வெள்ளிகிழமைகளில் சமைக்க கூடாத உணவு எது?
ஸ்ரீசந்தோஷி மாதா.
விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 5
– நிரஞ்சனா
சென்ற இதழ் தொடர்ச்சி…
“உன் அத்தையிடம் (சுனிதி) மிட்டாய் வாங்க காசு கேள்.“ என்று தன் பிள்ளைகளிடம் சொல்லி அனுப்பினாள் சுனீதியின் அண்ணி. அந்த குழந்தைகளும் சுனீதியிடம் சென்று பணம் பெற்று புளியம்பழத்தை வாங்கி சுனீதியின் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பூஜை நேரத்தில் புளியை உபயோகப்படுத்திய வினையால் மறுநாளே யாரோ வேண்டாதவர்கள் சிலர் அந்த நாட்டின் அரசரிடம்,
“திருடியே சொத்து சேர்த்தார் போலாநாத்.“ என்று வீண் பழி போட்டார்கள். அதை நம்பிய அரசாங்கம், போலாநாத்தை சிறையில் அடைத்தது.
“இந்த கொடுமைக்கு என்ன காரணம்? முறையாக விரதம் இருந்து பூஜித்தவர்களுக்கு இந்த தண்டனையா?“ என்று சந்தோஷிமாதாவின் சிலையில் அடித்து கொண்டு கதறி அழுதாள் சுனீதி. பெண்ணின் அழுகை என்றால் யார்தான் சும்மா இருப்பார்கள். அதுவும் நம்பிக்கையுடன் அன்பும் வைத்திருக்கும் பக்தர்கள் அழுதால் அன்னை மகாசக்தி வேடிக்கையா பார்த்து கொண்டு இருப்பாள்?. சுனீதியின் எதிரில் தோன்றினாள் ஸ்ரீசந்தோஷி மாதா.!
“நீ முறையாக பூஜித்தாலும் உன் கரத்தால் சிறுவர்களுக்கு பணத்தை கொடுத்தாய். அந்த பிள்ளைகள் உன் கையால் வாங்கிய அந்த பணத்தில் புளியம்பழத்தை வாங்கி சாப்பிட்டார்கள். அதன் கெடு பயனால்தான் உனக்கு துன்பம் நேர்ந்தது“ என்றாள்.
“தாயே… எனக்கு தெரியாமல் நடந்த சம்பவம் இது. அதுவும் இந்த தவறு என்னால் நடந்தது இல்லையே…? அவர்கள் பொறாமையால் செய்த செயலால் எனக்கு இந்த தண்டனையா தாயே? என்று கதறினாள் சுனீதி.
“பாலில் ஒரு துளி எழுமிச்சை பழச்சாறு விழுந்தாலும் தயிர் ஆகும்தானே. ஆனால் யாரோ எழுமிச்சை சாற்றை எனக்கு தெரியாமல் கொட்டிவிட்டார்கள்… ஆகவே அது என்னுடைய தவறு இல்லை, அப்படி இருக்கும் போது எப்படி பால் தயிராகலாம்.. என்று கேள்வி கேட்பது முறையா சுனீதி?. தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றம்தான். அதை நீ அனுபவித்தே தீர வேண்டும். இதுவே விதி“ என்றாள் ஸ்ரீசந்தோஷினி.
நீண்ட மவுனத்திற்கு பிறகு அந்த அன்னையே ஒரு வழியும் சொன்னாள். “சரி நடந்ததை பற்றி பேசுவதால் எந்த லாபமும் இல்லை. உயிரை இழந்தவனை பற்றியே பேசினால் உயிரோடு இருப்பவர்களையும் இழந்து விடுவோம். அதுபோல் நடந்ததை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பதை விட இனி இது போல் துயரமான சம்பவங்கள் நடக்கவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று யோசிப்பதுதான் புத்திசாலிதனம். இனி மேல் பூஜையையும் விரதத்தையும் கடைபிடிப்பதாக இருந்தால் சாஸ்திர சம்பிரதாயத்துடன் நடந்து கொள். என்னை பூஜிக்கும் போது யாருக்கும் பணத்தை கொடுக்காதே, புளியம்பழத்தை உன் வீட்டில் உட்கார்ந்து யாரையும் சாப்பிட அனுமதிக்காதே“ என்றாள் ஸ்ரீசந்தோஷி மாதா.
அதனால்தான் சில வடஇந்தியர்கள் வெள்ளிகிழமையன்று நாம் என்னதான் வவ்வாலை போல தலைகீழாக நின்றாலும் பணத்தை வெளியாட்களுக்கு கொடுக்க மாட்டார்கள். சுனீதி தனக்கு நேர்ந்த கொடுமைக்கு மறுபடியும் முறையாக விரதம் இருந்து பூஜையை தொடர்ந்தாள். நீதி விசாரனையில் போலாநாத் நோ்மையானவன் என அரசு உறுதிப்படுத்தியது. கள்வன் என்ற பட்டத்தை துறந்தான் போலாநாத். குழந்தை செல்வத்துடனும் மற்ற செல்வங்களுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
ஸ்ரீசந்தோஷ்மாதாவை பூஜிப்பவர்கள் வசதியோடு வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார் நாரதர். வெள்ளிகிழமையில் விரதத்தை தொடங்கி எந்த வேண்டுதலுக்காக விரதத்தை கடை பிடித்தீர்களோ அந்த வேண்டுதல் சுபமாக முடிந்தவுடன் அதே போல் ஒரு வெள்ளிகிழமை வரும் வாரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும் போதும் கண்டிப்பாக ஸ்ரீசந்தோஷ்மாதா படத்தின் முன் வறுத்த கடலையும், வெல்லத்தையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். விரதத்தை முடிக்கும் முன் உங்கள் வசதிக்கேற்ப ஒன்பது குழந்தைகளுக்கு வறுத்த கடலை வெல்லம் இத்துடன் அன்னதானம் செய்யுங்கள். இனிப்பை எல்லோருக்கும் கொடுங்கள். அன்னதானம் வழங்கும் முன்போ பின்போ உங்கள் கைகளால் அவர்களுக்கு பணத்தை கொடுக்க கூடாது. அத்துடன் உங்கள் குடும்பத்தாரும் வெளியாட்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது. விரதத்தை கடைபிடிப்பவர்கள் அவர்களின் இல்லத்தில் கண்டிப்பாக புளியை தொடவேகூடாது. புளிப்பான உணவுகளையும் சாப்பிடக் கூடாது. விட்டு கொடுப்பவன் கெட்டுபோவது இல்லை. ஆகவே இறைவனுக்காக நாவின் ருசிகளை விட்டு கொடுத்தால் ஏற்றத்தை பெறுவோம்.
உங்கள் கருத்துகளை அனுப்ப : editor@bhakthiplanet.com
© 2011 bhakthiplanet.com All rights Reserved
விநாயகருக்கு திருமணம் ஆனதா இல்லையா என்ற சர்ச்சையில் உள்ள போது, அவருக்கு மகளே இருக்கிறார், அவர் பெயர் சந்தோஷி மாதா என்பதை வறுமையை போக்கும் விநாயகரின் மகள் கட்டுரையை படித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்
சந்தோஷி மாதாவை எப்படி வணங்குவது என்பதும் அதன் வரலாறும் அருமையாக இருக்கிறது நிரஞ்சனா.