்மங்களை புகழ் பாட மாட்டார் எனது குரு.“ என்றார் கணிகண்ணன்.
“சரி போகட்டும் விடு. நீயாவது என்னை பற்றி புகழ்ந்து கவி பாடு.“ என்றார் அரசர்.
“குருநாதர் உத்தரவு இல்லாமல் அடுத்தவர்களை புகழ்வது தவறு.“ என்று கூறினார் கணிகண்ணன்.
“சபையில் எல்லோரும் முன்பும் என்னை அவமானப்படுத்தியதால் உன்னை நாடு கடத்துகிறேன்.“ என்றார் அரசர். இதை கேட்டு கடும் கோபம் கொண்ட கணிகண்ணன், “நீ யார் என்னை நாடு கடத்துவதற்கு? நானே இந்த நாட்டை விட்டு செல்கிறேன்.“ என்று கூறி காஞ்சி நகரை விட்டு வெளியேறி நடந்தார். கணிகண்ணனுடன், திருமழிசை ஆழ்வாரும் புறப்பட்டார். போகும் வழியில் கச்சி மணிவண்ண பெருமாளுக்கு ஒரு கட்டளையிடுகிறார் திருமழிசை ஆழ்வார்,
“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் சொல்கின்றேன் நீயும்உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.
“என் சீடன் கணிகண்ணன் இல்லாத ஊரில் நானும் இருக்க விரும்பாமல் புறப்படுகிறேன். நாங்கள் இல்லாத ஊரில் உனக்கு என்ன வேலை? உன் பாம்பு படுகையை சுருட்டிக்கொண்டு எங்களுடன் புறப்படு.“ என்று பாடுகிறார். பெருமாள், இவர்களுடன் புறப்படுகிறார். ஊர் மக்களுக்கு தகவல் பறக்கிறது. மக்கள் எல்லோரும் திருமழிசை ஆழ்வாரை வணங்கி நின்றனர்.
“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் இவ்வூரில் கோயில் இருந்தும் தெய்வம் இல்லை. தெய்வம் இல்லாத ஊரில் எங்களுக்கு யார் துணை?“ என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். சிஷ்யன் செல்கிறான். அவர் பின்னே குருவும் செல்கிறார். குருவின் பின்னே புருஷோத்தமன் செல்கிறார். பெருமாளை பின்தொடர்ந்து காஞ்சி மக்கள் செல்கிறார்கள்.
பல்லவ அரசருக்கு செய்தி போகிறது. தன்னுடைய சுயநலத்துக்காக ஊரையே காலி செய்ய வைத்துவிட்டேனே என்று மன்னர் கலங்கி போகிறான். தன் தவறை உணர்ந்து திருமழிசை ஆழ்வாரை நோக்கி ஓடி வருகிறான். ஆனால் அதற்குள் அவர்கள் காஞ்சிபுரம் எல்லையை தாண்டிவிட்டார்கள்.
“சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள். தங்களை பற்றி அறிந்தும் அறிவு கெட்டு தவறு செய்துவிட்டேன். என் குற்றத்தை உணர்கிறேன். மன்னித்துவிடுங்கள்.“ என்று கணிகண்ணன் காலில் விழுந்து வேண்டினான் அரசன்.
“மன்னனாக இருந்தும் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாயே அதுவே பெரிய விஷயம். மன்னித்தேன். வாருங்கள் எல்லோரும் காஞ்சிக்கு திரும்புவோம்.“ என்ற கணிகண்ணன், திருமழிசை ஆழ்வாருடன் காஞ்சி நகருக்கு திரும்புகிறார்.
ஆழ்வார் தன்னுடனே வந்த பெருமாளிடம்,
“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீகிடக்க வேண்டும்-துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவுஒழிந்தேன் நீயும்உன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்!”
என்று பாடல் மூலமாக பெருமாளுக்கு அன்பு கட்டளையிட்டு பெருமாளை மீண்டும் பழையபடி திருக்கோயிலில் அருள் செய்ய வேண்டுகிறார் திருமழிசை ஆழ்வார்.
“பார்த்தாயா… ஒரு பக்தன் இறைவன் சொல்லைதான் கேட்பான். ஆனால் நான் பக்தன் சொல்லை கேட்டு அவன் பின்னே சென்றேன். அதன் காரணம் பக்தனின் தூய மனம். பக்தி மனம். ஆக, உலகைவிட மனமே பெரியது. பக்தி மனதோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.“ என்று தன் பக்தனுக்கு அறிவுரை சொன்னார் ஸ்ரீமந் நாராயணன்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved