வாகன சக்கரங்களில் எலுமிச்சை நசுக்குவது எதற்காக?
நிரஞ்சனா
சும்பன்-நிசும்பன் இருவரும் உடன் பிறந்த சகோதர்கள் பிரம்மனை நினைத்து கடும் தவம் செய்து, கருவில் உருவாகாத பெண்ணால்தான் தங்களுக்கு மரணம் நேர வேண்டும் என்கிற வரம் பெற்றவர்கள். கருவில் உருவாகாமல் எப்படி உயிர் ஜெனனம் ஆகும்? அதனால் சும்பனையும் நிசும்பனையும் யமனால் நெருங்கவே முடியவில்லை. இப்படிபட்டவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் எத்தனை யுகம் மாறினாலும் நாமும் உயிருடன் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் “ரக்த பீஜன்“ என்ற அசுரனும் இந்த அசுர சகோதர்களுடன் கூட்டு சேர்ந்தான்.
ரக்த பீஜனின் கூட்டணி, அசுர சகோதரர்களுக்கு பெரும் பலத்தை தந்தது. காரணம். ரக்த பீஜனின் உடலில் இருந்து ரத்தம் மண்ணில் சிந்தினால் எத்தனை ரத்த துளிகள் சிந்துகிறதோ அத்தனை ரக்த பீஜன்கள் உருவாவார்கள். அவனின் ரத்தத்திற்கு அப்படி ஒர் அற்புத சக்தி இருக்கிறது. இதனால் ரத்த பீஜனுக்கு அசுர சகோதரர்கள் தளபதி பதவியை தந்து கௌரவித்தார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் ரக்த பீஜனின் உடலில் கத்திபட்டு ரத்தம் வெளியேறியது. ஒவ்வோரு துளி ரத்தத்திற்கும் பல ரக்த பீஜன்கள் உருவானார்கள். இதனால் போரின் முடிவு தேவர்களுக்கு சாதகமாக இல்லாமல் போனது. தேவர்கள் குரு பகவானிடம் ஆலோசனை கேட்டார்கள்.
“இமயமலைக்கு சென்று ஆதிபராசக்தியை வணங்கி வேண்டினால், அன்னை நிச்சயம் காப்பாற்றுவாள்.“ என்றார் குருபகவான்.
குரு பகவானின் ஆலோசனையில் பேரில் இமயமலைக்கு சென்று சர்வலோகநாயகியை பிராத்தித்தார்கள். தேவர்களின் தவத்தை ஏற்று வானில் நட்சத்திரமாக அன்னை பவானி தோன்றி “கவலைவேண்டாம். உங்களை நான் காப்பாற்றுவேன்.“ என்று கூறி, பார்த்தவர் மயங்கும்படி அதிஅற்புத அழகான தேவதையாக உருவம் எடுத்தாள் அன்னை பவானி. அசுரர்கள் இருக்கும் ஊருக்குள் நுழைந்தாள். அழகான நந்தவனம் அமைத்து தேன் கலந்த குரலில் பாடல்களை பாடினாள் பவானி. அத்தேனினும் இனியக் குரல் அசுர சகோதரர்களின் காதில் எட்டியது. சரஸ்வதி தேவியே மயங்கும் இக்காந்த குரலுக்கு உரிய பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சும்பனின் ஆட்கள் குரல் வரும் திசையை நோக்கி சென்று பார்த்து மயங்கினார்கள். “இந்த அழகான பெண்ணை பற்றி நம் அரசரிடம் கூறினால் அரசர் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்.“ என்ற ஆவலில் அரண்மனையை நோக்கி ஒடினார்கள். பவானியை பற்றி சொன்னார்கள்.
இதை கேட்ட சும்பன் சும்மா இருப்பானா?. “அந்த பெண்ணை நான் திருமணம் செய்ய வேண்டும், இந்த விஷயத்தை அந்த அழகு தேவதையிடம் சொல்லி அழைத்துவா.“ என்று சுக்ரீவன் எனும் அசுர வீரனிடம் உத்தரவிட்டான் சும்பன். பவானியை பார்த்து விவரத்தை கூறினான் சுக்ரீவன். அதற்கு பவானி, “என்னை ஜெயிப்பவனையே திருமணம் செய்வேன்.“ என்று பதில் கூறி அனுப்பினாள்.
போர் படைகளுடன் பவானியை சந்தித்தான் சும்பனின் தளபதிகளில் ஒருவனான தூம்ரலோசன். அன்னை சக்தி தேவியான பவானி, தன் உடலில் இருந்து இன்னொரு பெண் சக்தியை உருவாக்கி அதற்கு “மகாகாளி“ என்று பெயர் சூட்டி போர்களத்திற்கு அனுப்பி வைத்தாள். காளிக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து போர் நீடித்தது. காளி கடும் கோபத்தோடு பத்ரகாளியாக மாறி தூம்ரலோசனையையும் அவனின் அறுபதாயிரம் படை வீரர்களையும் பஸ்பமாக்கினாள். இதை கேள்விப்பட்ட சும்பன், மறுபடியும் தன் இரண்டாவது தளபதியான சண்ட-முண்டர்களை பெரும் படையுடன் யுத்த களத்திற்கு அனுப்பி வைத்தான்.
போர்களத்தில் சண்டன்-முண்டனின் தலைகளை ஆவேசமாக வெட்டி வீசினாள் காளி. சும்பனும்- நிசும்பனும் ரக்த பீஜனிடம் போர் குறித்து ஆலோசித்தார்கள். அதற்கு, “என் ரத்தம் மண்ணில் சிந்தினாலும் பல உயிர்கள் உருவாகும். நானா அவளா என்று பார்த்து விடுகிறேன்.“ என்று வீர வசனம் பேசிவிட்டு போனான் ரக்த பீஜன். ரக்த பீஜனுக்கும் – காளிக்கும் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது காளியும் விடுவதாக இல்லை. தொடர்ந்து போர் நடப்பதை சற்றும் எதிர் பார்க்காத ரக்த பீஜன் வெறி பிடித்தவன் போல கண்மண் தெரியமால் போர் செய்து கொண்டிருந்தான். அவன் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தமும் பூமியில் சிந்தாதபடி ரணி சண்டிகை என்ற இன்னொரு சக்தியை பவானி உருவாக்கி ரக்த பீஜனின் ரத்தம் குடிக்கச்செய்தாள். கடைசியில் பவானியின் பல சக்தி தோற்றங்கள் ஒன்று கூடி அசுர சகோதரர்களை அழித்தது.
“ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை எனக்கு துணையாக இருந்த காளி தேவியே… இன்று முதல் நீ துர்கை என அழைக்கப்படுவாய். யார் உனக்கு எழுமிச்சை மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றுகிறார்களோ அவர்கள் கேட்கும் வரத்தை கொடுத்து அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருப்பாயாக.“ என்றார் அன்னை பவானி.
வாகனத்திற்கு சக்கரங்களில் எலுமிச்சை பழம் வைப்பார்கள். இதை சிலர் கிண்டலும் செய்து இருக்கிறார்கள். காற்றின் மேல் கோபம் கொண்டு சுவாசிக்காமல் இருந்தால் காற்றுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் சுவாசிக்காமல் மூச்சை பிடிப்பவனுக்கு தான் பாதிப்பு. அதேபோல்தான் சாஸ்திரத்தை நம்ப மறுத்தால் சாஸ்திரங்களுக்கா பாதிப்பு? கிரகணம் வரும் போது கர்ப்பஸ்திரிகளை மிக எச்சரிக்கையாக வைத்திருப்பார்கள். கிரகணத்தின் கொடிய கதிர்தாக்கத்தைப் பற்றி விஞ்ஞானம் அறிவதற்கு முன்னரே நம் முன்னோர்கள் அறிந்து எழுதி வைத்தார்கள். அதுபோல் துஷ்ட ஆவிகளின் சேஷ்டை வாகனத்தை பாதிக்கும் என்பதால் எலுமிச்சையை பழத்தை வாகன சக்கரத்தில் வைத்து நசுக்கி பலியிடுவார்கள். இதனால் வேறு எந்த ஒரு உயிர் பலியையும் அந்த வாகனம் வாங்காது. இதனால் அந்த வாகனத்திற்கு உரியவரை எந்த துஷ்ட சக்திகளும் அண்டவிடாமல் தடுத்து விடுவாள் துர்கை தேவி.
எலுமிச்சை வாசம் எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் துர்காதேவி அருள் புரிவாள். அவள் ஆசி இந்தால் துஷ்டசக்திகள் அண்டாது.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
பயன் உள்ள தகவல். கோயிலில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவதுபோல் வீட்டில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாமா?
துர்கைக்கு எதனால் எலுமிச்சை விசேஷமானது என்பதை விளக்கமாக எழுதி உள்ளீர்கள். இதுவரை யாரும் விளக்கமாக எழுதாத விஷயம் இது.