Thursday 23rd January 2025

தலைப்புச் செய்தி :

மரணத்தை தந்த புரூஸ்லீ வீடு

வாஸ்து வியூக நுட்பங்கள்

பகுதி 4

விஜய் கிருஷ்ணாராவ்

வாஸ்துகலை நிபுணர்

(M) 98411 64648  /  98406 75946

E-Mail : vijaykrisshnarau@yahoo.in

 

  • ஓர் அறிவிப்பு –  கடந்த சில வாரங்களாக வாசகர்கள் வாஸ்து தொடர்பாக நிறைய கேள்விகளை எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வருகிறீர்கள். அனைத்து கேள்விகளுக்கும் முடிந்தளவு உங்களுக்கு பதில் அனுப்பி வருகிறோம். பதில் கிடைக்கப்பெறாதவர்களும் நிச்சயம் பதில் பெறுவார்கள். ஏற்கனவே நிறைய மெயில்கள் வந்திருப்பதால் உடனடியாக எல்லோருக்கும் பதில் அனுப்புவது சிரமம். ஆனால் நிச்சயமாக பதில் அனுப்புவோம். அதனால் மீண்டும் மீண்டும் எங்களுக்கு உங்கள் ஒரே கேள்வியை நினைவூட்ட வேண்டாம். இந்த இதழ் முதல் சில கேள்வி – பதில்கள் இந்த பகுதியில் இடம் பெறும். உங்கள் இ-மெயில் முகவரி இந்த பகுதியில் பிரசுரம் ஆகாது.

 

 

சென்ற இதழ் தொடர்ச்சி…  Click for Previous Part

 

இடித்தது என்று சொல்வதை விட, அங்கு வழி இல்லை என்பதுதான் சரி. ஆம், அந்த நண்பர் தன் வீட்டின் கட்டடத்தை வடக்கு பகுதியின் காம்பவுண்ட சுவற்றை ஒட்டி கட்டி இருந்தார். அதாவது வடக்கு பகுதியில் ஒரு அடிக்கூட காலி இடமே இல்லை. பிறகு எங்கிருந்து பணத்தை பார்ப்பது, நினைப்போடு சரி. இந்த வாஸ்து குறையை மாற்றி அமைப்பதெல்லாம் இயலாத காரியம். ஆனாலும் சில அடிபடை தெய்வீக பரிகாரங்கள் இருக்கிறது. அவை எந்த ஆபத்தையும் திசை திருப்பக் கூடியது. அத்துடன் கட்டடத்தின் வெளிபுற அமைப்பில் ஒரு சின்ன மாற்றம் செய்தோம். “ஒரு வாஸ்து நிபுணரை ஆலோசித்துதான் வீட்டை கட்டினோம் ஆனாலும் ஏன் பிரச்சனை வந்தது?“ என்று நண்பர் கேட்டார். ஒரு வாஸ்து நிபுணர் எப்படி வடக்கு பகுதியில் இடமே தராமல் கட்டடம் கட்ட ஆலோசனை தந்தார் என்று எனக்கு புரியவில்லை. அல்லது இவர்கள் அந்த வாஸ்து ஆலோசனையின் முக்கியதுவத்தை பற்றி கவலைப்படாமல் நேர்ந்த தவறாகவும் இருக்கலாம்.

பலர் வீட்டின் உள்கட்டமைப்பில்தான் வாஸ்து முக்கியத்துவம் தருகிறார்களே தவிர வெளிபுற அமைப்பை பற்றி கவலைப்படுவதில்லை அல்லது அக்கறை காட்டுவதில்லை. இப்படிதான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அதை மீறுவதற்கும் மனிதனுக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவன் செயல்படுத்திய பிறகு இறுதியில் அவனுக்கு அந்த நியதியின் உண்மை விளங்குகிறது.  

வாஸ்துவை பற்றி நிறைய நூல்கள் வந்தாலும் அதை தெளிவாக புரிந்து கொண்டே செயல்படுத்த வேண்டும். அரைகுறையாக சாஸ்திரங்களை அறிந்து வைத்திருப்பது நல்லதுதான் என்றாலும் கூட சில சமயம் பிரச்சனைகுரியதாகிவிடும். எதையும் தெளிவாக புரிந்து தெரிந்து செய்தால் நல்லது.

இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஜப்பானை அமெரிக்கா உடனடியாக பணிந்துவிடும்படி எச்சரிக்கின்றது. அவர்களின் எச்சரிக்கைக்கு பதில் தரும் விதமாக ஜப்பானிய மொழியில் “வோகுசட்சு” என்று பதில் தருகிறது ஜப்பான். “வோகுசட்சு“ என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், “உங்கள் எச்சரிக்கையை பரிசீலிக்கிறோம் ஆனால் சற்று தாமதமாக பதிலளிக்கிறோம்“ என்று அர்த்தமாகும். இதை அமெரிக்காவில் மொழி பெயர்த்தவன், “வோகுசட்சு என்றால் உங்கள் எச்சரிக்கையை நிராகரிக்கின்றோம்.“ என்று ஜப்பான் சொல்லிவிட்டதாக சொல்லி விடுகிறான்.

