Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்“ – அறுபத்து மூவர் வரலாறு

“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்”

அறுபத்து மூவர் வரலாறு முதல் பகுதி

                                                                                        

நிரஞ்சனா

சிவபெருமானின் பக்தர்களை சிவதொண்டர்கள் என்று அழைப்பது சிறப்பு பெயராகும். இதில் அறுபத்தி மூன்று சிவஅடியார்கள் சிறப்பை மட்டும் ஏன் சொல்ல வேண்டும்? என்று பார்க்கும்போது இவர்களை போன்று ஒரு தூய சிவபக்தி மற்றவர்களிடம் இருக்க முடியுமா? என்ற விஷயம் ஆராய்ச்சிகுரியதாகவே இருக்கும். இந்த அறுபத்து மூவரை தவிர மற்ற சிவஅடியார்களின் சிவதொண்டில் குறை இருக்குமா? என்ற கேள்வி நமக்குதான் தோன்றுமே தவிர சிவஅடியார்கள் யாவருமே சிவபெருமானே என்பதுதான் உண்மையான தத்துவம். நாம் சிவன் கோவிலுக்கு செல்கிறோம், அங்கு அறுபத்தி மூன்று நாயன்மார்களின் திருஉருவச்சிலையை தரிசித்து இருப்பீர்கள்.

சிவபெருமான் மீது நாம் காட்டுகிற அதே பக்தியை இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் மீதும் பக்தி செலுத்தி வணங்குவது சிவபெருமானுக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. நாயன்மார்களின் வரலாற்றை நான் உங்களுக்கு சொல்வதற்கு முன்னதாக இவர்களின் அறிய வரலாற்றை நமக்கு முதலில் சொன்ன ஒருவரை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த அற்புத வரலாறு தோன்றுவதற்கு முக்கிய காரணம் ஒரு மன்னர். அப்படி என்றால் அந்த மன்னர் அடிப்படையில் ஒரு சிவபக்தர்தான். ஆனாலும் ஆடல் – பாடல் – கேளிக்கை என்று பொழுதுபோக்கிவந்தவர் அந்த மன்னர். அரசரின் இந்த செயல்பாடு அவருக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல என்று எண்ணிய அவருடைய அமைச்சர், ஆன்மிகத்தின் உயர்ந்த தன்மையை – அதன் அவசியத்தை மன்னருக்கு உணர்த்த இறைவன் சிவபெருமானால்தான் இயலும் என்று நம்பினார். அமைச்சரும் மிக சிறந்த சிவபக்தர்.

மன்னரையும் ஓர் உண்மையான சிவபக்தராக்க ஒரு பெரிய முயற்சியை எடுத்துக்கொண்டார். சிவபெருமான் சிறப்புகளை காட்டிலும் அவர்தம் அடியார்கள் எத்தகைய சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை தன் அரசரின் மூலமாக இந்த உலகத்திற்கு உணர்த்த விரும்பினார்.

உண்மையில் அவர் விரும்பினார் என்பதை விட சிவபெருமானே தன் அடியார்கள் உயர்ந்த குணங்களை உலகத்திற்கு இந்த அமைச்சரின் வழியாக சொன்னார் என்பதே சரியாகும். காரணம் –

“அவன் அருளாலே அவன்தாள் வணங்கி…“ என்பதுதானே மாணிக்கவாசகர் சொன்ன சிவதத்துவம். எந்த தெய்வத்தை வணங்குவதற்கும் யார் அனுமதியும் தேவையில்லை…ஆனால் இறைவன் எம்பெருமான் சிவனை வணங்குவதற்கும்  நாம் ஒரு சிவபக்தராக இருப்பதற்கும் சிவபெருமானின் அருள் நிச்சயம் வேண்டும். அதாவது –

“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்.”

 சேக்கிழார்.

புலியூர்க் கோட்டத்தில் குன்றத்தூர் வேளாளர் குலத்தில் சேக்கிழார் பிறந்தார். “அருள் மொழி இராமதேவர்“ என்பது இயற்பெயர். சேக்கிழார் என்பது குலபெயராகும். அதனால் மக்கள் இவரை சேக்கிழார் என்றே அழைப்பர். நல்ல திறமை இறைநம்பிக்கை புத்திசாலிதனம் இப்படி நிறையவே நல்ல குண அம்சங்களுடன் திகழ்ந்தார். இவரது பரம்பரையினர் அரசவையில் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். சேக்கிழார் தன் சிவபக்தியிலும் தமிழ் இலக்கிய சிறப்பிலும் சிறந்து விளங்கினார். இவரது புகழை மக்கள் பேசுவதை கேட்டு மன்னர் “அநபாய குலோத்துங்க சோழன்“ சேக்கிழாரை அழைத்து பேசினார். சேக்கிழாரின் பேச்சை கேட்க கேட்க குலோத்துங்க அரசர் மகிழ்ச்சியடைந்தார்.

சேக்கிழாரின் உயர்ந்த உள்ளம், பேச்சி திறன், தமிழ் இலக்கிய புலமை இவையாவும் கண்டு அரசர் வியந்து போனார். கலைவாணியே இவர் நாவில் அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டார் குலோத்துங்க சோழன். சேக்கிழாரை தம் அமைச்சராக நியமித்தார் மன்னர். இறைநம்பிக்கையும் விட்டு கொடுக்கும் குணத்தாலும் அரசருக்கு எதிரிகளே இல்லை. எதிரிகளையும் நண்பனாக்கும் குணம் இருப்பதால் யுத்தம் என்ற பேச்சே இல்லாமல் அமைதியாக இருந்தது நாடு. இதனால் அரசர், இசை கேட்பது,ஆடல், பாடல், கதை  கேட்பது என்று பொழுதை தள்ளி வந்தார்.. நாட்டு மக்களும் உண்ண உணவு – உடுத்த உடை அள்ள அள்ள குறையாத பொன் – பொருட்கள் என்று சௌகர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்கள். இது நிரந்தரமல்ல என்று மக்களும் எண்ணவில்லை. அரசர் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே செல்வார்கள்.

ஆனால் அரசர் வீணாக பொழுதுபோக்குகிறாரே என வருந்தினார் அமைச்சர் சேக்கிழார். ஒருநாள் தன் கவலையை சொல்லியும்விட்டார்.

“மன்னா…நீங்கள் இப்படி பயன் இல்லாத நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டுவது சரியில்லை. இதுபோல் தேவையில்லாத கலை நிகழ்ச்சியில் பொழுது போக்குவதால் எந்த பயனும் இல்லை. வரலாறும் உங்களை ஊதாரி என்று குறை சொல்லுமே தவிர, தங்கள் புகழ் சொல்லாது. பொழுதுபோக்கு தேவைதான். அது ஓய்வு நேரத்தில் அனுபவிப்பது. ஆனால் நீங்களோ பொழுதுபோக்கையே ஓர் அரசு பணியாக செய்வது நல்லதல்ல. வரலாறு சிரிக்கும். இதனால் எந்த நன்மையும் இல்லையே. நீங்கள் காதல் கதைகளை மட்டும் ரசித்து கேட்பதால் என்ன பயன்? இரண்டே பயன்தான். ஒன்று – அந்தபுரம் நிறையும். இன்னொன்று – உங்களுக்கு வாரிசுகள் பெருகும். நகைச்சுவை கதைகளை கேட்பதால் என்ன பயன்? சிரித்து சிரித்து வயிறு வலிக்கும். ரொம்பவும் சிரித்தால் பைத்தியகாரன் என்பார்கள். அவன்தானே அதிகம் சிரிக்கிறான்.

அடுத்து –

பயனற்ற கற்பனை கதைகளை கேட்பதால் என்ன பலன்? மனதில் தீய எண்ணங்கள் எழும். எதையும் தவறாக கற்பனை செய்வோம். இதனாலும் உங்களுக்கு எந்த பயனும் இலலையே.. அரசே… தாங்க்ள ஒரு சிவபக்தர். அடியார்களில் சிறந்தோர் சிவன் அடியார்கள். அவர்களில் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மிக சிறந்தோர் என்பது இறைவனே ஏற்றுக்கொண்ட உண்மை.

“அப்படியா…? யார் அவர்கள்…? அவர்களை பற்றி அறிய ஆவலாக உள்ளேன். சுருக்கமாக அவர்களை பற்றி சொல்லுங்கள்“ என்றார் மன்னர்.

அமைச்சர் சேக்கிழாரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாற்றை இரத்தின சுருக்கமாக சொன்னார். அதை கேட்டு பூரித்து போன மன்னர், மேலும் நாயன்மார்களை பற்றி விரிவாக அறிய விரும்பினார்.

“சேக்கிழாரே நாயன்மார்களின் வரலாற்று சுருக்கமே இவ்வளவு அருமையாக உள்ளதே. மேலும் இதனை பெரும் காவியமாக இயற்றி தாருங்கள். உங்களால் அடியேனும் பெருமை அடைவேன்.“

“இது நான் செய்த பாக்கியம் அரசே. இப்போதே அத்திருப்பணியை தொடங்குவேன். ஆனால்….?”

சேக்கிழார் ஏதோ சொல்ல தயங்கினார்.

“அமைச்சரே… என்ன தயக்கம்? எதையும் தயங்காமல் சொல்லுங்கள். அதை உடனே நீங்கள் திருப்திபடும் அளவுக்கு செய்து தருகிறேன்“. என்றார் அரசர்.

“அறுபத்து மூன்று நாயன்மார்கள் வாழ்க்கை சம்பவங்களை திரட்டி காவியமாக்குவது எளிய காரியமல்ல. அதற்கு சிவபெருமானின் பேரருளும் – தகுந்த பொருளருளும் வேண்டும்.“

“அவ்வளவுதானே… எம்பெருமான் சிவனின் அருள் பெற்றவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள பொருள் தடையாக இருக்கக்கூடாது. உங்களுக்கு தேவையானவற்றை நான் செய்கிறேன். அது எம்கடமையும் ஆகும் தமிழக்கு தேவையானவற்றை நீங்கள் செய்யுங்கள்.. இதில் கணக்கு பார்ப்பது தவறு. நாம் வாழும் நாட்களை கணக்கா பார்க்கிறோம்.?

இப்போதே உங்களுக்கு தேவையான பொன் – பொருட்கள் அத்துடன் உங்களுக்கு உதவியாக பணி செய்ய பணியாளர்களை நியமிக்கிறேன். இத்திருப்பணியை இன்றே தொடங்குங்கள்.“

சேக்கிழார், நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கு சென்று அங்கு அவர்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை திரட்டினார். அந்த சம்பவங்களை அழகாக காவிய நடையில் வரிசைப்படுத்தி எழுத சிறந்த இடம், தென்னாடுடைய சிவபெருமான் வசிக்கும் சிதம்பரமே ஆகும்.“ என்று முடிவு செய்து சிதம்பர கோவிலுக்கு சென்றார் சேக்கிழார்.

“தில்லையப்பனே… எத்தொல்லை இன்றி இக்காவியத்தை சிறப்புடன் எழுதி நிறைவு செய்ய அருள் புரிக“ என்று வணங்கி எழுத அமர்ந்தார். ஆனால் எப்படி ஆரம்பிப்பது? காவியத்தின் முதல்வரி எப்படி இருக்க வேண்டும்? என்று தெரியாமல் கவலைக்கொண்டார். விநாயகப் பெருமான், மகாபாரதத்தில் வியாசருக்கு தன் தந்தத்தை பாதியாக உடைத்து காவியம் எழுத உதவியது போல, இப்போதும் ஆனைமுகம் வருவாரோ? இல்லை வேல் ஏந்தி வேலவன் வருவானோ? இறைவா… என்செய்வேன்? எனக் யோசித்தார் சேக்கிழார்.

அப்போது அங்கே ஒர் அதிசயம் – அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் வந்துவிட்டார்.

வந்தது தனி உருவமாக அல்ல, தமிழ் குரலாக வந்தார். “உலகெலாம்…“ என காவியத்தின் முதல்வரியை தந்தார்.

உலகெலாம் என்ற குரல் அசரீரியாக ஒலித்தது. அதை கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். எப்படி ஆரம்பிப்பது என்ற கவலை மறைந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் சேக்கிழார்.

“சேக்கிழாரே… நீ எழுதும் இக்காவியம் இனிதே தொடங்கட்டும். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாறு, உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கட்டும்.“ என்று இறைவனின் வாழ்த்தொலி கேட்டது. மன்னர் மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனின் அன்பை நினைத்து, தாம் இத்தனை காலம் வாழ்நாளை வீண் ஆக்கிவிட்டோமே என்று வருந்தினார். சேக்கிழார், நம் அமைச்சர் அல்ல, அமைச்சர் எனும் வடிவில் வந்த ஆண்டவர் அவரே என மகிழ்நதார்.

அதை தொடர்ந்து தம் எழுத்துப்பணியை தொடங்கினார் சேக்கிழார். ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்து எழுதி முடிக்க பல மாதம் ஆயிற்று. இறைவனின் ஆசியால் மன்னர் நினைத்தது போல் காவியத்தை எழுதி முடித்தார் சேக்கிழார். இதை உடனே மன்னருக்கு தகவல் கூறி அனுப்பினார். மகிழ்ச்சி கடலில் மிதப்பது போல் இருந்தது குலோத்துங்க ராஜனுக்கு.

குழந்தை பிறந்தது என செய்தி கேட்ட உடன் விரைந்தோடி வரும் தகப்பனை போல, அறுபத்தி மூவர் காவியத்தை சேக்கிழார் பெருமான் எழுதி முடித்துவிட்டார் என செய்தி கேட்ட உடன் ஆனந்ததுடன் விரைந்து வந்தார் அரசர். தன் குழந்தை ஏதாவது ஒரு வரைபடம் வரைந்தால், பெற்ற தாய் அதை எடு்த்து கொண்டு அக்கம்பக்கத்தாருக்கும் தனக்கு தெரிந்தவர்களிடமும் தம்முடைய குழந்தை வரைந்த வரைபடத்தை காட்டி ஒரு தாய் மகி்ழ்ச்சியடைவது போல, “ஈசனே முதல் வார்த்தையை எடு்த்து தந்த காவியமிது, சேக்கிழார் எப்படிப்பட்ட தெய்வீகமாக மனிதராக இருக்கிறார் எனப் பாருங்கள்.“ என்று தன் அருகில் இருந்த அமைச்சர்கிளிடம் சொல்லி மகிழ்ந்தார் மன்னர். 

தன் பரிவாரத்தோடு தில்லை சிதம்பர கோவிலில் தன் மகிழ்ச்சியை சேக்கிழாரோடு பகிர்ந்து கொண்டார். “சேக்கிழார் எழுதிய இத்திருக்காவியமான அறுபத்து மூவர் வரலாற்றை கேட்க அனைவரும் வர வேண்டும். இது அநபாய குலோத்துங்க சோழ மன்னரின் ஆணை.“ என்று அரசு கட்டளை பிறப்பித்தது.

அரசரின் உத்தரவை மதிக்காமல் இருந்தால் ராஜதண்டனைக்கு ஆளாவோம் என்ற பயத்தில்தான் முதலில் மக்கள் பல்ர் வநதார்கள். ஆனால் போக போக அரசாங்க காவலர்களாலேயே கட்டுப்படு்த்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் சிதம்பரத்தையே திணறடித்தது.. இந்த காட்சியை கண்ட சேக்கிழாரை விட மன்னரே அதிக மகிழ்ச்சியடைந்தார். சேக்கிழார் பெருமான் அந்த அளவுக்கு அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாற்று சம்பவத்தை பாமர மக்களுக்கும் புரியும்விதமாக அழகு தமிழில் அற்புதத்தெளிவாக விளக்கனார்..

சித்திரை மாதத்தில் தொடங்கி மறு வருடம் சித்திரையில் வரலாற்றை சொல்லி  முடித்தார். ஒவ்வோரு நாளும் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது. வேறு ஊரில் இருந்தெல்லாம் மக்கள் சிதம்பரத்தில் வந்து குவிந்தார்கள்.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved                            

Posted by on Mar 6 2011. Filed under அறுபத்து மூவர் வரலாறு, ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »