பராசக்திக்கே துன்பம் தந்த செய்வினை
எந்த யோகத்தையும் அனுபவிக்கவிடாத செய்வினை
பகுதி – 2
முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும்
நிரஞ்சனா
துஷ்ட மந்திரங்களை உச்சரித்து அரசருக்கு செய்வினை செய்தார் விஷ்ணுகுப்தர். இதனால் அரசருக்கு திடீரென உடல்நலம் பாதிப்படைந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து அரசருக்கு சிகிச்சை செய்தும் அரசர் தனநன்தன் உடல்நலம் தேரவில்லை. மேலும் மேலும் உடல்நிலை மோசமாக போய்க் கொண்டே இருந்தது. கடைசியில் மருத்துவர்களால் அரசர் கைவிடப்பட்டார். நாட்டை சரியாக யாருக்கும் பாதுகாக்க தெரியாததால், விஷ்ணுகுப்தன், அறிவு தந்திரத்தாலும் மாந்தீரிக சக்தியாலும் நாட்டை தன் வசப்படுத்தினார். தன் நண்பனான சந்திரகுப்தனை அந்நாட்டிற்கு அரசனாக்கினார் விஷ்ணுகுப்தன். சந்திரகுப்தன் அரசனாக இருந்தாலும் முழுகட்டுபாடு விஷ்ணுகுப்தனிடம்தான் இருந்தது நாடு. இருந்தாலும் அரசை நல்வழி நடத்தி, நாட்டை சிறப்பாக வைத்திருந்தார் விஷ்ணுகுப்தன்.
விஷ்ணுகுப்தரின் மாந்தீரிகத்தால்தான் அரசர் தனநன்தன் பதவியை இழந்து உடல்நலம் பாதிப்படைந்தார் என்பதை மக்கள் பிறகு அறிந்தார்கள். ஆனாலும் தனநன்தனைவிட சந்திரகுப்தனின் ஆட்சி நன்றாக இருந்ததால் மக்கள் தனநன்தனை மறந்தார்கள். மகரிஷி சணகரின் மகன்தான் இந்த விஷ்ணுகுப்தர். விஷ்ணுகுப்தரைதான் வரலாறு சாணக்கியர் என்று அழைக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படி எதிரிகளை அடக்க வேண்டும் என்று ராஜதந்திரத்தை பல பகுதிகளாக எழுதியிருக்கிறார் அவர். அதில் பதினான்காம் பாகத்தில் எதிரிகளையும் துரோகிகளையும் தீர்த்துகட்டுவதற்கு ரகசிய வழிகளையும் அத்துடன் குறிப்பாக மாந்தீரிக முறைகளையும் சொல்லி இருக்கிறார் சாணக்கியர். பலம் கொண்ட எதிரியை அழிக்க மாந்தீரிகமும் செய்வினையும் கூட தவறில்லை, அதுவும் ஓர் அரசியல் தந்திரம் என்கிறார் சாணக்கியர்.
இப்படி அரசர்கள் மட்டும் செய்வினையால் பாதிப்பு அடையவில்லை, மகான்களும் மாந்தீரிக செய்வினையால் துன்பப்பட்டு இருக்கிறார்கள்.
ஸ்ரீஆதிசங்கரருக்கு மக்கள் மத்தியில் பெரும் புகழ் பரவி வருவதை பொறுக்க இயலாத அபிநயகுப்தர் எனும் மந்திரவாதி, ஸ்ரீஆதிசங்கரருக்கே செய்வினை செய்ததால், ஸ்ரீஆதிசங்கரர் உடல்நலம் பாதிப்படைந்தார். காக்கும் கடவுளான அன்னை பராசக்தியும் செய்வினையால் பாதிப்படைந்திருக்கிறார். மகிஷாசுரனிடம் போரிட்டாள் சக்திதேவி. கடுமையான யுத்தமாக இருந்தது. அசுரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் மாந்தீரிகத்தில் வல்லவனான விசுக்ரனை அனுப்பி பராசக்திக்கு செய்வினை செய்ய சொன்னான் பண்டாசுரன். விசுக்ரன், போர்களத்திற்கு சென்று விக்னயந்திரத்தை தகடில் வரைந்து துஷ்டசக்தியின் மந்திரத்தை உச்சரித்து அன்னை பராசக்தியின் அரண்மனையில் மறைத்து வைத்தான். இதனால் சக்திதேவியின் படையினர், வலு இழந்து விழுந்தால் எழுந்திருக்க முடியாதபடி அளவு பலவீனம் அடைந்தார்கள்.
அன்னை பராசக்திக்கு உதவிய பல ஜீவராசிகள் உயிர் இழந்தன. எதனால் இப்படி ஒர் விபரீதம் நடக்கிறது? என்பதை அம்பிகை தன் தவஞானத்தால் பண்டாசுரன், விக்னயந்திரத்தில் செய்வினை செய்திருப்பதை அறிந்தாள். செய்வினை தகடை தேட சொன்னாள். பலர் தேடியும் அந்த யந்திரம் கிடைக்கவில்லை. கடைசியாக விநாயகப் பெருமானிடம் அந்த யந்திரத்தை தேடி எடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தாள் அம்பிகை. யாராலும் கண்டுபிடிக்க முடியாத மாய விக்னயந்திரத்தை விநாயகர் சர்வசாதாரணமாக கண்டுபிடித்து அந்த யந்திரத்தை பொடி பொடியாக உடைத்து, கடலில் வீசி எறிந்தார். இதனால் விக்னயந்திரத்தை செயல் இழக்கச் செய்த விநாயகருக்கு விக்னேஸ்வரர் என்று பெயர் வந்தது. பிறகு சக்திதேவியும் அசுரர்களை அழித்து வெற்றி பெற்றார்.
இப்படி செய்வினையால் பலர் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
இதற்கு தீர்வுதான் என்ன?
மகான்கள் செய்வினையால் பாதிப்பு பெற்றாலும் பெரிய பாதகத்தை அடையவில்லை.
ஆனால் சாதாரண மனிதரான சாணக்கியனால் ஏவப்பட்டு துஷ்ட சக்தியின் தாக்குதலை தாங்க முடியாமல் அரசர் தனநன்தன் பெரிய பாதகத்தையே அடைந்தார். செய்வினையால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு பரிகாரம் சோட்டானிக்கரை பகவதி அம்மன், ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி. இதுபோல் உக்கிரமான தெய்வங்களை வணங்கினால் பில்லி சூனியத்தால் வரும் பெரிய பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். இவர்களை வணங்கு முன் விநாயகர் வழிபாடும் உங்கள் குல தெய்வத்தையும் வணங்கினால்தான் எடுக்கும் முதல் முயற்ச்சி கை கொடுக்கும். இல்லை என்றால் ஆரம்பிக்கும் முன்பே பல தடங்கல் ஏற்படும். செய்வினை பாதிப்பில் இருந்து வெளிவரவே முடியாது.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
இதுவரை யாரும் சொல்லாத அருமையான விஷயம் உள்ள விறுவிறுப்பான தகவல்.