தேர்வடிவில் திருமுருகன் கர்ப்பகிரகம்
நிரஞ்சனா
திருவனந்தபுரத்தில் வழுதக்காடு என்ற இடத்தில் இடப்பழஞ்சி என்ற ஊரில், “ஸ்ரீகுமார் ராமம் இடப் பழஞ்சி ஸ்ரீ பாலசுப்பிரமண்ய சுவாமி“ எனும் முருகன் ஸ்தலம் இருக்கிறது. இந்த சுவாமியின் கர்ப்பகிரகம் தேர் வடியில் அமைந்திருக்கிறது. அந்த தேர்வடிவ கோயிலுக்கு இரண்டு பெரிய சக்கரங்கள் உண்டு. அதில் அச்சாணிகள் கூட உண்டு.
இந்த தேர் வடிவ கோயிலின் வரலாறு அற்புதமானது.
கிருகநாதர் என்பவரின் வீட்டில் இராமாயணம் வசித்து கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் நல்ல தேஜஸான ஒரு சிறுவன் அங்கும் இங்குமாக ஓடி விளையாடி வந்தான். இராமாயணத்தை கேட்க வந்தவர்கள் அந்த சிறுவனின் சுட்டித்தனத்தை ரசித்து கொண்டு இருந்தார்கள். இதை கண்ட கிருகநாதர், அந்த சிறுவனை அன்பாக அழைத்து, “யாரப்பா நீ.? உன் பெயர் என்ன.?“ என்று கேட்டார்.
கிருகநாதரின் எந்த கேள்விக்கும பதில் சொல்லாமல் அவரிடம் இருந்து விலகி வீதியை நோக்கி ஒடினான் சிறுவன். காந்தம் இரும்பை இழுத்து செல்வதை போன்று அந்த சிறுவனின் பின்னாலேயே ஓடினார் கிருகநாதர். அந்த சிறுவன் ஒரு இடத்தில் நின்று கிருகநாதரை திரும்பி பார்த்து சிரித்தபடி திடீரென்று மறைந்துவிட்டான். இந்த மாயகாட்சியை கண்டு திடுக்கிட்ட கிருகநாதர், தன் இஷ்ட தெய்வங்களான சாஸ்தாவையும் தேவியையும் வணங்கி, “யார் அந்த சிறுவன் என்று தெரியவில்லையே?“ என்று அழுதார். கிருகநாதரின் முன்பாக வேட உருவத்தில் தோன்றிய அவர்கள், கிருகநாதரின் கண்ணீருக்கு காரணம் கேட்டு தெரிந்து அந்த சிறுவனை தேடி சென்றார்கள். சிறுவன் கற்களின் இடையில் பதுங்கி இருந்தான். இராமனே சிறுவன் வடிவில் இருப்பதை போன்று அழகாக இருந்த அவனை, “குமாரா – இராமா“ என்று அழைத்தனர் தேவியும் சாஸ்தாவும். உனக்கு இஷ்டபட்டு – கற்களின் இடையில் நின்றிருந்ததால் இது “இடப்பழநி“ என்று அழைக்கப்படட்டும் என்று வாழ்த்தினர். அந்த இடத்தில் தன் சக்திக்கேற்ப சிறு ஆலயத்தை கட்டினார் கிருகநாதர். அவர் கட்டிய கோயில் சரியாக மேற்பார்வை இல்லாததால் கோயில் இருந்த இடம் காடு போல் இருந்தது. இந்த கோயில் 488 வருடங்கள் பழமையானது.
1947-ம் ஆண்டு, இராணுவ கேம்ப் ஒன்றின் கர்னலாக இருந்த சங்குண்ணி நாயர் என்பர் இந்த இடப் பழஞ்சி வழியாக போகும் போதெல்லாம், ஒரு சிறுவன் அவரின் கார் முன்பாக வந்து நிற்பதும் மறைவதுமாக இருந்தான். இப்படி ஒவ்வோரு தடவையும் இது போல் அந்த சிறுவன் வருகிறான். பிறகு அடுத்த நொடியில் மறைந்து விடுகிறானே… யார் அந்த சிறுவன்? எங்கிருந்து வருகிறான்? என சிந்தித்தார்.
இதே போல் ஒருநாள் இடப் பழஞ்சி வழியாக வரும் போது, வழக்கம் போல அந்த சிறுவன் சங்குண்ணி நாயரின் கார் முன் வந்து நின்றான். இந்தமுறை கார் வருவதை பற்றி கவலைப்படாமல் எந்த பயமும் இல்லாமல் அப்படியே சிறுவன் நின்றுகொண்டிருப்பதை கண்ட நாயர், தன் கார் டிரைவர் பாலகிருஷ்ண பிள்ளையிடம் “வண்டியை நிறுத்து“ என்று சொல்லி, காரை விட்டு அவர் இறங்கி அந்த சிறுவனின் அருகில் நெருங்கி வந்துக்கொண்டிருந்தார். சிறுவன் கலகலவென சிரித்துக் கொண்டே ஒடினான். கர்னல் அந்த சிறுவனை இன்று விடுவதாக இல்லை. சிறுவனை பின் தொடர்ந்து ஓடினார்.
ஒரு இடத்தில் அந்த சிறுவன் நின்று கர்னலை திரும்பி பார்த்தான். பின்தொடர்ந்து ஓடிவந்த கர்னல் நின்றார். சிறுவன் சிரித்தபடி மறைந்தான். அதிசயித்த கர்னல், “ஏன் இந்த இடத்தில் தன்னை இந்த சிறுவன் அழைத்து வந்தான்.“ என்று யோசித்தபடி அந்த இடத்தை சுற்றி பார்த்தார். சிறுவன் மாயமாக மறைந்த இடத்தில் வந்து நின்றார். அந்த இடத்தின் அருகில் பாழடைந்த ஒரு கோயிலை கண்டார். கோயிலுக்கள் சென்று பார்த்தார். அந்த கோயிலின் கருவறையில் முருக பெருமான் சிலை வடிவில் நிற்பதை கண்டார். அடடா இது திருமுருகன் கோயிலா என்று மகிழ்ந்தார் கர்னல். தன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த சிறுவன், முருகப் பெருமான்தான் என்பதை உணர்ந்து மிகவும் மகிழ்ந்தார். அந்த திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்தார். தன் கார் டிரைவர் பாலகிருஷ்ண பிள்ளையை நிர்வாகியாக நியமித்தார். மக்கள் வர தொடங்கினார்கள். கோயில் புகழ் பெற்றது.
பிறகு பல வருடம் கழித்து 1985-ல் சிற்பியான அம்பலத்தர ராமச்சந்திரன் என்பவர், முருக பெருமான் தேர் வடிவில் இருக்கும் கருவறையில் காட்சி தருவது போல் கனவு கண்டார். தேர் வடிவ கர்ப்பகிரகத்தை முருகப் பெருமான் விரும்புகிறாரோ என்ற எண்ணிய அம்பலத்தர ராமச்சந்திரன், அவ்வாரே கர்ப்பகிரகத்தை வடிவமைத்தார். இடப்பழநி பால சுப்பிரமணியரை வணங்கினால் இடைப்பட்ட பிரச்சனைகள் யாவும் விலகிவிடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பாலமுருகன் திருக்கோயிலுக்கு வந்து முருகனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
kanthanuku arokara…
Nice Article…