சாய்பாபாவின் அருளாசி – மகாராஜாவான போலீஸ் கான்ஸ்டேபில்
மகான் சீரடி பாபா வரலாறு
பகுதி 5
நிரஞ்சனா
முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்
பக்கானீரில் என்ற ஊரில் கேப்டர்ஹடே என்பவர் சிறந்த பாபா பக்தர். 24 மணி நேரமும் பாபாவின் நினைவாகவே இருப்பார். தான் சாப்பிட்டால் தன் அருகே பாபாவும் உட்கார்ந்து சாப்பிடுவதாக நினைப்பார். பாபாவை எப்படியாவது நேரில் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். “சீரடிக்கு போய்வர இரண்டு மூன்று நாள் ஆகிவிடும். நேரமும் இல்லை. அதற்கான வசதியும் இல்லையே“ என்று வருந்தி கொண்டு இருந்தார் கேப்டர்ஹடே.
வறுமையில் இருந்த காகாஜி, பாபாவை தரிசித்த பிறகு லட்சாதிபதியானார்.. பெட்டி நிறைய பணத்துடன் பாபாவை சந்தித்து பாபாவுக்கே நன்கொடை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆனால் பாபா அதை ஏற்காமல் காகாஜி கொடுத்த பணத்தை வாரிவாரி மக்கள் மீது வீசினார். “எனக்கு கொடுத்த பணத்தை நான் யாருக்கு வேண்டுமானாலும் தருவேன்“ என்றார் பாபா. இப்படி பாபாவை பற்றிய தகவல் எல்லாம் கேப்டர்ஹடே கேள்விப்பட்டவுடன், இன்னும் பாபாவின் மேல் அதிகமான நம்பிக்கை ஏற்பட்டது. காகாஜிக்கு கிடைத்த விமோசனம், தனக்கும் கிடைக்காதா? என்று ஏங்கினார்.
“எப்படியாவது பாபாவிடம் ஆசி பெற வேண்டும், பாபாவின் ஆசிர்வாதம் மட்டும் கிடைத்துவிட்டால் அகலிகைக்கு ஸ்ரீராமரால் பாவ விமோசனம் கிடைத்தது போன்று, என் கஷ்டங்கள் எல்லாம் நீங்கிவிடும்“ என்ற நம்பிக்கை மனதில் ஆழமாக இருந்தது கேப்டர்ஹடேவுக்கு.
ஒருநாள் அவருடைய நண்பர், “நான் சீரடிக்கு சென்று பாபாவை பார்க்க போகிறேன்.“ என்றார். அதற்கு கேப்டர்ஹாடே தன் நண்பரிடம், “எனக்கு ஒரு உதவி செய். பாபாவிடம் இந்த ஒரு ரூபாயை கொடுத்து ஆசிபெற்று அவர் கைகளால் திரும்ப இந்த ஒரு ரூபாயை வாங்கி வா.“ என்றார் கேப்டர்ஹாடே.
“சரி அப்படியே செய்கிறேன்“ என்ற நண்பர், பாபாவிடம் சென்று தரிசித்து ஒரு ரூபாயை கொடுத்து ஆசி பெற்று திரும்ப அதை தன் நண்பரிடமே திரும்ப கொடுத்தார். என்ன ஆச்சரியம்… சூரியனை கண்டு பனி விலகுவது போல, கேப்டர்ஹாடேயின் கஷ்டங்கள் விலக ஆரம்பித்தது.
தாஸ்கணு என்பவர் பாபாவின் பக்தர். அவருக்கு திடீர் என்ற போலீஸ் வேலை போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தார். “திக்கற்றவனுக்கு தெய்வம்தானே துணை“ என்று பாபாவை தரிசிக்க வந்தார். தன் மன கஷ்டத்தை பாபாவிடம் கூறி அழுதார். “நான் என்ன செய்வேன் பாபா. இனி என் குடும்பத்திற்கு வருமானம் இல்லாமல் என் குடும்பம் அவதிப்படுமே.“ என்று கூறி பாபாவிடம் கதறி அழுதார் தாஸ்கணு.
அதற்கு பாபா சிரித்துவிட்டு, “கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்க்கு அலையலாமா தாஸ்கணு?. அந்தண குலத்தில் பிறந்தவன் நீ. உனக்கு இனிமையான குரலும், எல்லா வகையான புராணகதைகளும் சொல்கிறாய். திறமை உள்ள நீ எதற்காக அடுத்தவனுக்கு அடிமை தொழில் செய்ய நினைக்கிறாய். கலாகாலஷேபம் செய். திறமை உள்ளவனை இந்த உலகம் தன் தோலின் மேல் தூக்கி வைத்து கொண்டாடும். நீ ராஜாவாக திகழ்வாய். சென்று வா.“ என்றார் பாபா.
இருந்தாலும் தாஸ்தணு மனம் சாந்தி பெறவில்லை. தாஸ்கணு, தன் குடும்ப கஷ்டத்தை பாபாவின் மீது கோபமாக காண்பித்தார். “பாபா… உன்னை நம்பி எல்லாமல் போச்சு. நீ எதற்காக இருக்கிறாய்.? பக்தர்களுக்கு ஆலோசனை கூறவா? அல்லது அவர்களின் கஷ்டத்தை போக்கவா?“ என்றார்.
கவலையில் இருப்பவர்களிடமும் சந்தேகம் இருப்பவர்களிடமும் இறைவனே நேரில் வந்தாலும் நம்பமாட்டார்கள். உதாரணத்திற்கு, ஆதிசங்கரர் பராசக்தியை கடும் தவம் செய்து வரவழைத்து, “நான் விரும்பும் ஊரில் தாயே தாங்கள் நிலைத்திருக்க வேண்டும்.“ என்றார். “அப்படியே ஆகட்டும். நீ முன்னே செல். நான் உன் பின்னே வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ எந்த இடத்தில் என்னை திரும்பி பார்க்கிறாயோ அந்த இடத்தில் நான் நிலைத்து நின்றுவிடுவேன்.“ என்றாள் மகாசக்தி. ஆதிசங்கரரும் சக்திதேவியின் நிபந்தனையை ஒப்பு கொண்டு சென்றார். தேவி தன்னை பின் தொடர்ந்து வருகிறாளா? என்பதை அம்பிகையின் கால் கொலுசொலியை கவனித்துக் கேட்டுக் கொண்டே முன்னே நடந்தார் ஆதிசங்கரர். ஒரு குறிபிட்ட தூரம் வந்த உடன் அம்பிகையின் கொலுசொலி கேட்கவில்லை. “அம்பிகை பின் தொடர்ந்து வரவில்லையோ“ என்று சந்தேகம் கொண்ட ஆதிசங்கரர், திரும்பி பார்த்துவிட்டார். ஆனால் அன்னை ஆதிபராசக்தி வந்துகொண்டுதான் இருந்தார். தன்னுடைய நிபந்தனையை மீறி ஆதிசங்கரர் திரும்பி பார்த்ததால் அம்பிகை அந்த இடத்திலேயே நிலைபெற்று சிலையாக நின்றாள்.
தன்னை வருத்தி தவம் இருந்து பக்தியை செலுத்தினாலும் சில சமயத்தில் இறைவன் மேல் முழுமையான நம்பிக்கை வைக்க – பக்தி செலுத்த – அன்பு காட்ட மறந்து விடுகிறோம். இதனால் நம் முன் ஜென்ம கொடுவினை தன் வேலையை காட்ட நாமே சந்தர்ப்பம் தந்து விடுகிறோம். ஆதிசங்கரரை போல் பாபா கூறிய வார்த்தையை நம்பாமல் பாபாவிடமே புலம்பி கொண்டு இருந்தார் தாஸ்கணு. “நான் உன் மீது கோபப்படவில்லை தாஸ்கணு. உன் விதி உன்னை இப்படி பேச வைக்கிறது. ஆனால் தெய்வ நம்பிக்கை முழுவதுமாக உள்ளவனுக்கு இந்த உலகம் அவன் கையில் என்பதை எக்காலத்திலும் மறந்துவிடாதே. நான் சொன்னபடி நீ நம்பிக்கையோடு கலாகாலஷேபம் செய். நான் சொல்வது போல் நீ சிறப்பாக வருவாய்.“ என்றார் பாபா.
பாபாவின் அருட்பார்வையில் தாஸ்கணுவின் கேடுகாலம் விலகி நின்றது. அதனால் ஸ்ரீசாய்பாபா சொல்வது தாஸ்கணுவுக்கு உண்மையென உணர்த்தியது. ஊர்ஊராக சென்று ஹரிபுராண கதைகளை மிக அழகாகவும் தெளிவாகவும் சொன்னார் தாஸ்கணு. அவர் புராணம் சொல்வதை கேட்கும் போது அந்த ஹரிபகவானே நேரில் வந்து சொல்வதை போல இருக்கும் என்று மக்கள் பேச தொடங்கினார்கள். தாஸ்கணுவின் புகழ் பரவியது. பல நாடுகளின் அரண்மனை வாசல் பாபாவின் அருள்பெற்ற தாஸ்கணுவுக்காக திறந்தது. பாபா சொன்னது போல் தாஸ்கணுக்கு “ஹரிபாகவத மகாராஜ்“ என்ற பட்டம் கொடுத்து கௌரவித்தார்கள் பல மன்னர்கள்.
முன்பு இருந்ததை விட இப்போது வசதியும், புகழும் அதிகமாகவே கிடைத்தது. “என்னை போல் யாரும் பேச முடியாது – பாகவத கதையும் சொல்ல முடியாது.“ என்ற ஆணவப்பேய் தாஸ்கணுவின் மனதில் குடி கொண்டது. இதை பாபாவும் அறிந்தார். இருந்தாலும் பாபா அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார்.
ஒருநாள் –
தொடர்ச்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved