மூடன் பண்டிதன் ஆனான் – வியந்து போன அரசன்
விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 6
நிரஞ்சனா
முன்னொரு காலத்தில் சுதர்மன் என்றொரு அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எத்தனை முறை சொல்லி கொடுத்தாலும் கல்வி புத்தியில் ஏறாது. சின்ன மந்திரங்களும் கூட அவன் வாயில் நுழையாது. இதனால் அவனை ஊர்மக்கள் மடையன், மூடன் என்ற கேலி செய்தார்கள். அவனிடம் சக மாணவர்கள் பழகினாலும், “அவனிடம் பேசாதீர்கள்.. அவனுடைய மந்த புத்தி உங்களுக்கும் ஒட்டி கொள்ளப்போகிறது.“ என்று ஆசிரியர்களும் சுதர்மனின் காதுப்பட பேசி அவமானப்படுத்துவார்கள். இதை கேட்டு மனம் கலங்கிய சுதர்மன், “ஏன் இப்படி என்னை மூடனாக படைத்து கேலி பொருளாக்கினாய்…“ என்று கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரரிடம் கதறி அழுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டான்.
அவன் படும் கஷ்டத்தை பார்த்து மனம் கலங்கிய அந்த கோயிலின் குருக்கள், “சுதர்மா… ஏன் இப்படி தினமும் வருந்துகிறாய்? இது விதி பயன். எதற்கும் கலங்காதே. உனக்கு நல்ல நேரமும், இந்த ஊரே உன்னை அறிவாளி என்ற போற்றும் ஒரு காலமும் வரதான் போகிறது. மேற்கையே பார்த்து கொண்டிருந்தால் சூரிய உதயத்தை பார்க்க முடியாது. அதே போல், ஊரார் பேசும் கேலிப்பேச்சை கேட்டு கொண்டிருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. உனக்கு நல்ல வழியை நான் சொல்கிறேன். அதனை பின் பற்றி வா. உமாமகேஸ்வரரை நம்பிக்கையோடு வணங்கி விரதம் இரு. பிறகு பார் உன் வாழ்க்கையை.“ என்று ஆறுதல் மொழி சொன்னார் குருக்கள்.
இறைவனே நேரில் வந்து கூறுவது போல இருந்தது சுதர்மனுக்கு. உமாமகேஸ்வரரை மனதில் நினைத்து விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்தான். பிறகு குருக்கள் கூறியது போல கலைகளுக்கு அரசியான சரஸ்வதிதேவி சுதர்மன் நாவில் குடியேறினாள்.
அன்றிலிருந்து சாஸ்திரங்களையும் வேதத்தின் அர்த்தத்தையும் சரளமாக கூறி வந்தான். சுதர்மனின் கல்வி ஞானம் ஊர் முழுவதும் புயல் காற்று போல பரவியது. அந்த நாட்டின் அரசருக்கும் சுதர்மனை பற்றிய விவரம் தெரிந்தது.
“மடையன் மதியுகி ஆனானா? மந்தபுத்தி உள்ளவன் பண்டிதன் ஆனானா? ஆச்சரியமாக இருக்கிறதே. அவனை நான் பார்க்க வேண்டும். உடனே அழைத்து வாருங்கள். கிடைத்த செய்தி உண்மையா? என்ற ஆராய்ந்து பார்ப்போம்“ என்றார் அரசர்.
அரசக்கட்டளை ஏற்று சபைக்கு வந்தான் சுதர்மன். இராஜசபையில் பல வயதில் முதிர்ந்த பண்டிதர்களும் அனுபவம் மிக்க கவிஞர்களும் சுதர்மனை கேள்விகளால் துளைத்தார்கள். எல்லா கேள்விகளுக்கும் தயக்கமும் தாமதமுமின்றி பதிலுரைத்தான் சுதர்மன். எல்லா பண்டிதர்களும் அரசரும் சுதர்மனை போற்றினார்கள். “ஐயா சுதர்மரே… சரஸ்வதிதேவியை தங்கள் ரூபத்தில் இன்று பார்க்கிறோம். தாங்கள் நம் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம். தாங்கள் சிறந்த பண்டிதர்.“ என்ற புகழ்ந்து, பொன்னும் பொருளும் அள்ளிதந்தார் அரசர்.
இதுபோல் சேனன் என்ற அரசன் போர்களத்தில் எதிரியிடம் சண்டையிட்டு தோற்று, எங்கு தன்னையும் தன் மனைவியையும் கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில் காட்டில், தன் பத்தினியுடன் மறைந்து வாழ்ந்து வந்தான். இராஜயோக வாழ்க்கையை அனுபவித்த அரசனின் மனைவி, காட்டில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். அதை தன் கணவரிடம் சொல்லி வருந்தினாள். “ஏன் காட்டில் வாழ்வதாக நினைக்கிறாய். இதை அரண்மனையாக நினைத்து விடு. நேற்றுவரை நீ ஒரு நாட்டுக்கு அரசி. இப்போது இந்த காட்டுக்கு அரசி என்று சமாதானம் கொள். சீதாதேவி உன்னை போல் ராஜகுடும்பத்தில் பிறந்தவள்தானே. அவள் உன்னை போலவா வருந்தினாள்?. என்றான் அரசன்.
தன் கணவரின் பேச்சை கேட்டு இன்னமும் அதிகமாக வேதனை அடைந்தாள். “அப்படி என்றால் என்னையும் இராவணனை போல ஒருத்தன் தூக்கி செல்வானா?” என்றாள் விரக்தியாக.
“உன்னை தூக்கி செல்ல வேண்டுமெனில் அவன் இராவணனைவிட பலசாலியாக இருக்க வேண்டும். அதனால் பயப்படாதே. உன் உடல் எடை உன்னை காப்பாற்றும்.“ என்றான் அரசன் வேதனையான நேரத்திலும் வேடிக்கையாக. அதை கேட்டு சிரித்துவிட்டாள் அரசி. அவள் இப்படி மகிழ்ச்சியாக சிரித்து பல நாட்கள் ஆனதால் அரசருக்கும் அவள் சிரித்த முகம் மகிழ்ச்சியை தந்தது.
ஒருநாள், அரசரின் துன்பம் தீரும் நாள் வந்தது. அதுவும் ஒரு சித்தர் வடிவில். யார் அந்த சித்தர்?
(பார்ப்போம் காத்திருங்கள்)
விரதங்களும் அதன் கதைகளும் முந்தைய பதிவுகள்
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
I think these stories are meant for children.