அதன் விளைவாக உடனடியாக ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த அமெரிக்கா உத்தரவிட, ஜப்பானில் அந்த தவறான மொழி பெயர்ப்பால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். இப்படிதான் பல விஷயங்களில் புரிந்து கொள்வதில் தவறு நேர்ந்து பிரச்சனையாகிறது. மயன் அருளிய மனைகலை சாஸ்திரத்தில் கூட ஒரு செய்யுளில், “கிழக்கில் சமைக்கும் இடம்“ என்று வருகிறது. பின்னர் வந்த சில நூல்களில் அதன் எழுத்தாளர்கள், “வடகிழக்கில் காற்று வசதி வேண்டும் என்றும் மயன் சொல்லி இருக்கிறார்…. சமையலறைக்கும் காற்று வசதி வேண்டும் அதனால் வடகிழக்கில் சமையலறை வைக்க வேண்டும்.“ என்று எழுதினார்கள். பழமையான வாஸ்து நூல்கள் என்று கருதப்படும் சில நூல்களில்கூட இப்படிதான் எழுதி இருக்கிறார்கள்.

இதனால் கேரளாவில் கூட அநேக வீடுகளில் வடகிழக்கில்தான் சமையல் அறை இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், கிழக்கு திசையில் தென்கிழக்கை தவிர்த்து பிற பகுதியில் சமையலறை கூடவே கூடாது. மயன்-விஸ்வகர்மா போன்ற கட்டட சாஸ்திர ரிஷிகள் சொன்னதை தவறாக புரிந்து கொண்டதால் நேர்ந்த தவறு இது. இதுவும் ஒருவகையில் “வோகுசட்சு“ மாதிரிதான்.

மறைந்த நடிகர் புரூஸ்லீக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. அவர் எந்த காரியத்தை தொடங்கும் முன்பு தன் அபிமான ஜோதிடரைதான் ஆலோசிப்பார். அவரின் ஜோதிட ஆலோசனையின்படியே புரூஸ்லீ செயல்புரிவார். இந்நிலையில் கல்லாங்  ( Kowloon Tong ) என்ற பகுதியில் இருந்த ஒரு வீட்டை தரகர் ஒருவர் மூலமாக விலைக்கு வாங்கினார் புரூஸ்லீ. மிக ஆடம்பரமான வீடு. அந்த வீட்டை வாங்குவதற்கு முன் அதைபற்றி தன் ஜோதிடரிடம் எதுவும் சொல்லவில்லை. அந்த வீட்டை வாங்கிய சில நாட்களிலேயே புரூஸ்லீ குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளனார்கள். இதனால் தன் ஜோதிடரை அந்த வீட்டுக்கு அழைத்து காண்பித்தார். அந்த வீடு மிகுந்த தோஷம் கொண்டது என்பதை பார்த்த உடன் தெரிந்துகொண்டார் புரூஸ்லீயின் ஜோதிடர்.

இதனால் சீன வாஸ்துமுறை பரிகாரமாக முகம் பார்க்கும் கண்ணாடியை வாசலில் மாட்டும்படி ஆலோசனை சொன்னார் ஜோதிடர். 18.07.1973-ம் ஆண்டு ஏற்பட்ட சூராவளியில் புரூஸ்லீயின் வீட்டு தோட்டத்தில் இருந்த மரம் ஒன்று வேறோடு சாய்ந்தது. அன்றே அந்த பரிகார கண்ணாடியும் காற்றில் எங்கோ போய் விழுந்துவிடடது. 20.07.1973-புரூஸ்லீ எதிர்பாராமல் மரணம் அடைந்தார். அந்த சிறு பரிகாரத்தை பெரும் வாஸ்து குறை விழுங்கியது. புரூஸ்லீ வாங்கிய அந்த வீடு அவருக்கு  முந்தைய உரிமையாளர்களை கூட நிம்மதியாக வாழவிட்டதில்லை. அந்த வீட்டுக்கு முந்தைய உரிமையாளராக இருந்தவர் திடிர் என இறந்தார். பிறகு அவரின் விதவை மனைவியிடம் இருந்த அந்த வீட்டை பெரும் சீன தொழில் அதிபர் ஒருவர் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்.

சுமார் மூன்று லட்சம் டாலர் செலவழித்து அந்த வீட்டை புதுப்பித்தார் அந்த தொழில் அதிபர். அவர் குடியேறிய சில மாதங்களிலேயே சொத்துகளை இழுந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார். தன் பணகஷ்டத்திற்கு வெறும் சொற்பதொகைக்கு நஷ்டத்தில் ஒரு அமெரிக்கருக்கு விற்றார். அந்த வீட்டை வாங்கிய அமெரிக்கரும் சில மாதங்களில் நோயில் விழுந்து படுத்த படுக்கையாகிவிட்டார். அவரிடம் இருந்துதான் புரூஸ்லீ அந்த வீட்டை வாங்கினார். புரூஸ்லீ தன் அந்தஸ்துக்கு ஏற்ப புதுப்பித்தார். ஆனால் அந்த வீட்டின் துரதிர்ஷ்டம் அவரையே பலி வாங்கிவிட்டது.  

ஒரு சாதாரண கட்டடம் என்ன செய்துவிட போகிறது? என்று நினைக்கக்கூடாது. அதுவும் ஆயிரம் வேலை காட்டும். சில வாடகை வீடுகள் – அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை சொந்த வீட்டுக்கு அதிபதி ஆக்குகிறது. சில ஆடம்பர சொந்த வீடுகள் பிரச்சனை செய்கிறது. இதற்கெல்லாம் கட்டட சாஸ்திர அமைப்புகளே காரணமாக இருக்கிறது. அது வாடகை வீடாக இருந்தாலும் ஒரளவாவது வாஸ்து தன்மைகொண்டதாக பார்த்து குடியேறுங்கள். உங்கள் சரியான உழைப்புக்கு உகந்த ஊதியத்தை அது நிச்சயம் தரும். வாழ்க்கையில் என்றென்றும் வளம் சேர்க்கும்.

Click for Next Part

கேள்வி பதில்

கேள்வி. சென்ற ஆண்டு மே மாதம்தான் சொந்தமாக புது பிளாட் வாங்கி குடி வந்தோம். ஒரு வாரத்திலேயே என் கணவருக்கு பைக்கில் அடிபட்டு கால் உடைந்தது. சிகிச்சைக்கு பிறகு நலமாக இருக்கிறார். எங்கள் வீட்டில் ஏதாவது தோஷம் இருக்கிறதா?

– கௌசல்யா சீனிவாசன்.

பதில். முக்கியமாக பெரிய வாஸ்து குறை எதுவும் இல்லை. தென்கிழக்கிலும் – தென்மேற்கிலும் இரண்டு படுக்கையறை உள்ளது. ஆனால் நீங்கள் தென்கிழக்கு படுக்கை அறையை பயன் படுத்துகிறீர்கள். அதுதான் குழப்பத்திற்கு காரணம். தென்மேற்கு படுக்கை அறையை Master Bedroom – மாக பயன்படுத்தவும்.

கேள்வி. சொந்த வீடாக இருந்தால் வாஸ்து பார்க்கலாம். வாடகை வீட்டில் என்ன வாஸ்து பார்க்க முடியும்?

– சத்தியமூர்த்தி.

பதில். ஒட்டல் சாப்பாடுதானே என்று எச்சில் தட்டில் சாப்பிடுவோமா ஸார்.? அது வாடகை வீடோ சொந்த வீடோ வாஸ்துபடி இருந்தால்தான் எப்போதும் நல்லது. 

கேள்வி. எங்கள் வீட்டின் போர் வெல்லில் தண்ணீர் வரவில்லை. அதனால் Sump ஒன்றை அமைக்க இருக்கிறோம். எந்த இடத்தில் அமைக்கலாம்.?

 – லஷ்மி நாராயணன்.

பதில். உங்கள் வீட்டின் வரைப்படம் பார்த்தேன். வடக்கு பகுதியில் கீழ்நிலை நீர் தொட்டி (Sump) அமைய போதிய இடம் இல்லாததால், கிழக்கில் வடகிழக்கு மூலையில் கீழ்நிலை நீர் தொட்டி (Sump) அமைக்கவும்.

கேள்வி. ஜோதிடத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் சம்மந்தம் உண்டா?

– ஹரிபாபு.

பதில். இருக்கிறது. அதை பற்றிய கட்டுரை விரைவில் வரும் படியுங்கள்.

கேள்வி. எங்கள் வீடு வாடகை வீடு. எனக்கும் என் மகளுக்கும் அடிக்கடி உடல் நலப் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் வேறு வீடு மாறலாம் என நினைக்கிறோம். வீடு மாறினால் நல்லது நடக்குமா?

– சாரதா.

 பதில். தென் மேற்கு மூலையில் வாசலும். வடகிழக்கில் சமையலறையும் இருக்கிறது. அது உடல் நலம் மற்றும் இல்லாமல் பொருளாதார பிரச்சனையும் உண்டாக்கும். வீடு மாறுவது நல்லது தான்.

 கேள்வி.  நாங்கள் புது வீடு கட்ட இருக்கிறோம். வீட்டின் நான்கு திசையிலும் காலி இடம் விட வேண்டும். வாஸ்துபடி எவ்வளவு இடம் காலியாக விட வேண்டும்?

– பிரேமா பாஸ்கர்.

 பதில். – தெற்கு – மேற்கை விட வடக்கும் – கிழக்கும் அதிக அளவு காலி இடம் இருக்க வேண்டும். இதனால் நல்ல நன்மை உண்டாகும்.

 

உங்கள் கேள்விகளை அனுப்ப : –  editor@bhakthiplanet.com

Posted by on Mar 28 2011. Filed under Home Page special, வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »