கொதிக்கும் உணவில் சாய்பாபா செய்த அற்புதம்
மகான் சீரடி பாபா வரலாறு
பகுதி 6
நிரஞ்சனா
முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்
தாஸ்கணு பாபாவிடம், “நான் புனித நதிகளை தரிசிக்க போகிறேன். எனக்கு ஆசி கூறி அனுப்புங்கள்.“ என்றார். கங்கை, காவேரி போன்ற பல புனிதநீரை பாபா தன் கால் பாதத்திலேயே வரவழைத்தார். அந்த புனிதநீரை மக்கள் எல்லோரும் தலையில் தெளித்து கொண்டார்கள். அந்த இடத்திற்கு “பிரயாகை நதி“ என்று பெயர் வைத்தார்கள்.
ஒருநாள், ஈஷா உபநிஷத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்து கொண்டு இருந்தார் தாஸ்கணு. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் தாஸ்கணுவே விழித்து கொண்டு இருந்தார். பலரிடமும் கேட்டு பார்த்தார். எல்லோரும் சொன்ன ஒரே பதில், “எனக்கு தெரியாது.“ என்பதுதான். “ஸ்ரீசாய்பாபாவிடமே இதை பற்றி கேட்போம்.“ என்று முடிவெடுத்தார். சாய்பாபாவை சந்தித்து தன் சந்தேகத்தை கூறினார் தாஸ்கணு.
“நீ உன் நண்பர் காகாசாஹேப் வீட்டுக்கு போ. அங்கு வேலை செய்யும் வேலைகார பெண்மணி உன் சந்தேகத்தை தீர்த்து வைப்பாள்.“ என்றார் சாய்பாபா. சாய்பாபாவை தரிசிக்க வந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். “என்ன இது. ஈஷா உபநிஷத்திற்கு ஒரு வேலைகாரி விளக்கம் தருவாளா?. பாபா தாஸ்கணுவை கிண்டல் செய்கிறார்.“ என்று அவர்களுக்குள் கிசு கிசுத்தார்கள். “நம் ஸ்ரீசாய்பாபா எதை சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும்.“ என்ற ஓரே நம்பிக்கையுடன் மறுநாள் பம்பாய் புறப்பட்டு, வில்லேபார்லே நகரில் தங்கி இருக்கும் காகாசோஹப் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி இருந்தார் தாஸ்கணு. ஒருநாள் –
“கருஞ்சிகப்பு வண்ண புடவை அது எவ்வளவு கவர்ச்சியாய் இருக்கிறது. அதில் பூ வேலைபாடுகள்தான் எத்தனை அழகு. முந்தானைக்கு ஏற்ற நிறங்களை பார்க்கவே அழகு“ என்ற அர்த்தம் தரும் சமஸ்கிருத பாடலை இனிமையான குரலில் யாரோ ஒரு பெண் பாடுவதை கேட்டு அசந்து போனார் தாஸ்கணு. பாடல் வரும் பக்கமாக போய் பார்த்தார். வியந்து நின்றார். “ஆமாம்… சாய்பாபா கூறியது போல் இத்தனை நாள் ஈஷாஉபநிஷத்தில் அர்த்தம் தெரியாமல் விழித்த வரிகளுக்கு சாதாரண வேலைகார பெண் பாடியே விளக்கம் அளித்துவிட்டாளே.“ என்று ஆனந்தம் அடைந்தார். இதற்காகவே அந்த பெண்ணுக்கு விலை உயர்ந்த புடவையை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புடவையை வாங்கி கொடுத்தார் தாஸ்கணு்.
வேலைகார பெண் அந்த புது புடவையை தன் வீட்டிற்கு எடுத்து சென்று அதை உடுத்தி கொண்டு தாஸ்கணுவிடம் காட்டிவிட்டு சென்றாள். மறுநாளும் அந்த புது புடவையில்தான் அவள் வருவாள் என்ற நினைத்தார் தாஸ்கணு. ஆனால் பழைய அழுக்கான புடவையில் வந்தாள் வேலைகாரி. “ஏன் புது புடவை அணியவில்லை.“ என்றார் தாஸ்கணு.
“அய்யா… புது புடவை கட்டினால் புடவை அழுக்காகும் என்ற எண்ணத்தில் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. கருத்தும் வேலையின் மீது இருக்காது. ஒருவன் தன் உடை கறைபடியாமல் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவான் என்றால் அவன் தன் வாழ்நாளில் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யவே மாட்டான். உழைப்பாளருக்கு உடை அழகல்ல. உழைப்பே அழகு. அதனால் எனக்கு வேலை செய்ய ஏற்றது இந்த பழைய புடவைதான் அய்யா.“ என்றாள் வேலைகாரி.
“அம்மா.. நீ வேலைகாரி அல்ல. வேலைகார வடிவில் வந்த வேதாந்தி. என்னைவிட இந்த உலகத்தில் யாரும் இப்படி கதாகாலஷேபம் செய்ய முடியாது என்று நினைத்தேன். ஆனால் நீயோ எல்லாம அறிந்தும் அமைதியாக இருக்கிறாய். ஒருவனின் உயர்வுக்கு அடக்கமும் பணிவும்தான் நல்லது. அப்படி இருந்தால்தான் வாழ்வில் ஏற்றமும் நல்ல மாற்றமும் வரும் என்பதை உன் மூலமாக என் சாய்பாபா உணர்த்தினார் அம்மா.“ என்றார் தாஸ்கணு.
அடுத்து –
கொதிக்கும் சாதத்தில் ஒரு அதிசயம் செய்தார் நம் ஸ்ரீசாய்பாபா.
அது என்ன? –
பாபா எந்த உணவு தயார் செய்தாலும் ருசியாக இருக்கும். அந்த அளவு பாபாவின் கைப்பக்குவம் இருக்கும். ஒருநாள் பாபாஉடன், கேல்கர் என்பவர் இருந்தார். அப்போது கேல்கரை பார்த்து “புலவு அடுப்பில் கொதிக்கிறது, உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து வா“ என்றார் பாபா. எரியும் நெருப்பின் மேல் புலவு கொதித்து கொண்டு இருந்தது. மூடியை திறந்து பார்த்தார் கேல்கர். திறந்தவுடன் சூடான அனல் ஆவி கேல்கரின் கைவிரல் மீதுப்பட்டது. ஒரு நிமிடம் கூட கொதிக்கும் அண்டாவின் பக்கத்தில் நிற்க முடியவில்லை கேல்கரால்.
அந்த பெரிய அண்டாவில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடும் அளவுக்கு புலவு தயராகிக்கொண்டிருந்தது. புலவு சுவை சரியாக இருக்கிறதா என்று பார்க்க கேல்கர் சுற்றி சுற்றி கரண்டி ஒன்றை தேடினார். எங்கும் ஒரு கரண்டியும் இல்லை. என்ன செய்வது? பாபாவிடம் எப்படி போய் கரண்டி வேண்டும் என்று கேட்பது? என்று ஏனோ அவர் பாபாவிடம் சென்று பேச தயங்கினார். அப்போது அந்த இடத்திற்கு பாபாவே வந்துவிட்டார். “என்ன கேல்கர்… ஒன்றும் சொல்லாமல் இந்த அண்டாவின் அருகேயே நிற்கிறாய். ருசி எப்படி இருக்கிறது?“ என்றார் பாபா.
“எல்லாம் சரியாகதான் இருக்கும் பாபா“ என்றார் கேல்கர்.
“இருக்கும் என்று சந்தேகத்துடன் சொல்வதற்கா உன்னை ருசி பார்க்க அனுப்பினேன். எடுத்து வாயில் போட்டு பார்த்து சொல் கேல்கர்“ என்றார் ஸ்ரீசாய்பாபா.
“மன்னிக்க வேண்டும் பாபா. புலவு எடுத்து ருசி பார்க்க கரண்டியில்லை. கொதித்து கொண்டு இருக்கின்ற புலவில் கைவிட்டால் என் கை புலவில் கறியாகிவிடும் போல இருக்கிறது பாபா.“ என்றார் கேல்கர். சாய்பாபா, கேல்கரின் நகைச்சுவையான பேச்சை கேட்டு பலமாக சிரித்தார். பிறகு பாபா ஒரு அதிசயம் நிகழ்த்தினார்.
உணவு கொதிக்கும் அண்டாவில் பாபா சர்வசாதாரணமாக தன் கையைவிட்டு புலவு நன்றாக கிளறி ஒரு கைபிடி புலவு அனல் பறக்க எடுத்து கேல்கருக்கு கொடுத்தார் பாபா. இதை கண்ட கேல்கர் அதிர்ச்சியடைந்து பாபாவின் கைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்று பதறினார். பாபாவின் கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. “இந்தா இதை சாப்பிட்டு பார்“ என்று தன் கைபக்குவத்தில் தயாரித்த புலவை ஆசையாக கேல்கரிடம் நீட்டினார் பாபா.
ஒரு சமயம் –
ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் கடும் போர் நடந்தது. அந்த நேரத்தில் ராட்சத புயல் ஒரு பக்கம் இவர்களை பாடாய்படுத்தி கொண்டு இருந்தது. பலத்த காற்றாலும் மழையாலும் அலைகளாலும் பல கப்பல்கள் இயற்கை சீற்றத்தை தாங்க முடியாமல் கடலில் முழ்கியது. ஒரு கப்பலில் இருந்த கேப்டன் ஜஹாங்கீர் ஜிப்ராமிதர்வாலா என்பவர் பாபாவின் தீவிர பக்தர்.
இன்னும் சில விநாடியில் மற்ற கப்பல்கள் கடலில் முழ்கியது போல நம்முடைய கப்பலும் இந்த ராட்சத அலையால் முழ்கிவிடும் என்று அவர் மனம் பதறி தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பாபாவின் படத்தை எடுத்து கண்ணீர் மல்க அழுது, “சாய்பாபா… என்னை காப்பாற்றுங்கள்.“ என்றார் கப்பல் கேப்டன். ரஷ்யாவில் இருக்கும் தன் பக்தனின் அபயகுரல், எங்கோ ஷீரடி கிராமத்தில் இருக்கும் பகவான் ஸ்ரீசாய்பாபாவுக்கு கேட்டது. அப்போது –
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
பக்தி பிளானட்டில் சாய்பாபாவின் கட்டுரை தொடர் சிறப்பாக உள்ளது. இந்த வாரம் இன்னும் சிறப்பாக இருந்தது.
தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது நிரஞ்சனா. பாபாவின் ஆசிகள் உங்களுக்கும் உண்டு.