சாய்பாபா செய்த விசித்ர வைத்தியம் – மகான் சீரடி சாயிபாபா. பகுதி-3
மகான் சீரடி சாயிபாபா.
பகுதி-3
நிரஞ்சனா
ஒருநாள் ஷீரடியில் பலத்த மழையும், பேய் காற்றும் அடித்தது. பலத்த காற்றால் மணலும் இலையும் பறந்தது. மகல் சபாதிக்கு தூக்கம் வரவில்லை. பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை. உடனே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாபாவை பார்க்க ஒடி வந்தார். பாபாவை கண்ட உடன் அவர் மனம் பதறியது. ஆம்… பலத்த காற்றாலும் மழையாலும் இலையும் மண்ணாலும் பாபாவின் உடல் முடியிருந்தது. “பாபா…“ என்று கதறிகொண்டு அருகில் வந்தார். ஆனால் தியானத்தில் இருந்ததால் எதுவும் பாபாவால் அறிய முடியவில்லை. உடலில் படிந்திருந்த தூசிகளையும் மண்ணையும் துடைத்துவிட்டு பாபாவை நிஷ்டையில் இருந்து எழுப்பினார் மகல் சபாதி. இந்த காட்சியை கண்டு ஒருவர் பின் ஒருவராக பல பேர் கூட்டமாக கூடிவிட்டார்கள்.
“இனி நீங்கள் இந்த வேப்பமரத்தின் கீழ் இருக்க கூடாது. நீங்கள் ஏன் மசூதியில் தங்க கூடாது பாபா?” என்று கூறினார் மகல்.
“எனக்கு எல்லாம் இடமும் ஒன்றுதான். எனக்கு என்று தனி இடம் தேவையில்லை.!” என்று மறுத்தார் பாபா.
“நீங்கள் இப்படி சொன்னால் நாங்களும் எங்கள் வீட்டிற்கு செல்லாமல் உங்களுடனே இருக்கிறோம்.“ என்று கோஷமிட்டார்கள். அவர்களின் திருப்திக்காக பாபாவும் மசூதியில் தங்க சம்மதித்தார்.
வணங்குபவர்களைதான் பாபா காப்பாற்றுவார் என்றில்லை. ஆபத்தானே நேரத்தில் “வாப்பா… அப்பா… பாபா…“ என்று யார் எப்படி அழைத்தாலும் தக்க நேரத்தில் உதவுவது பாபாவின் குணம். அப்படிதான் ஒருநாள் பாபா, மசூதியில் இருந்து மறைந்து அவுரங்கபாத்தில் ஓர் மலை மீது அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் குதிரையை காணாமல் தேடி கொண்டு வந்தார்.
“சாந்த்பட்டீல்… என் அருகில் வா” என்று பாபா அழைத்தார். இருந்தாலும் சாந்த்பட்டீல் பாபா அழைப்பதை காதில் வாங்காமல் காணமல்போன தன் குதிரையை தேடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். விரக்தியில் இருப்பவர்களை ஈசனே அழைத்தாலும் திரும்பி பார்க்க மாட்டார்கள். இதை நகைச்சுவையாக நம் முன்னோர்கள் இப்படி சொல்வார்கள்,
“நாய் எலும்பை கடித்து கொண்டு இருக்கும் போது, அதை படைத்த பிரம்மனே அருகில் வந்தாலும் கண்டு கொள்ளாது.“
பாபா, சாந்த்பட்டீல்லை அழைத்தும் அவர் பாபா பக்கம் திரும்பவில்லை. அதனால் இன்னும் அதிக சத்தத்தோடு சாந்த்பட்டீல் பெயரை சொல்லி அழைத்தார் பாபா. திடுக்கிட்டு திரும்பி பார்த்தார் சாந்த்பட்டீல்.
“என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? இதற்கு முன்னால் என்னை பார்திருக்கிறீர்களா?” என்றார் சாந்த்பட்டீல்.
“நீ பல நாட்களாக, தொலைந்துபோன உன் குதிரையை தேடி கொண்டு இருக்கிறாய். அதை பற்றி கேட்காமல் என்னை பற்றி கேட்கிறாயே” என்று சிரித்து கொண்டே கேட்டார் பாபா. தன்னை சுற்றி என்ன நடக்கிறது எனறு தெரியாமல் ஒரு நிமிடம் அப்படியே அமைதியானார் சாந்த்பட்டீல்.
“நீ ஒடை பக்கம் போ. அங்கு உன் குதிரை இருக்கிறது” என்றார் பாபா. விரைந்து சென்று பார்த்தார். குதிரை நீர் அருந்தி கொண்டு இருந்தது. “சற்று முன்தான் இங்கு வந்து தண்ணீர் குடித்தோம் அப்போது இது நம் கண்களில் படவில்லையே…? என்ன ஆச்சரியம்…?“ என்று சிந்தித்து கொண்டே பாபாவை சந்திக்க விரைந்தார்.
“ஐயா, நீங்கள் கூறியது போல் என் குதிரை கிடைத்தது” என்றார் சாந்த்பட்டீல்.
“இல்லை. உனக்கு அது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தது. சரி வாருங்கள் நாம் இருவரும் புகைப்பிடிக்லாம்” என்றார் பாபா. சாந்த்பட்டீல் தயங்கினார்.
“என்ன தயக்கம் சாந்த்பட்டீல்? – பாபா.
“ஒன்றுமில்லை பாபா… புகைப்பிடிக்கும் குழாய், புகையிலை எல்லாம் வைத்திருக்கீறீர்கள். ஆனால் இதை உபயோகப்படுத்த தண்ணீர், நெருப்பு தேவை. இந்த பாறையில் தண்ணீருக்கும் நெருப்புக்கும் எங்கே போவது?“ என்றார் சாந்த்பட்டீல்.
“எங்கும் போக வேண்டாம். இருக்கும் இடத்திலேயே கிடைக்கும்” என்று கூறி தன் கையில் இருந்த குச்சியால் தரையை தட்டினார். என்ன ஆச்சரியம்… தண்ணீர் வெளிவந்தது. பக்கத்திலேயே மறுபடியும் தரையை தட்டினார். நெருப்பும் வந்தது. இதை கண்டு வியந்து போனார் சாந்த்பட்டீல். பஞ்சபூதங்களும் இவரின் காலடியில் இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். இவர் சாதாரண மனிதர் அல்ல. இவர் சக்தி வாய்ந்த பாபா (மகான்). என்று உணர்ந்தார்.
“பாபா…நீங்கள் என்னுடனே இருக்க வேண்டும்.“ என்று கூறி பிடிவாதம் பிடித்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்றார் சாந்த்பட்டீல். ஒருநாள் சாந்த்பட்டீல் பாபாவிடம்,
“என் உறவுகார பையன்… எனக்கு மருமகன் முறை. அவனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. நீங்களும் அவசியம் எங்களுடன் வர வேண்டும்.“ என்று கூறி சீரடிக்கு அழைத்து சென்றார் சாந்த்பட்டீல். குதிரை வண்டியில் இருந்து பாபா சீரடி மண்ணில் கால் வைத்த உடன், “யா சாயி… வந்து விட்டாயா” என்று கதறி கொண்டே மகல்சபாதி, பாபாவை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார். அன்றில் இருந்துதான் பாபாவாக அழைக்கப்பட்ட அந்த மகான், “சாய் பாபா.“ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
“இனி நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்” என்றார் சாயி பாபா. பாபாவின் மீது பொறாமையாக இருந்த அந்த ஊர் மருத்துவரும் இன்னும் சிலரும் அப்போது காலராவால் பாதிப்படைந்திருந்தார்கள்.
“சாய் பாபா நீங்கள்தான் எங்களை காக்க வேண்டும்” என்றனர் பக்தர்கள் . மறுநாள் பாபா, கோதுமை அரைத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த சில பெண்கள்,
“சாய் பாபா, நீங்கள் ஏன் அரைத்து கஷ்டப்படுறீங்க…? நாங்கள் அரைத்து தருகிறோம்.“ என்று கூறி வலுகட்டாயமாக கோதுமை மாவை அரைத்தார்கள். அரைத்த பிறகு பாபாவுக்கு ஒரு பங்கும் மற்ற கோதுமை மாவை ஆளுக்கு ஒரு பங்காக பிரித்தார்கள். அவர்களின் இந்த செயல் பாபாவுக்கு ஆத்திரமூட்டியது.
“எல்லோரும் மாவை அப்படியே வையுங்கள்… யாரும் என் மாவை உங்கள் வீட்டிற்கு எடு்த்து கொண்டு போகக்கூடாது” என்றார். பாபா.
“பாபா… நாங்கள் எங்கள் பங்கில் உங்களுக்கு ரொட்டி செய்து தருகிறோம்” என்றாள் ஒரு பெண்மணி.
“அதெல்லாம் எனக்கு வேண்டாம். நான் சொல்வது போல் நீ செய். இந்த கோதுமை மாவை ஊருக்கு தள்ளி தெருவில் கொட்டி விட்டு வா” என்று உத்தரவிட்டார் பாபா.
பாபா காரணம் இல்லாமல் சொல்ல மாட்டார் என்பதை உணர்ந்த அந்த பக்த பெண்மணி, பாபா கூறியது போலவே செய்தாள். அதன் பிறகு ஒரு ஆச்சரியம் நடந்தது.
காலராவால் பாதிக்கப்பட்ட ஷீரடி மக்கள் அந்த கொடிய நோயில் இருந்து விடுதலை அடைந்தார்கள். பாபாவை விரோதியாக பார்க்கும் மருத்துவரும் குணமடைந்தார்.
விளையும் பயிருக்கும், கடலுக்கும், குளத்திற்கும், சாக்கடைக்குள்ளும் பாகுபாடு பார்க்காமல் நல்ல மழை நீர் புகுந்து சுத்தப்படுத்துகிறதே – பயன் தருகிறதே அதை போல, சாய்பாபா எந்த பாகுபாடும் பாராமல் அனைவரையும் அவர் தம் குழந்தையாகவே பார்த்தார் – நல்ல பலன் தந்தார்.
ஒருசமயம் டாக்டரால் கைவிடப்பட்ட ஒரு பெண் நோயாளியை காப்பாற்றினார் சாய்பாபா. அந்த சம்பவம் ஆச்சரியமானது. அது என்ன…?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved