வீரனாக சென்று அரசரின் துயரம் தீர்த்த திருவட்டாறு ஆதிகேசவர்
நிரஞ்சனா
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில். கேசன் என்ற அசுரன் தனது சகோதரியுடன் தவம் செய்து பிரம்மனிடம் இருந்து சாகாவரம் பெற்றான். வரம் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா?. கிடைத்த வரத்தை சோதித்து பார்க்க, தான் உணடு தன் வேலையுண்டு என்று இருக்கும் முனிவர்களிடம் வீணாக சென்று சண்டைபோட்டார்கள். அசுரர்களிடம் மோத முடியாத முனிவர்கள் பெருமாளிடம் முறையிட்டார்கள்.
முனிவர்களின் மனக்கவலையை தீர்க்க பெருமாள் பூலோகத்திற்கு வந்து அசுரன் கேசனை வீழ்த்த கடுமையாக போர் செய்தார். அசுரன் பின் வாங்குவதும் மீண்டும் போர் செய்வதுமாக இருந்தானே தவிர அசுரனை அழிக்க இயலவில்லை. இவனை எப்படி அழிக்கலாம் என்று யோசித்தப்படியே ஸ்ரீநாராயணன் போர் செய்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீநாராயணனின் தொடர் தாக்குதலால் தாக்கு பிடிக்க இயலாத கேசன் மயங்கி விழுந்தான். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிய பெருமாள், அப்படியே கேசனின் உடல் மீது படுத்து கொண்டார். கேசனின் உடல் ஸ்ரீநாராயணனின் உடல்பாரத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. கேசனால் எழுந்து கொள்ள முடியவில்லை.
தன் சகோதரனை அடித்து கீழே தள்ளி அவன் உடல் மீது ஸ்ரீநாராயணன் படுத்து இருப்பதை அறிந்த அசுரன் கேசனின் சகோதரி கேசினி, தாமிரவருணியாற்றை அதிக வேகமாக ஊருக்குள் புகுத்தினாள். இந்த தாக்குதலில் இருந்து பெருமாள் கேசனின் உடலை விட்டு எழுந்திருப்பார் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு செயலை செய்தாள் கேசினி. இதை பார்த்த பூமிதாய் கோபத்தின் எல்லைக்கே சென்றாள். அசுரன் உடலை விட்டு பெருமாள் எழுந்திருக்கவே கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஸ்ரீநாராயணனை தண்ணீரே நெருங்காத அளவில் அந்த இடத்தை மேடாக உயர்த்தினாள். தண்ணீர் பெருமாளை சுற்றி குளம் போல் தேங்கி நின்றதால், பெருமாள் தாமிரவருணியாறு தண்ணீருக்கு ஒரு வழி அமைத்து கொடுத்தார். அது வட்டமடித்து ஓடும்படி செய்தார். இதனால் கேசனை அடக்கியதால் ஸ்ரீநாராயணன், ஆதிகேசவன் என்ற நாமம் பெற்றார். இதனால் அந்த பகுதிக்கு திருவட்டாறு என்ற பெயர் வந்ததாகவும் புராணம் சொல்கிறது.
கேரளா மாநிலத்தில் வேணாடு என்ற இடத்தில் உமையம்மா என்ற அரசி ஆட்சி செய்து வந்தாள். எதிரிநாட்டினர் போர் செய்து அரசியின் ஐந்து புத்திரர்களை கொன்றார்கள். இழந்த ஐந்து செல்வங்களை இனி திரும்ப பெற முடியாது என்ற கவலையில் இருந்தாள் அரசி. கவலையே வளர்ச்சியை தடுக்கும் – பாதிப்பை கொடுக்கும் என்ற கருத்துக்கேற்ப அரசியின் கவலையால் நாட்டை சரியாக கவனிக்காமல் போனாள். இதை தெரிந்த கொண்ட முகில்கான் என்ற எதிரிநாட்டு நவாப், ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருக்கும் விலை உயர்ந்த தங்க – வைர நகைகளை கொள்ளையடிக்க வேண்டும் என்ற கருத்திலும் பெரும் வசதியான நாடாக இருக்கிறதே என்ற பேராசையிலும் அரசி உமையம்மாவை நாட்டை வி்ட்டே துரத்தி அவள் ஆட்சி புரியும் பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் எண்ணினார் நவாப்.
இதை அறிந்த உமையம்மா, “தேவையான படைபலமும் இல்லையே… எப்படி நவாப்பை போர்களத்தில் வீழ்த்துவது.?“ என்ற யோசனை செய்த போது, ராணிக்கோட்டயம் என்ற ஊரை அரசாண்டு வந்த கேரளவர்மனிடம் உதவி கேட்டாள்.
நவாப் பெரும் படையே வைத்திருக்கிறார். அத்துடன் அளவுக்கு அதிகமான ஆயுதங்களும் அவரிடம் இருக்கிறது. அவருக்கு இணையான எந்த ஆயுதங்களும் தம்மிடம் இலலை. போதுமான படைபலமும் தன்னிடம் இல்லை. இந்த உண்மையை உமையம்மாவிடம் சொன்னால், நவாப்புக்கு பயந்து பின் வாங்குகிறேன் என்றும் தன்னை கோழை என்றும் உமையம்மா நினைப்பாளே என்று கவலைக்கொண்டார் அரசர் கேரளவர்மன். திக்கற்றவனுக்கு தெய்வம்தானே துணை. அந்த தெய்வத்திடமே முறையிடுவோம் என்ற முடிவுக்கு வந்து திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி பாடல்களை பாடி போற்றினார். அப்போது ஒரு பெரும் அதிசயம் அற்புதம் நிகழ்ந்தது. யாரோ பச்சை உடையணிந்த வீரன் ஒருவன் பெருமாளின் கருவறையில் இருந்து வெளியே போனதும், சில மணி நேரத்தில் அதே நபர் வெளியே இருந்து கருவறைக்குள் சென்றதையும் அரசர் கவனித்தார்.
அப்போது கேரளவர்மனின் தளபதி கோயிலுக்குள் ஓடி வந்தார்.
“அரசே…நவாப் இறந்துவிட்டான்.“ என்றார்.
அரசருக்கு ஆச்சரியம். “எப்படி இறந்தார்.“ கேட்டார் அரசர்.
“போர்களத்தில் நவாப் போரிட்டுகொண்டிருக்கும் போது, திடீரென எங்கிருந்தோ வந்த பல லட்சம் விஷதேனீக்கள், நவாப்பின் படையை சிதறடித்து நவாப்பையும் கொத்தி கொன்றது அரசே.“ என்றார் தளபதி.
அரசர் தன் எதிரே ஒன்றும் தெரியாததை போல இருக்கும் திருவட்டாறு பெருமாளை பார்த்தார். வெளியே சென்று திரும்பிய பச்சை உடை அணிந்த வீரன் யார் என்பது மன்னருக்கு புரிந்தது. பெருமாளின் பாதத்தில் விழுந்து வணங்கினார் மன்னர்.
கி.பி. 1740 ஆண்டு தோஸ்த்அலி என்ற ஆற்காடு நவாப் இருந்தார். திருவட்டாறு பெருமாளின் உற்சவ சிலையை கொள்ளையடித்து அதை ஒரு பாதுகாப்பான அறையில் வைத்திருந்தார். இதன்பிறகு நவாப்பின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டாள். எத்தனையோ வைத்தியர்கள் மருத்துவம் பார்த்தார்கள். வலி குறையவில்லை. நாட்கள் கடந்தது. ஒவ்வொரு நாளும் வலி அதிகமாகி பெரும் வயிற்று வலியால் துடித்து அழுதாள்.
“இனி எந்த மருத்துவமும் பார்க்க வேண்டாம். வலி எனக்கு அதிகமாகிறது. இது தீராது. அதனால் என்னை கொன்று விடுங்கள்.“ என நவாப்பிடம் கதறினாள். நவாப் கலங்கி போனார். அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒருநாள் இரவு நவாப்பின் மெய்காவலாளியின் கனவில் பெருமாள் தோன்றி, “என்னுடைய உற்சவர் சிலையை என் கோயிலில் எடுத்த இடத்திலேயே சென்று வைத்துவிட்டால் நவாப் மனைவியின் வயிற்று வலி தீரும்.“ என்று கூறி மறைந்தார் ஸ்ரீஆதிகேசவ பெருமாள்.
இதை நவாப்பிடம் சொன்னால், “சம்மந்தப்பட்டவன் நான். என் கனவில் பெருமாள் சொல்லாமல் உன் கனவில் சொன்னாரா…? என்னிடமே கதை சொல்கிறாயா?“ என்று கோபத்தில் தலையை சீவிவிட்டால் என்ன செய்வது என தயங்கினான் மெய்காவலன். நவாப் செய்த காரியத்துக்கு, அவர் கனவில் கூட வருவதற்கு பெருமாள் விரும்பவில்லை என்று எப்படி புரிய வைப்பது என்று யோசித்தான் காவலன்.
நவாப்தான் தவறு செய்தான். அவன் மனைவி என்ன செய்வாள் பாவம். என்ன நடந்தாலும் சரி. என் சகோதரிக்கு உதவி செய்ததாக நினைத்துக்கொள்கிறேன். நவாப் என்ன செய்தாலும் பரவாயில்லை. பெருமாள் என்ன நினைக்கிறாரோ அதுதானே நடக்க போகிறது. என்ற தெளிவுடன் தைரியமாக நவாப்பிடம் தன் கனவைச் சொன்னான் காவலன்.
பொறுமையாக கேட்ட நவாப், வலியால் துடித்து அழுகிற தன் அன்பு மனைவிக்காக காவலன் சொன்னப்படி உற்சவர் சிலையை திரும்ப அதே இடத்தில் வைத்தார். கடுகு விதைத்தால் மறுநாளே வளர்ந்து விடுவதை போல உண்மையை நியாயத்தை கேட்டுக்கொண்ட நவாபுக்கு வரமாக அவரின் மனைவியின் வயிற்றுவலியை மறுநாளே நீக்கினார் திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவசப் பெருமாள். பெரிதும் மகிழ்ந்த நவாப் தோஸ்த்அலி, குணம் அடைந்த தன் மனைவியுடன் ஒருநாள் திருவட்டாறு ஸ்ரீஆதிகேசப் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்று, தங்கத்திலான தலைப்பாகையை பெருமாளுக்கு காணிக்கையாக தந்தார். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை வணங்கினால் வரங்கள் பல கிடைக்கும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved