Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

சாம்பிரானியுடன் குங்குலியம்.

நிரஞ்சனா

கலயனார் என்பவர் தினமும் ஈசனையே வணங்கி வருவார்.  சிவலாயத்தில் சாம்பிரானி போடும் போது குங்குலியத்தையும் தன் பங்குக்கு கொடுத்து போட சொல்வார். குங்குலியத்தை ஆலயத்திற்கு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். பல வருடங்கள் இந்த வழக்கம் தொடர்ந்தது. தங்கத்தை தீயில் காட்டி தட்டி அழகான ஆபரணம் செய்வார்கள். வைரத்தை பட்டை தீட்டினால்தான் பலபலக்கும். இந்த இரண்டுக்கும் சோதனை வந்தாலும் முடிவில் மதிப்பு அதிகமாக கிடைக்கும்.

அதேபோலதான் இறைவன் பக்தர்களை சோதித்து பார்ப்பதும். ஈசனின் திருவிளையாட்டில் இருந்து யார்தான் தப்ப முடியும்?.

கலயனாருக்கு சோதனை காலம் ஆரம்பமானது. நிலத்தை விற்று இறைபணியை செய்து வந்தார். வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் விற்று, சிவன் கோயிலுக்கு குங்குலியத்தை வழங்கி வந்தார். கலயனாரின் மனைவி, தன் கணவரின் போக்கை கண்டு மனம் கலங்கினாள். “தீய பழக்கம் இருந்தால் உறவினர்களையும் ஊரையும் கூட்டி நியாயம் கேட்கலாம். ஆனால் இவரோ இறைவனின் மீது அதிக பக்தியும் அன்பும் அல்லவா வைத்திருக்கிறார். தெய்வத்திற்காக செய்யும் செலவை எப்படி தடுத்து நிறுத்துவது? அப்படி செய்தால் சிவசாபம் அல்லவா வந்து சேரும். எல்லாம் விதியின் விளையாட்டு.“ என்று தன் தோழியிடம் கூறி வருந்தினாள்.

குழந்தைகள் பசியால் வாடியதை கண்டு மனம் பொருக்காத கலயனாரின் மனைவி, தான் அணிந்திருந்த மஞ்சள் கயிற்றில் இருந்த மாங்கல்யத்தை தன் கணவரிடம் கொடுத்து, “இதை விற்று அரிசி மளிகை பொருட்களை வாங்கி வாருங்கள்.“ என்றாள்.

அவரும் சரி என்று கூறி அந்த மாங்கல்யத்தை வாங்கி கொண்டு நடந்து சென்றார். சிறிது தூரத்தில் ஒரு சிவாலயம் கண்ணில் படடது. “அடடா…எப்படி மறந்தேன். இன்று சோமவாரம் ஆயிற்றே. ஈசனுக்கு குங்குலியம் தர வேண்டுமே. என்ன செய்வது?.“ என்று சிந்தித்து கொண்டு இருக்கையில் ஒரு வியபாரி, குங்குலியத்தை வீதியில் விற்று கொண்டு வந்தான். அவனிடம், “அய்யா… என்னிடம் தங்க மாங்கல்யம் இருக்கிறது. அதை வைத்து கொண்டு அந்த விலைக்கு குங்குலியத்தை கொடுங்கள்.“ என்றார் கலயனார்.

குங்குலியத்தை வாங்கி கொண்டு நேராக சர்வேஸ்வரன் ஆலயத்திற்கு சென்று குங்குலிய புகையை ஆலயம் முழுவதும் மனம் விசும் படி போட்டு கொண்டு வந்தார்.

சிறு குழந்தையிடம் பொம்மை கிடைத்தால் தன் தாயை கூட மறந்து விளையாடுவதை போல, தன் மனைவி எதற்காக மாங்கல்யத்தை தந்தாள் என்பதையும் மறந்து இறைபணியை மும்முரமாக செய்து முடித்தார். பிறகுதான் நினைவு வந்தது. உணவு பொருட்களை வாங்காமல் வீட்டுக்கு சென்றால் மனைவி திட்டுவாள். அதனால் வீட்டிற்கு போகாமல் கோயில் மண்டபத்திலேயே உறங்கினார்.

நேரம் செல்ல செல்ல தந்தையை காணாததால் குழந்தைகள் கவலை அடைந்தார்கள். கலயனாரின் மனைவி பதறினாள். கணவன் வராததால் கலங்கி அழுதாள். சிவபெருமான் தன் பக்தனை சோதித்தது போதும் என கருதினார். கலயனாரின் தொண்டுக்கு மகிழ்ந்தார். சிவபெருமானின் பேரருளால் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

கலயனாரின் மண் வீடு மாளிகையானது. பொன் – பொருட்களும் உணவு பொருட்களும் பழ வகைகளும் குவிந்தது. இதனை கண்ட கலயனாரின் மனைவி ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தாள். இது என்ன மாயம்? என்று மகிழ்ந்தாள். அதே சமயம், அப்போது சிவலாய மண்டபத்தில் உறங்கி கொண்டு இருந்த கலயனார் கண் விழித்து பார்த்தார். “வீட்டுக்கு செல்வோம். இன்று வீட்டில் மனைவி ஆத்திரத்தில் என்ன சொல்லி திட்டினாலும் சரி. சிவபெருமான் என்ன செய்ய விரும்புகிறாரோ அதுவே நடக்கட்டும்.“ என்கிற முடிவோடு வீட்டை நோக்கி நடந்தார்.

கலயனாரின் மண் வீடு மாளிகையான விஷயம் அவருக்கு தெரியாததால் தன் வீட்டை வெகு நேரமாக தேடினார்… தேடினார் தேடிக்கொண்டே இருந்தார். பிறகு நடந்த அதிசயத்தை ஊர்மக்கள் கலயனாரிடம் கூறி வீட்டை காட்டினார்கள்.

இறைவனின் மீது கொண்ட அசைக்க முடியாத அன்பால் பக்தியால் கலயனாராக இருந்தவர் “குங்குலியக் கலய நாயனார்“ என்று அழைக்கப்பட்டார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் என சிறப்பை பெற்றார்.

திருக்கோயிலிலோ வீட்டிலோ சாம்பிரானி புகை போடும் போது அதில் சிறிது குங்குலியத்தையும் போட்டால், அந்த வாசனைக்கு செல்வங்கள் பெருகும். வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகும்.

யாக குண்டத்தில் குங்குலியத்தை போட்டால் செய்த யாகத்திற்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

  ©2011 bhakthiplanet.com All Rights Reserved

Posted by on Apr 11 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »