குருவின் சதி தப்பித்த ஸ்ரீராமானுஜர்
நிரஞ்சனா
ஸ்ரீ ராமானுஜர், குரு சேவையில் பிரியம் கொண்டவர். தன் குரு யாதவப் பிரகாசருக்கு அன்று எண்ணைய் தேய்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குரு தன் சிஷ்யர்களின் ஒரு கேள்விக்கு சரியான உதாரணமாக கூறாமல் அறுவெறுப்பான உதாரணத்தை தன் சீடர்களுக்கு உபதேசித்துவிட்டார். நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, குருவாக இருந்தாலும் இப்படி அருவருக்கத்தக்க உபதேசம் செய்தால் எப்படி சகித்து கொண்டு இருப்பது? என்ற எண்ணத்தில் சரியான தெய்வீகமான பதிலை கூறி குருவையே மிஞ்சினார் ராமானுஜர்.
இதை சிறிதும் எதிர்பார்க்காத குரு யாதவப் பிரகாசர், “இனி நீ என்னிடம் சிஷ்யனாக இருப்பது நல்லதில்லை. என் உபதேசத்தை தவறு என கூறி எனக்கே குருவாகிவிட்டாய். ஆகவே இப்போதே இந்த குருகுலத்தை விட்டு போய்விடு.“ என்றார்.
ஒரு பெரிய தனவந்தர் ராமானுஜரின் அறிவையும் ஞானத்தையும் அறிந்து தன் வீட்டிற்கு ராமானுஜரை அழைத்து யாகம் நடத்தினார். ராமானுஜரின் மந்திர உச்சரிப்பும் யாகம் செய்யும் முறைகளையும் பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். தங்கள் வீட்டிற்கும் யாகம் செய்ய வாருங்கள் என்று பலரும் அழைத்தனர்.
இந்நிலையில் ராமானுஜரின் புகழை விரும்பாத யாதவபிரகாசர், ராமனுஜரை கொலை செய்யவே முடிவெடுத்தார். ஒருநாள், “நாங்கள் எல்லோரும் காசியாத்திரை செல்கிறோம் நீயும் வா“ என்றார் குருபிரகாசர் ராமானுஜரிடம்.
குருவின் திட்டத்தை அறியாத ராமானுஜர், மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். ஆனால் ராமானுஜரின் தம்பி தயங்கினார். “அண்ணா… இந்த யாதவ பிரகாசர் நயவஞ்சகர். அவரை நம்பாதே. உன் வளர்ச்சியை பிடிக்காமல் ஏதோ சதிதிட்டம் போடுகிறார். உன்னை கொல்லவும் துணிந்து இருப்பார். நான் கேள்விப்பட்ட தகவல் இது“ என்று எவ்வளவோ சொல்லியும் ராமானுஜர் கேட்கவில்லை. “இறைவன் கொடுத்த உயிர் இது. அத்தகைய உயிரை இறைவன் உத்தரவின்றி யாராலும் பறிக்க இயலாது. நல்லவர்களை சுற்றி பொறாமை பகை சூழும்போது, நம் தளபதியாய் முன்நின்று இறைவன் ஒருவனே காப்பான். சூழ்ச்சியை கண்டு நடுங்காதே. நல்லதே நடக்கும். நிச்சயம் நம் வரதராஜபெருமாள் காப்பாற்றுவார்“ என்று கூறி குருவுடன் யாத்திரைக்கு புறப்பட்டார் ராமானுஜர்.
குருவும் ராமானுஜரும் மற்ற சீடர்களும் காட்டு பகுதியில் பயணித்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்மாக இருள் சூழ்ந்தது. “இனி இந்த இருளில் பயணம் செய்வது கடினம். அதனால் இங்கேயே தங்கி மறுநாள் பயணத்தை தொடருவோம். நீங்கள் எல்லோரும் நிம்மதியாக ஓய்வெடுங்கள்.“” என்றார் யாதவப்பிரகாசர்.
விடிந்தது – கண் விழித்து பார்த்தார் ராமனுஜர். தன் கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரும் இல்லை. நடுகாட்டில் ராமனுஜனை கொடிய மிருகங்கள் அடித்தே கொல்லட்டும் என்று தனியாகவிட்டு சென்றுவிட்டார் குரு என்பதை உணர்ந்தார் ராமனுஜர். காட்டைவிட்டு எப்படி வெளியேறுவது? என தெரியாமல் யோசித்துக் கொண்டு இருந்தார். எந்த வழியில் சென்றாலும் எங்கிருந்து புறப்பட்டாரோ அந்த இடத்திற்கே திரும்ப வந்து நின்றார் ராமானுஜர்.
ராமானுஜரின் பாதங்களை கல்லும் முல்லும் பதம் பார்த்தது. இதனால் கால் பாதத்தில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. வரதராஜ பெருமாளை வேண்டியப்படி வலியை பொறுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். ஆனால் இந்த காட்டை கடந்து செல்ல இயலவில்லை. மீண்டும் இருள் சூழ்ந்தது. அப்போது அந்த காட்டில் புலிகளின் சப்தம் சிங்கங்களின் கர்ஜனை நரியின் ஊளை பயங்கரமாக இருந்த சமயத்தில் ஒரு பெண்ணும் ஆணும் இனிமையான குரலில் பாடும் ஒலிக் கேட்டது. அடுத்த நொடியில் கொடிய மிருகங்களின் குரல்கள் நின்றது. இனிமையான இந்த பாடல் மட்டும் ராமனுஜருக்கு கேட்டது. யாரது இவ்வளவு இனிமையாக பாடுவது என சுற்றிபார்த்தார். அப்போது ராமானுஜரின் எதிரே ஒரு வேடனும் அவன் மனைவியும் நின்றுக்கொண்டிருந்தார்கள். ராமானுஜரை பார்த்த உடன் புன்னகையுடன் அருகில் வந்தார்கள் அந்த வேட தம்பதியினர்.
“தம்பி… இந்த காட்டில் என்ன செய்கிறாய்“ என்றான் வேடன். நடந்த விஷயத்தை ராமனுஜர் விளக்கி கூறினார்.
“கவலைபடாதே தம்பி. நீ விரைவில் புகழ்பெறவாய். இந்த துன்பம் ஒர் அனுபவம். இப்போது உனக்கு தேவை உணவும் ஒய்வும் உன் காயத்திற்கு மருந்தும்தான். அதோ தெரிகிறது பார் ஒரு குளம். அதில் நீராடிவிட்டுவா, உனக்கு சாப்பிட ஏதாவது தருகிறேன்.“ என்றான் வேடன்.
வேடன், பழங்களையும் காய்கனிகளையும் தந்து ராமானுஜரின் பசியை போக்கினார். வேடன் மனைவி, மூலிகையை கசக்கி அதை மருந்தாக்கி, ராமனுஜரின் காயம்பட்ட பாதத்தில் தடவினாள்.
“அம்மா… வயதில் சிறியவனான என் பாதத்தை தாங்கள் தொடக்கூடாது. நானே மருந்தை தடவிக்கொள்கிறேன்.“ என்றார் ராமானுஜர்.
“என்னை அம்மா என்று சொல்கிறாய், என் மகனுக்கு நான் வைத்தியம் செய்கிறேன். இதில் என்ன இருக்கிறது.“ என்றப்படி காயத்தில் மருந்தை இட்டாள் வேடன் மனைவி.
இரண்டு நாட்களாக உறங்காமல் விழித்து இருந்ததால் ராமானஜருக்கு தூக்கம் வந்தது. நன்றாக தூங்கினார். அப்போது வேடன் உருவில் இருந்தவர் ஸ்ரீவரதராஜப்பெருமாளாக மாறினார். கருடாழ்வாரை அழைத்தார் பெருமாள்.
விடிந்ததும் வெளிச்சம் கண்களை கூசியது. நித்திரையில் இருந்து விழித்த ராமானுஜரின் மனதிலும் உடலிலும் புது உற்சாகம் பிறந்திருந்தது.
“நான் எங்கிருக்கிறேன்.? இது காடு போல தெரியவில்லையே…? வேடனும் அவர் மனைவியும் எங்கே?“ என யோசித்தப்படி இருக்க, சிலர் தெருவில் நடந்துப் சென்றுக்கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண்ணிடம், “தாயே… இது எந்த ஊர்?“ என்றார். அதற்கு அந்த பெண் சிரித்தப்படி, “ என்ன சாமீ… பார்க்க வைணவன் போல இருக்கிறீர்கள். உங்கள் எதிரே இருக்கும் கோபுரத்தை பார்த்தும் கூடவா தெரியவில்லை. இது காஞ்சிபுரம். அதோ பாருங்கள் காஞ்சி ஸ்ரீவரதாராஜபெருமாள் திருக்கோயில்.“ என்று சொல்லிவிட்டு சென்றாள்.
ராமானுஜர் உண்மை புரிந்தது. ஆனந்தம் அடைந்தார். வேடன் உருவில் வந்தது ஸ்ரீவரதராஜபெருமாளும் – பெருந்தேவி தாயாரும்தான் என்பதை தெரிந்துக்கொண்டார். “தாயாரே என் பாதத்தை பிடித்து மகனே என்று சொல்லி மருந்து தடவினாள் என்றால், நான் எத்தனை பாக்கியவான்.“ என நினைத்து உருகி நின்றார்.
காஞ்சி ஸ்ரீவரதராஜபெருமாளையும் பெருந்தேவித் தாயாரையும் ஸ்ரீராமனுஜரை போல உறுதியாக நம்பி, நம் விரோதிகளை அவரிடம் விட்டுவிடுங்கள். யாரை எப்போது என்ன செய்ய வேண்டும் என்று வரதராஜருக்கு தெரியும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved