“நண்பனோடு விளையாடிய சிவன்“ – அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 3
அறுபத்து மூவர் வரலாறு
பகுதி 3
நிரஞ்சனா
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்
நீதி சபை முன் நடக்க போவதை எதிர்பார்த்து மௌனமாக நின்றிருந்தார் நம்பியாரூரர். “நம்பியாரூரரே எங்களை மன்னிக்கவும். இந்த ஒலையில் இருக்கும் கையெழுத்தும் உங்கள் பாட்டன் கையெழுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் நியாயப்படி இந்த பெரியவர் பேச்சை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும். அதுதான் தர்மம்.“ என்றார்கள் சபையோர்கள்.
“சரி… நான் இந்த கிழவனுடன் செல்கிறேன். ஆனால் இந்த திருவெண்ணெய் நல்லூரில் என் முன்னோர் வாழ்ந்ததாக சொல்லும் இடங்களை காட்டட்டும். பிறகு பார்க்கலாம்.“ என்றார். நம்பியாரூரர்.
“அதற்கென்ன தாராளமாக…. என் வீட்டையும் உன் பரம்பரையினர் வீட்டையும் காட்டுகிறேன் வா என் பின்னே.“ என்று கூறி திருவருட்டுறை என்ற திருவெண்ணெய் நல்லூர் கோவிலுக்கு சென்றார்கள். அந்த திருக்கோயிலை சுற்றி நம்பியாரூரரும் மற்றவர்களும் கூடினார்கள். கருவறைக்குள் அந்த கிழவன் சென்றதும் அங்கேயே மறைந்தார். நம்பியாரூரரும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். கிழவன் வேடத்தில் வந்தது இறைவன் சிவபெருமானே என்று நம்பியாரூரர் உணர்ந்து திகைத்தார். அடுத்த நிமிடம் கண்களை கூசும் ஒளி மின்னியது. அந்த ஒளியில் ரிஷப வாகனத்தில் சிவ – சக்தி சொரூபமாக காட்சி தந்தார் இறைவன்.
“நம்பியாரூரரே… நீ நமது கைலாய மலையில் எனக்கு நண்பனாக இருந்தாய். அப்போது மங்கையரை பார்த்தவுடன் உன் மனம் சஞ்சலப்பட்டது. அதன் பயனாக நீ மனித பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். இந்த மனித பிறவிலும் யாம் பெண்ணாசை கொண்டால் எம்மை வந்து தடுத்தாட்கொள்ள வேண்டும் என்பதே நீ பெற்ற வரம். அதன் படியே எல்லாம் நடக்கிறது.“ என்றார் இறைவன். சூரியனை பார்த்த மகிழ்ச்சியில் தாமரை மலர்வது போல் சோமேஸ்வரரின் குரலை கேட்டு மகிழ்ந்தார் சுந்தரர்.
“இறைவா… எம்மை தடுத்தாட்கொண்ட சிவபெருமானே… மறுபடியும் இப்பிறவியில் பெண் ஆசையில் விழ நினைத்த எம்மை தடுத்தென்னை காத்த தங்களை பித்தன் என்றேனே.. நானே பித்தன். அடியேனை காத்த பரம் பொருளே… நான் என்றும் உன்னை மறவாமல் இருக்க அருள் புரிய வேண்டும். என்னை உம்முடன் அழைத்து செல்ல வேண்டும். இதுவே எம் விருப்பம்.“ என்றார் நம்பியாரூரர்.
“உன்னை அழைத்து செல்ல நான் வரவில்லை. உன் புகழ் பல்லாயிர தலைமுறைக்கும் தெரிய வேண்டும் தமிழ் புலமையில் நீ சிறந்தவன். உனக்கு இங்கே கடமைகள் இருக்கிறது. எமது அடியார்களின் சிறப்புகளை உன் மூலமாக தெரியப்படுத்த போகிறேன். தாய் தமிழில் உன் எம்மை பற்றி பாடல் இயற்று.“
“எம் அய்யனே… நான் காண்பது கனவா நினைவா? நடப்பதெல்லாம் உண்மைதானா.? நான் எவ்வாறு பாட தொடங்குவேன்.? சிவபெருமானே நீ எம்மை வழி நடத்து“
“சுந்தரா… எம்மை பித்தன் என்று அழைத்தாயே… அச்சொல் எம்மை கவர்ந்தது. அதனையே முதல் வரியாக அமைத்து பாடு“
“பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா…
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனதுன்னை…
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணேய் நல்லூர் அருட்டுதுறையுள்
அத்தா உன்னை ஆளாய் இனி அல்லேன் எனலாமே….
என்று பாட தொடங்கினார் சுந்தரர்.
சுந்தரருடன் திருமணம கனவில் இருந்து, அது கனவாகவே போனாலும் ஆரூராரை கணவனாகவே நினைத்து வேறு யாரையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து மறைந்தார் சடங்கவிராயர் மகள்.
இனிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் எறும்பு போவது போல், சிவன் எங்கெல்லாம் இருக்கிறாரோ அதுவெல்லாம் என் இடமே என்று கூறி கொண்டே திருவெண்ணெய்நல்லூரை விடடு திருநாவலூரை அடைந்தார் நம்பியாரூரர். இப்படியே ஒவ்வொரு ஊராக சென்று சிவனை நினைத்து பல பாடல்களை பாடி கொண்டே சென்றார். ஒரு நாள் சுந்தரர் சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து தன் பாதயாத்திரையை தொடர்ந்தார் வீரட்டானம் என்ற திருத்தலத்தின் பக்கம் வந்தார். கிழக்கில் இருந்த சூரியன் மேற்கை நெருங்கி கொண்டு இருந்தது. இருட்டியதால் இனி செல்வதை விட இங்கேயே தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று நினைத்து அங்கே உள்ள மடத்தில் தங்கினார் சுந்தரர்.
சுந்தரர், படுத்து உறங்கி கொண்டு இருக்கும்போது அவர் தலைமுடியை ஒரு கிழவர் தன் பாதத்தால் தடவி கொடுத்து கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் தலையை தடவி கொடுக்கிறாரே என்று நினைத்து எழுந்து பார்த்தார். பார்த்தவுடன் கடும் கோபம் கொண்டார்.
“வயதில் பெரியவராக இருக்கிறீர்கள். இபபடி உங்கள் கால் பாதத்தால் என் தலைமுடியை தேய்க்கலாமா.“ என்றார் சுந்தரர். “என் கால் பாதத்தின் கீழே நீ படுத்திருந்தால் என் கால்படத்தான் செய்யும்.“ என்று நக்கலாக பதில் கூறினார் கிழவர்.
சுந்தரர், அதற்கு மேல் பேசாமல் வேறு பக்கமாக உறங்க சென்றார். சில நிமிடம் கழித்து மறுபடியும் அந்த கிழவர் ஆரூராரின் தலைமுடியை கால்களால் தடவி கொடுத்து கொண்டு இருந்தார். கடும் கோபம் கொண்ட சுந்தரர்,
“ஏய் கிழவா… நீ வேண்டும் என்றே என்னை சீண்டி பார்க்கிறாயா? யார் நீ…?“ என்று ஆவேசமாகவும் அதிகாரமாகவும் பேசினார் சுந்தரர்.
“என்னுடைய கால் பாதம் பட்டதற்கே இப்படி கோபமாக பேசுகிறாயே… என் தலைமேல் உட்கார்ந்து இருக்கிறாலே கங்கை தேவி. அவளை எப்படி வசைப்பாடுவது, கோபப்படுவது?“ என்றார் கிழவர்.
கிழவர் பேசி முடித்ததும் அடுத்த நிமிடமே அந்த இடத்தை விட்டு மறைந்தார். “ஈசனின் பாதத்தை பார்க்க விஷ்ணு பகவான் பாதால லோகத்திற்கு கூட சென்றும் பார்க்க முடியாமல் போனது. ஆனால் நான் என்ன பாக்கியம் செய்தேனோ…? சர்வேஸ்வரரின் பாதம் என் சிரஸின் மேல் இருந்தது.“ என கூறி மகிழ்ச்சியடைந்தார் சுந்தரர்.
“தம்மானை அறியாத சாதியார் உளரே“
என்று துவங்கும் ஒரு திருப்பதிகத்தை பாடினார். உயிர் இருந்தால்தான் உடல் ஆசையும். ஆனால் அந்த உயிரையே அசைய வைத்தது இறைவனின் கால்பட்டதால்… என்று நினைத்து கொண்டே தூங்காமல் விழித்து கொண்டு இருந்தார். காலை பொழுது விடிந்தது.
திருவதிகைத் தலத்தை தென்திசை கங்கை என அழைப்பர். அந்த தீர்த்தத்தில் நீராடினார் நம்பியாரூரர். பிறகு திருமாணிக்குழி என்ற சிவத்தலத்திற்கு சென்றார். திருமாணிக்குழி ஊரின் சிறப்பு என்னவென்றால், மாவலிச் சக்கரவர்த்தியிடம் விஷ்ணுபகவான் வாமன அவதாரமெடுத்து மூன்று அடி மண் தானம் கேட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு விஷ்ணுவே இந்த திருமாணிக்குழி ஆலயத்திற்கு சென்று ஈசனை வணங்கினார். இப்படி சிறப்பு வாய்ந்த ஊருக்கு சென்று சுந்தரர் சுந்தேஸ்வரரை பற்றி பாடல் மூலமாக வர்ணித்தார்.
இப்படியே பாத யாத்திரையாக ஒவ்வோரு ஊராக சென்றார். சென்ற ஊரில் எல்லாம் இருக்கும் சிவதலங்களில் பதிகங்களை பாடினார். ஒருநாள் திருவாரூரில் வாழும் அந்நாட்டின் அரசரின் கனவில் சிவன் தோன்றி. “எம்மை பார்க்க சுந்தரர் வருகிறார். அவரை தக்க மரியாதையுடன் அழைத்து வாருங்கள்.“ என்று கட்டளையிட்டார். தான் கண்ட கனவை மற்றவர்களிடம் கூறி, உடனே எல்லா கலை நிகழ்ச்சியும், மேளதாளத்துடனும் சுந்தரரை வரவேற்றார் அரசர்.
நம்பியாரூரர் தனக்கு கிடைத்த மரியாதையை நினைத்து மகிழ்ந்தார். என்னை கௌரவிக்க சொன்ன ஈசனுக்கு நன்றி என்பதை பாடல் மூலமாக பாடினார். நம்பியாரூரரின் பாடலை கேட்டு மகிழ்ந்து திருநீலகண்டன் நேரில் காட்சி கொடுத்தார். “உன்னை திருமண கோலத்தில் அழைத்து வந்ததால், நீ என்றும் மாப்பிள்ளை அலங்காரத்திலேயே இருக்க வேண்டும்.“ என்று அன்பு கட்டளையிட்டார். அத்துடன், “நீ எம் தோழனாக இருப்பதால் அரசருக்கு இணையான அழகுடன் காட்சி தருவாய்.“ என்று ஆசி வழங்கி மறைந்தார். சந்தனமும், ஜவ்வாதும் மனக்க விபூதி, ருத்திராச்சத்தையும் அணிந்து பட்டாடை உடுத்தி, அரசரை விட அதிக அழகுடன் ஜொலித்தார் சுந்தரர். முன்பு திருகைலாய மலையில் பார்வதியின் தோழி கமலி என்ற பெண்ணின் மேல் ஆசைபட்டதால் மண்ணுலகில் பிறந்தார் சுந்தரர். அதுபோல் கமலியும் பூலோகத்தில் பிறந்தார்.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved