Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

சுந்தரருக்கு கண் பார்வை தந்த அன்னை காமாட்சி

அறுபத்து மூவர் வரலாறு

பகுதி – 7 

 

ஏகம்பரஸ்வரர் கோயிலில் சுந்தரருக்கு  பார்வை தந்த காமாட்சி

சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்

நிரஞ்சனா 

பல மாதங்கள் இல்லறத்தை மகிழ்ச்சியோடு நடத்தினார் நம்பியாரூரர். ஒருநாள் சுந்தரருக்கு தன் சொந்த ஊரான திருவாரூருக்கு செல்ல வேண்டும், முதல் மனைவி பரவையாரை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டானது. தன் விருப்பத்திற்கு சங்கிலி தடையாக இருப்பாள் என்பதால் அவளிடம் சொல்லாமல் புறப்பட்டார். சங்கிலியாருக்கு தெரியாமல் போனாலும் இறைவனுக்கு தெரியாமல் போகுமா. திருவொற்றியூர் எல்லையை விட்டு வெளியேறியதும் சுந்தரரின் கண்பார்வை பறிபோனது. “அய்யோ குருடன் ஆனேனே…“ என்று கதறி அழுதார். அத்துடன் வயதானவர் போல் அவர் உருவம் மாறிப் போனது. சத்தியத்தை மீறியதால் இந்த தண்டனை என்பதை உணர்ந்தார்.

“இறைவா… என்னை மன்னிக்க வேண்டும்.“ என்று அழுது, “அழுக்கு மெய்கொடு“ என தொடங்கும் பதிகத்தை பாடினார் சுந்தரர்

செய்வது தவறு என்று தெரிந்தும் அந்த தவறை துணிச்சலுடன் செய்வோர்க்கு மன்னிப்பு கிடையாது என்பதில் சிவபெருமான் உறுதியாக நின்றார். அதுவும் “திருவொற்றியூர் எல்லையை விட்டே தாண்ட மாட்டேன்… கடைசிவரை சங்கிலியாருடன்தான் வாழ்வேன்” என்று தன் முன்னே செய்த சத்தியத்தை மீறியதால் கடும் கோபத்தில் இருந்தார் சிவன். அதனால் தன்னுடைய நண்பராக இருந்தாலும் கருணை காட்டாமல் சுந்தரருக்கு திரும்ப கண் பார்வையை தரவில்லை இறைவன்.

இனி நடப்பது நடக்கட்டும். இறைவன் மனம் ஒருநாள் கருணையால் விடிவு காலம் பிறக்கும். அதுவரை பொறுமையாக இருப்போம் என்ற எண்ணத்தில், கால் போன போக்கில் சென்று எப்படியும்  திருவாரூரை அடைய முடிவெடுத்தார் சுந்தரர். சுந்தரருக்கு கண்பார்வை போனதால் வழியில் உள்ள ஊர்மக்கள் அவர் மேல் பரிதாபம் அடைந்தார்கள். இதனால் ஆங்காங்கே சிலர் ஆரூராரின் கையை பிடித்து அழைத்து சென்று வழி காட்டினார்கள். திருவடமுல்லை வாயிலை அடைந்து (சென்னை – திருமுல்லைவாயில்) அங்கு அருள் செய்யும் திருமுல்லைநாதரை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிகம் பாடினார். ஆனால் இறைவன் கண்டுகொள்ளவில்லை. இதனால் திருவெண்பாக்கம் சென்றார்.

இறைவனை வேண்டி ஒரு பதிகம் பாடினார். ஆனால் சிவபெருமான் இங்கும் சுந்தரரை மன்னிக்கவில்லை. இதனால் பெரிதும் வருந்திய சுந்தரர், “சிவபெருமானே இத்திருக்கோயிலில் நீ இருக்கிறாயா இல்லையா?“ என்றார். அதற்கு இறைவன் சுந்தரருக்கு ஓரு ஊன்றுகோல் தந்து, “நாம் இங்கேதான் இருக்கிறோம். நீ இங்கிருந்து போ.“ என்று சுந்தரரின் மீது கோபம் தணியாமல் சொன்னார். சிவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரு பதிகம் பாடிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இறைவன் தந்த ஊன்றுகோலை துணையாக கொண்டு, பழயனூர் சென்று இறைவனை மகிழந்து “முத்தா முத்திரவல்ல…“ என தொடங்கும் பதிகம் பாடி அங்கிருந்து காஞ்சிபுரம் வந்தடைந்தார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை முதலில் தரிசித்துவிட்டு, “திருக்கச்சி ஏகம்பனே” என்று மகிழ்ந்து பாடியபடி ஏகம்பரஸ்வரரை வீழ்ந்து வணங்கி, காமாட்சி அம்மனையும் வேண்டினார். வன்தொண்டரான சுந்தரரின் துன்பம் கண்டு சிவபெருமானிடம் சுந்தரருக்கு கருணைகாட்ட வேண்டினார் காஞ்சி காமாட்சி அன்னை.

காமாட்சி அம்மையின் விருப்பத்தை ஏற்று நம்பியாரூரரின் இடது கண் பார்வையை இறைவன் தந்தார். அன்னையின் கருணையால் இறைவன் ஒரு பார்வையாவது தந்தாரே என்ற மகிழ்ச்சியில் “ஆலந்தானுகந்து அமுது செய்தானை” என்ற திருபதிகத்தை பாடினார் சுந்தரர். சில மாதங்கள் காஞ்சியில் தங்கினார். பிறகு திருவாரூர் தியாகராஜப் பெருமான் நினைவு வரவே மீண்டும் பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து வழியில் உள்ள பல ஊர்களுக்கு சென்று அங்கு இருக்கும் பல சிவாலயங்களுக்கு சென்று வணங்கி பதிகம் பாடினார். இடது கண் பார்வை கிடைத்த மகிழச்சி இருந்தாலும், தன் உடல் நோய் தீர்க்க இறைவன் எப்போது அருள் செய்வாரோ என நினைத்து ஏங்கினார் ஆருரர்.

திருத்துருத்தி என்கிற ஊரில் உள்ள சிவபெருமானை தரிசி்த்தார். தன் உடல்நோய்  என்று தீருமோ என்றார். அதற்கு இறைவன், “நீ இந்தக் கோயிலின் வடபக்கத்தில் உள்ள குளத்தில் நீராடி வா உன் உடற்பிணி தீரும்.“ என்றார் இறைவன். அவ்வாறு குளத்தில் சுந்தரர் முழ்கி கரை சேர்ந்த போது, சுந்தரரின் உடல்பிணி மறைந்து சுந்தரர் எனும் பெயருக்கேற்ப சுந்தர உடலை பெற்றார்.

அங்கிருந்து தம் சொந்த ஊரான திருவாரூர் வந்தடைந்த சுந்தரருக்கு வலது கண் பார்வையும் தந்தருளினார் சிவபெருமான். சுந்தரர் திருவாரூர் கோயிலில் தங்கியிருந்தார். அதற்குள் சிலர், சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை இரண்டாவது திருமணம் செய்த விஷயம் பரவையாருக்கு சொல்லிவிட்டார்கள்.

பரவையார் பெரும் ஆத்திரம் கொண்டார்.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 9 2011. Filed under அறுபத்து மூவர் வரலாறு, ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »