Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

குளிகை என்பது நல்ல நேரமா..?

குளிகை பிறந்த கதை

நிரஞ்சனா

 ராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன? என்று உங்களுக்கு தெரியும். குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா? அதற்கு ஒரு கதையும் உண்டு. இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான். அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன். 

 “எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும். எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவணாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால், நான் எதிர்பார்க்கும் ஆற்றலுடன் திகழும் என்பதை கணித்து சொல்லுங்கள். இது பேராசையல்ல குருவே, ஒரு தந்தையின் நியாயமான ஆசை“  

 “இராவணா… உன் எதிர்ப்பார்ப்பில் தவறில்லை. சாதாரண குடிமகனே தன் பிள்ளை நாடாள பிறக்க வேண்டும் என்று எண்ணும் போது, நீயோ வேந்தன். இலங்கை மாமன்னன். மயனின் மாப்பிள்ளை. சிவனருள் பெற்றவன். துயரத்தையும் தோல்விகளையும் அறியாதவன். எதிரிகளை நடுங்கச் செய்பவன். தயாளன். உடலாலும் உள்ளத்தாளும் வல்லமை கொண்டவன். பிறக்க போகும் உன் மகனும் இத்துணை ஆற்றல்களை கொண்டவனாக திகழவேண்டும் என்று நீ எதிர்பார்ப்பில் தவறோன்றும் இல்லை இராவணா. நானும் நீ சொல்ல வந்ததை நீ சொல்லாமலே ஞானத்தால் அறிந்தேன். குழந்தை பிறக்க வேண்டிய நேரத்தை கணித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால்…“ என்று இழுத்தார் சுக்கிராச்சாரியார்.

 “என்ன தயக்கம்.? “ஆனால்…“ என்கிற வார்த்தையை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. தயக்கமின்றி சொல்லுங்கள். என்ன பிரச்சனை?“ என்றான் இராவணன்.

“நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே இராசி கட்டத்தில் வந்தால் நல்லது. எப்படி பார்த்தாலும் அந்த மாதிரி ஒரு நேரம் அமையாமல் இருக்கிறது. நானும் கணித்து கணித்து பார்க்கிறேன், யோசித்தே என் தலைவெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன? என்று கூட தோன்றுகிறது.“ புன்னகைத்தவாரே சொன்னார் சுக்கிராச்சாரியார்.

 வேடிக்கையாக சொன்ன வார்த்தை வினையாகிப் போனது. “நீங்கள் சொல்வதும் சரிதான். நவகிரகங்களையும் ஒன்றாக சிறையில் தள்ளினால்தான், நான் நினைத்தது நடக்கும். சரியான நேரத்தில் ஆலோசனை கூறிய தங்களுக்கு நன்றி. ஆனால் நவகிரகங்களில் நீங்களும் ஒருவராக இருப்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்“. என்றான் இராவணன்.

 சுக்கிரன் என்று அழைக்கப்படும் சுக்கிராச்சாரியாரையும் சிறையில் தள்ளினான். நவகிரகங்களையும் ஒரே சிறையில் அடைத்தான் இராவணன். இந்த நிலைக்கு காரணமே சுக்கிராச்சாரியார்தான் என்பதால் சுக்கிரனை நவகிரகங்களும் திட்டி தீர்த்தன.

 “சிவனையே பாதாள லோகத்தில் வாழ செய்தவன் நான். என்னை இராவணன் இந்த சிறையில் தள்ளிவிட்டான். எல்லாம் உங்களால்தான். உங்களை “அசுரகுரு“ என்று அழைப்பது சரியாகத்தான் இருக்கிறது. திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே… தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் இராவணன். அவனிடம் போயா நம் பெருமைகளை சொல்வது? அறிவு களஞ்சியமய்யா நீ“ என்றார் சனிஸ்வரர்.

“நான் என்னவோ சொகுஸாக இருப்பதை போலவும், நீங்கள்தான் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசிக்கொண்டுயிருக்கிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் இராவணன் என்பதை சற்று மறந்து, அவனுக்கே ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன். என்றார் சுக்கிரன்.

 மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல்தான் என்று வைத்தியர்கள் சொல்வதாக சிறைக்காவலாளிகள் பேசிக்கொண்டார்கள்.

 “சுக்கிரசாரியாரே… உங்களுக்கு தெரியாதா? எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தாள், அதை “யுத்த கிரகம்“ என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனையை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்… மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் இராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும்.“ என்றார் சனிஸ்வரர்.

 “அசுர தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?” என்றார் குரு பகவான்.

 “புதிதாக ஒரு உயிரை உண்டாக்கினால், இராவணனின் வாரிசு பிழைக்கும்“ என்று கூறி கொண்டு தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார் சனிஸ்வர பகவான். அந்த குழந்தைக்கு குளிகன் என்று பெயரிட்டார் சனிஸ்வரர்.

 “ஒன்பது கிரகங்கள் ஒன்று சோ்ந்துகொண்டு யத்த கிரகமாக இருந்தாலும், குளிகன் பிறந்ததால், இனி இந்த மணிநேரம் பிரச்சனையில்லை. வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், இந்த குழந்தை பிறந்த இதே நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது. இனி பயம் இல்லை மண்டோதரிக்கு.“ என்றார் சனிஸ்வரர்.

“நமக்கும்தான்“ என்றார் சுக்கிரர்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.

குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக முடியும். இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளும் தொடரும்.  

Posted by on Mar 12 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »