Friday 10th January 2025

தலைப்புச் செய்தி :

மகாகாளி தில்லையம்மன்

நிரஞ்சனா

சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை சொல்லியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. இதனால் சினம் கொண்ட சிவன், “நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்.“ என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சக்திதேவி, தன் தவறுக்கு மன்னிப்பும் அத்துடன் சாப விமோசனமும் கேட்டார்.  

“கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் இருக்கவேண்டும். அசுரர்களை அழிப்பதால் உலகத்தில் இன்னும் உன் பெயர் பெருமையாக ஒலிக்கும்.“ என்று கூறினார் சிவன். ஈசன் கூறியது போல் அசுரர்களால் தேவர்களுக்கு பல இன்னல்கள் எற்பட ஆரம்பித்தது. தேவர்கள் காளிதேவியிடம் தங்களை காப்பாற்ற முறையிட்டார்கள். காளிதேவியிடம் சரண் அடைந்தால் விரோதிகள் காலியாகி விடுவார்கள் என்பதை அசுரர்கள் அறியாமல் தேவியிடம் போர் செய்து மாண்டார்கள்.

இதனால் தேவர்கள் நிம்மதியடைந்தார்கள். மறுபடியும் சிவனிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தால் காளிதேவி, சிவனை நினைத்து தில்லையில் தவம் இருந்தாள். பல வருடங்களாக தில்லையில் தவம் இருந்தும் அதை பற்றி கண்டுக் கொள்ளாமல் ஈசன் இருந்ததால், அமைதியாகவும் பொறுமையாகவும் தவம் செய்த காளி, மீண்டும் கோபமும் – உக்கிரமும் நிறைந்த ரூபத்தை எடுத்து கடும் கோபம் கொண்டாள்.

இதனால் தில்லைவாழ் மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தார்கள். அத்துடன் சிவனை நடனம் ஆட போட்டிக்கும் அழைத்தாள். ஆடல்நாயகனுடன் போட்டியா? என்று தேவர்களும் முனிவர்களும் மனம் பதறினார்கள். போட்டியில் பந்தயமும் வைத்தாள் காளி. ‘நான் தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று விடுகிறேன்.’ என்றாள் காளி. சிவபெருமானுக்கும் காளிக்கும் நடன போட்டி உச்சகட்டத்தை அடைந்தது. இவர்களுடன் பூமியும் சேர்ந்து ஆட அரம்பித்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று நிர்ணயிக்க முடியாதபடி இரண்டு பேரும் சரி சமமாக ஆடினார்கள்.

காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, ஊர்த்வ தாண்டவம் ஆடி அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார் சிவன். ஈசன் செய்தது போல் பெண்ணான காளி தேவி பல ஆயிரகணக்கான முனிவர்களும் தேவர்களும் சுற்றி இருக்கும் போது எப்படி ஊர்த்வ தாண்டவம் ஆட முடியும்? என்ற வெட்கத்தால் தோல்வியடைந்ததாக ஒப்புக் கொண்டாள். தந்திரமாக சிவன் வெற்றி பெற்றதை காளியால் தாங்க முடியவில்லை.

“தந்திரமாக ஜெயித்ததை எல்லாம் வெற்றி என்று ஏற்க முடியாது“ என்று கூறி  முன்பை விட அதிகம் சினம் கொண்டாள். கோபத்தோடு தில்லை எல்லையில் அமர்ந்தாள். “நானும் இதே தில்லையில் உன் அருகிலேயே இருக்கிறேன். என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள். இதனால் இன்னும் நீ பெருமையடைவாய்“ என்று எவ்வளவோ சிவன் சமாதானம் செய்தும் காளி தேவியின் கோபம் தணியவில்லை. சிவன் பேச பேச உக்கிரத்தின் எல்லைக்கே போனாள் காளி.

பிரம்மன் காளிதேவியை நான்கு வேதங்களிலும் பலவாறு துதித்து, காளிதேவியை சாந்தியடைய செய்தார். பிரம்மனால் சாந்தம் அடைந்ததால் பிரம்மசாமுண்டேஸ்வரியாக உருக்கொண்டு தில்லையிலேயே அமர்ந்தாள் காளி.

அன்னை மகாகாளியை தில்லையம்மன் என்றே மக்கள் அழைக்கிறார்கள். பலருக்கு குல தெய்வமாகவும் தில்லைகாளி திகழ்கிறாள். சிதம்பரத்திற்கு காவல் தெய்வமாக இருந்து இன்று வரை அந்த மாவட்டத்தின் மக்களை காக்கிறாள் தில்லைகாளியம்மன். தில்லைகாளியை வணங்கினால் விரோதிகள் அழிந்து, கல்வி, செல்வம், வீரம் போன்றவை பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று சிதம்பரநடராஜரே காளிதேவியின் பெருமைகளை கூறினார்.

 

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved 

Posted by on Apr 19 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

1 Comment for “மகாகாளி தில்லையம்மன்”

  1. Latha Subramaniyam

    காளியின் சக்தி அபாரமானது. கட்டுரை நன்றாக உள்ளது.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »