சனி பகவான் மீது நம்பிக்கை – ஊரில் கதவு இல்லாத கட்டடங்கள்
நிரஞ்சனா
சனி சிங்கனாப்பூர் என்கிற ஊர், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிற ஷீர்டியில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. இங்குள்ள தெய்வத்தை சனிமகராஜ் என்று மக்கள் அழைக்கிறார்கள். சிங்கனாப்பூரின் கிழக்கே பனாஸ்நாலா ஆற்றில் சுமார் 160 வருடங்களுக்கு முன்பு விடாமல் பெய்த மழையால் பனாஸ்நாலா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த ஆற்றில் ஒரு பெரிய கல் மிதந்து கொண்டு வந்து கரையோரமாக இருந்த கொடியில் சிக்கி கொண்டது. அப்போது அந்த பக்கமாக ஆடு மெய்க்கும் சிறுவன் வந்து கொண்டு இருந்தான். “அட கல் மிதந்து வந்திருக்கிறதே?” என்று அதிசயப்பட்டு தன் கையில் இருந்த இரும்பு கோலால் அந்த கல்லை இழுக்க பார்த்தான். பலமாக அந்த கல்லை அடித்து இழுக்க பார்த்ததால் அந்த கல்லுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிய ஆரம்பித்தது. அதை கண்ட சிறுவன் பயந்துபோய் ஊரில் இருந்த மக்களிடம், தான் கண்ட காட்சியை சொன்னான்.
பயத்தில் சிறுவன் உளருகிறான் என்று யாரும் அதை பெரிய விஷயமாக கருதவில்லை. இருந்தாலும் அந்த ஆடு மெய்க்கும் சிறுவன் விடுவதாக இல்லை. சில பொதுமக்களை வலுகட்டாயமாக அழைத்து சென்று, ஆற்றில் மிதந்து கொண்டு இருக்கும் கல்லில் இருந்து ரத்தம் வருவதை சுட்டி காட்டினான். அதை கண்ட பலர் ஆச்சரியம் அடைந்தார்கள். இரவு நேரம் என்பதால் இந்த நேரத்தில் இந்த கல்லை தொட்டால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று கருதி யாரும் அந்த கல்லை தொடக் கூட இல்லை.
அன்று இரவு அந்த ஊரை சார்ந்த ஒருவரின் கனவில் சனிபகவான் தோன்றி, “நான் சனிமகராஜ். அந்த கல் நான்தான். உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன். நீங்கள் என் கற்சிலையை எடுத்து பூஜிக்க வேண்டும்” என்றார். விடிந்ததும், தான் கண்ட கனவை ஊர்மக்களிடம் கூறினார் அந்த நபர். ஊர்மக்கள், பனாஸ்நாலா ஆற்றில் இருந்த கல்லை 10,15 பேராக கூடி எடுத்து வர முயற்சி செய்தார்கள். காலையில் ஆரம்பித்த பணி இரவு வரை தொடர்ந்ததே தவிர ஒரு அங்குலம் கூட அந்த கல்லை அந்த இடத்தில் இருந்து அசைக்க முடியவில்லை. இனி முயற்சிப்பது வீண் என்று கருதிய மக்கள், அப்படியே விட்டுவிட்டு சென்றார்கள். அன்று இரவு மறுபடியும் அதே நபர் கனவில் சனிமகராஜ் தோன்றினார்.
“தாய்மாமனும், மருமகனுமான சொந்தமுள்ள இரண்டு பேர் முயற்சித்தால் என்னை ஆற்றில் இருந்து அழைத்து வர முடியும்.” என்றார் சனி பகவான். மறுபடியும் இதை ஊர்மக்களிடம் கூறினார். ஆனால் இதை யாரும் நம்பவில்லை இருந்தாலும் தனக்கு இருந்த நம்பிக்கையால் ஊர் மக்களிடம் வாதாடி சமாதானம் செய்து தாய்மாமன், மருமகன் உறவு உள்ளவர்களை அழைத்து சென்று ஆற்றில் இருந்த சனிமகராஜின் கல்லை எடுக்க முயற்சி செய்தார். என்ன ஆச்சரியம்… 10,15 பேர் முயன்றும் அசைக்க முடியாத சனிஸ்வர கல்லை சர்வ சாதாரணமாக அந்த இரண்டு பேர் சேர்ந்து ஒரு நிமிடத்திலேயே தூக்கிவிட்டார்கள். இதை கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். சனிஸ்வர பகவானின் உருவம் இல்லா கல்லை ஒர் இடத்தில் வைத்து பூஜிக்க ஆரம்பித்தார்கள்.
“நான் உங்களை ஒரு மகாராஜனை போல் காப்பேன். என்னை நம்புகிறவர்களுக்கு பக்கபலமாகவே இருப்பேன். என் ஊர் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பேன். இது உறுதி.” என்று வானத்தில் இருந்து ஒர் அசரிரீ குரல் கேட்டது.
சனி பகவானின் வாக்கின்படி இன்று வரை ஒரு அரசரை போன்று சனிமகராஜ் அந்த ஊரை காப்பாற்றி வருகிறார். இந்த ஊரில் பல வீடுகளிலும் பெரிய பெரிய கடைகளிலும் கூட கதவுகள் இல்லை. திரைச்சீலைதான் கதவு. கதவுகள் இல்லாமல் இருந்தாலும் இன்று வரை ஒரு பொருள் கூட களவு போனதில்லை என்கிறார்கள். அப்படியே யாராவது திருடினால் திருடியவனுக்கு அதுதான் கடைசி திருட்டு. மீண்டும் வேறு இடம் தேடி போய் திருட அவனுக்கு கண் பார்வை இருக்காது.
இந்த கோயிலுக்கு செல்லும் ஆண் பக்தர்கள் அவர்கள் அணிந்துவரும் உடையை மாற்றி, காவி வேட்டியை கட்டி கொண்டு, சனிமகாராஜ் என பக்தியுடன் அழைக்கப்படும் சனி பகவான் சிலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள். பெண்கள், சனிமகராஜ் சிலையை தொட்டு பார்க்க அனுமதியில்லை.
இந்த கோயிலுக்கு வரும் புதிய பக்தர்கள் பொறுமையாக சுற்றி இருக்கும் வீடுகளையும், கடைகளையும் பார்த்து, அந்த கட்டடங்களுக்கெல்லாம் கதவுகள் இல்லாது இருப்பதை கண்டும் அதன் காரணத்தை அறிந்தும், சனி பகவான் மீது அந்த ஊர் மக்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை தெரிந்து ஆச்சரியம் அடைகிறார்கள். நாமும் சனி பகவானை வணங்கினால் தொலைந்த பொருளை திரும்ப பெறலாம். இழந்த இராஜ்யத்தையும் திரும்ப பெறலாம். நம் மகிழ்ச்சி எந்நாளும் களவு போகாது. சனி பகவான் தருவதை யார் தடுப்பார்?. தலைமுறை செழித்து வாழ சனி துணை வேண்டும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
சனி பகவான் சிறப்பை சொல்கிற சிறந்த கட்டுரை அருமை.
Nice article…