தொழில் வளர்ச்சி தரும் காரைக்குடி கொப்புடைநாயகி அம்மன்
நிரஞ்சனா
கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடிப் பகுதியில் திகழும் கல்லுக்கட்டி என்ற ஊரில் வாழ்கிறாள். இந்த அம்மனை ஸ்ரீ காட்டம்மன் என்ற ஆலயத்தில் இருந்து எடுத்து வந்து பூஜை செய்தார்கள். ஒருநாள் முகலாயர் படையெடுத்த போது, எங்கே அம்மனுக்கு அவர்களால் பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி, வேப்பமரத்தடின் கீழே வைத்து வழிபாடு செய்தார்கள். காலங்கள் மாறியதால் இந்த அம்மனை வணங்க மறந்தார்கள் அந்த பகுதி மக்கள்.. இந்த அம்மனுக்கு சரியான பூஜை இல்லாமல் வெறும் சிலையாகவே காட்சி தந்து வந்தாள்.
கல்லுச்சட்டி என்ற அயர்குலம் இருக்கிறது. அதாவது கல்லுச்சட்டி என்றால் கல்லை தாலியாக கழுத்தில் அணிபவர்களை கல்லுச்சட்டி என்று கூறுவார்கள். அந்த குலத்தைச் சார்ந்த ஒரு பெண் மோர் விற்று பிழைத்து வந்தாள். ஒருநாள் வேப்பமரத்தடியின் கீழே பூஜையில்லாமல் இருக்கும் அம்மன் சிலையை கண்டு மனம் வருந்தி வியாபாரத்திற்கு செல்லும் முன்னதாக அந்த அம்மனுக்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து, தனக்கு தெரிந்த பூஜை முறையோடு பூஜித்து மோரை நெய்வேதியமாக படைத்து வணங்கி வந்தாள். அதற்கு பலனை அம்மன் தந்தாள். அவள் வியாபாரம் நல்லபடியாக நடந்தது. போதுமான பணம் சேர்த்தாள். தன்னுடைய வளர்ச்சிக்கு அந்த அம்மனே காரணம் என்று எல்லோரிடமும் சொல்லி வந்தாள்.
முகலாயர் பயத்தால் இந்த அம்மனை ஆலயத்தை விட்டு வெளியே எடுத்து வேப்பமரத்தடியில் வைத்திருந்தார்கள். அந்த அம்மன் சிலை இன்னும் அங்கேயே இருக்கிறதா? நாம் மறந்துவிட்டோமே என்று வருந்திய மக்கள், அம்மனை மீண்டும் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்தார்கள். அதனால் ஓர் நன்னாளில் மறுபடியும் கொப்புடைநாயகி அம்மனை கோயிலுக்குள் வைத்தார்கள்.
தன் வசதியான வாழ்க்கைக்கு அந்த கொப்புடைநாயகிதான் காரணம் என்ற உறுதியாக நம்பிய அந்த மோர் விற்கும் பெண்மணி, தன் நன்றி கடனாக அந்த திருக்கோயிலுக்கு ஒரு திருக்குளத்தை உருவாக்கி கொடுத்தாள்.
தேவககோட்டை ஜமீன் இந்த அம்மன் கோயிலுக்கு இன்னும் சிறப்பாக ஆலயப்பணியை செய்தார் எதற்காக செய்தார்? அந்த சம்பவத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவகோட்டை ஜமீன் பரம்பரையை சார்ந்த ஒருவருக்கு ஜமீன் என்ற அந்தஸ்தோடு வாழ்ந்தாலும் அவர் மனதில் எந்நேரமும் ஏதோ கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. எதை செய்ய நினைத்தாலும் தடங்கல், சுப காரியத்தடை போன்ற சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்த வண்ணம் இருந்தது இதனால் தினமும் அவர் வணங்கும் சக்திதேவியிடம் முறையிட்டு தன் மனக்கவலையை கூறி வந்தார். ஒருநாள் கொப்புடை நாயகி அவர் கனவில் தோன்றி தன் ஆலயத்தை திருப்பணி செய்யுமாறு கட்டளையிட்டாள். கனவில் அம்மன் சொன்னப்படி சிவகங்கை அரசரின் மேற்பார்வையில் இருந்த கோயிலை அவர் வாங்கி, கொப்புடையநாயகி ஆலயத்தை தேவகோட்டை ஜமீன் நிர்வாகத்தில் கொண்டு வந்தார். மென்மேலும் சிறப்பாக ஆலயப்பணியை செய்தார். இதனால் அம்மன் மனம் மகிழ்ந்து ஜமீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்தாள்.
குடும்பத்திற்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல வியபாரிகள் இந்த அம்மனை தங்கள் தொழில் விருத்தி செய்யும் தெய்வமாக வணங்குகிறார்கள்.
வியாபாரிகள் இந்த கொப்புடையநாயகியை வணங்கினால் வியாபாரம் விருத்தியாகும். அப்படி பயண் அடைந்தவர்கள் பலர். அதில் குறிப்பாக, ஒருவர் சிறு வியாபாரம் செய்து வந்தார். அவர் தினமும் இந்த கொப்புடையநாயகிக்கு செவ்வரளி பூமாலை சாத்திய பிறகுதான் தன் வியாபாரத்திற்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதுபோல் ஒருநாள் அல்ல இரண்டுநாள் அல்ல, பல வருடங்களாக இந்த பூமாலை காணிக்கையை கொடுத்து வந்தார்.
பூ தினமும் மலர்வது போல் அவர் வியாபாரமும் நாளுக்கு நாள் செழிமை பெற்று வளர்ந்து கொண்டே இருந்தது. வியாபாரியாக ஆரம்பித்த வாழ்க்கை, மிக பெரிய தொழில் அதிபராக அவரை மாற்றியது. அவரிடம் அவர் வளர்ச்சியை பற்றி யார் கேட்டாலும் எல்லாம் கொப்புடைய நாயகியின் அருளால்தான் என்று பெருமையாகச் சொல்வார். அந்த தொழில் அதிபர் வேறு யாருமல்ல, அவர் டி.வி.எஸ் நிறுவனர்.
வியாபாரிகள் கொப்புடைய நாயகியை தரிசனம் செய்து கடைசாவியை அம்மன் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகுதான் கடையை திறக்கும் வழக்கத்தை பலர் இன்னமும் வைத்திருக்கிறார்கள்.
இந்த கோயிலுக்கு விசேஷமே தயிர்சாதம் தான். தயிர் சாதத்தை பக்தர்களுக்கு கொடுத்தால் கொடுப்பவர்களின் வாழ்க்கை குளிர்ச்சியாக அமையும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உறுதியாக உள்ளது.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் கொப்புடைய நாயகி அம்மனுக்கு செவ்வரளி பூமாலையை அணிவித்து வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம் பிரசாதமாக வழங்கினால் லாபகரமாக தொழில் நடக்கும் இது சத்தியம் என்று அனுபவத்தில் உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
excellent!