அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான்
நிரஞ்சனா
முருகனுக்கு ஆறுபடை வீடு. அதில் ஒன்று திருச்செந்தூர். சூரன் முருகனுக்கு பயந்து மாமரமாக காட்சி கொடுத்தார். எல்லாம் கண நேரத்தில் அறியும் ஆறுமுகனால் இதை தெரிந்து கொள்ள முடியாதா என்ன? மரமாக உருமாறி இருக்கும் சூரனை தன் வேலால் அந்த மரத்தை இரண்டாக பிளந்தார். சூரனை கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் முருகனை பிடித்து கொண்டது.
முன்னோரு சமயம் பிரம்மஹத்திதோஷம் நீங்குவதற்கு அன்னபூரணியிடம் உணவை வாங்கி சாப்பிட்ட பிறகுதான் சிவனுக்கே தோஷம் நீங்கியது. ஆனால் ஆறுமுக பெருமானோ யார் உதவியின்றி வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும் என்பதை போல, தானே திருச்செந்தூர் ஊரிலேயே தன் வேலால் பூமியை குத்தி நாழிக்கிணற்றை உருவாக்கி முருகனும் மற்ற தேவர்களும் நீராடி தோஷத்தை போக்கிக் கொண்டார்கள்.
இங்கேயே தனக்கு ஒரு வீடு வேண்டும் என்று, திருவாடுதுறை ஆதீன மடத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிக மூர்த்தி சுவாமி தம்பிரானவர் கனவில் தோன்றி உத்தரவிட்டார் முருகப் பெருமான்.
ஆலயம் கட்டும் அளவுக்கு பணம் இல்லையே என்று மனம் வருந்தினார் தம்பிரானவர். கரிக் கட்டையை கூட வைரமாக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தமக்கு இட்ட கட்டளைக்காக முருக பெருமானே முன் வந்து உதவுவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் திருப்பணியை தொடங்கினார். இருந்தாலும் வேலை செய்ய யாரும் முன் வரவில்லை சாமியாரால் எப்படி கூலி தர முடியும்? என்று நினைப்பு இருந்தாலும் திருப்பணி செய்தால் பாவத்தை போக்கும் என்ற நம்பிக்கையில் சில கூலியாட்கள் திருப்பணி செய்ய முன் வந்தார்கள். அப்படி வந்தவர்களுக்கு அவர்களின் கஷ்டத்தை பார்தது கூலிக்கு பதிலாக இலையில் விபூதியை கட்டி, நீங்கள் தூண்டுகை விநாயகர் கோவிலை தாண்டிய பிறகுதான் இந்த இலையை திறந்து பார்க்க வேண்டும. அதற்கு முன்பாக திறந்தால் விபூதி தான் உங்களுக்கு ஊதியமாக கி்டைக்கும் என்றார் தம்பிரானவர். “இவர் கனவில் முருகன் வந்தாராம்… ஆலயம் கட்டு என்றாராம்… என்ன அருமையான கதை. அத்துடன் விபூதி பணமாக மாறுமாம். இதெல்லாம் நம்புகின்ற மாதிரியா இருக்கிறது. இறைவன் பெயரை சொல்லி உங்கள் உழைப்பை நன்றாக பயன்படுத்தி சம்பாதிக்க பார்க்கிறார் சாமியார்.“ என்று சிலர் தம்பிரானவரை பற்றி கிண்டல் செய்தார்கள். இருந்தாலும் சாமியாரின் பேச்சு இறைவனின் வாக்கு என்று நம்பி, விநாயகர் கோவிலை கடந்த பிறகுதான் ஊதியமாக கொடுத்த இலையில் கட்டிய விபூதியை திறந்து பார்த்தார்கள் பணியாளர்கள். அதில் யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டுமோ அந்த விபூதி பணமாக மாறி அவரவர்களின் கையில் இருக்கும். இப்படியே இறைவனின் அருளால் திருக்கோயிலை கட்டி முடித்தார் தம்பிரானவர்.
விசுவாமித்திரர், ஸ்ரீஇராமபிரான் மூலமாக தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார். நல்லவர்களை கொன்றால்தான் தோஷம் – பாவம் என்றில்லை. அரக்கியாகவும், இராட்சஸியாக இருப்பவர்களை கொன்றாலும் தோஷம் ஏற்படும். அசுரத் தலைவர் சுக்கிரசாரியாரின் தாயான காவியமாதாவை கொன்ற பாவத்தால் விஷ்ணுபகவானின் சுதர்சன சக்கிரம் மறுபடியும் விஷ்ணு பகவானின் கையில் செல்லாமல் அலைந்து திரிந்து பல வேதனைகளை அனுபவித்து கொண்டு இருந்தது. பரிகாரம் செய்த பிறகுதான் சுதர்சன சக்கரத்திற்கு தோஷம் நீங்கி மறுபடியும் விஷ்ணுபகவான் கையில் அமர்ந்தது. அதை போல, விசுவாமித்திரருக்கும் அரக்கியை கொன்ற தோஷத்தால் காச நோயால் அவதிப்பட்டார். இதற்கு மருந்து, செந்தில் ஆண்டவரை தவிர வேறு யாராலும் குணப்படுத்த முடியாது என்று, தன் தவத்தால் தெரிந்து கொண்டு ஒரு மண்டலம் திருச்செந்தூர் முருகனின் விபூதியை இலையில் வைத்து கொண்டு விபூதியை உடல் முழுவதும் பூசியும் பிரசாதமாகவும் ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தார். திருச்செந்தூர் முருகனின் ஆசியால் பூரண நலமும் பெற்றார்.
இறைவன் நமக்கு நன்மை தர வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் இறைவனையே ஒரு விலை போட்டு விற்றால் நன்மையை விட பணம் கிடைக்கும் என்ற பேராசையால் கொள்ளையர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று தகதகவென ஜொலித்த முருகனை பார்த்து தங்க சிலை என்று நினைத்து கொள்ளையடித்து சென்று விட்டார்கள்.
இதே ஊரில் இருந்தால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் வேறு ஒரு ஊருக்கு செல்ல படகில் பயணித்தார்கள். என்ன ஆச்சரியம்…? அமைதியாக பயணம் செய்த படகு சில நிமிடத்திலேயே பெரிய அலையால் படகு கவிழ பார்த்தது. இதை கண்ட ஒரு கொள்ளையன், “இந்த சிலையால் தான் இப்படி நடக்கிறது, பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம். உயிர் அப்படி இல்லை.“ என்று கூறி கொண்டே அவர்கள் திருடிய முருகன் சிலையை கடலில் போட்டு விட்டார்கள். அதன் பிறகுதான் கடல் அமைதியானது. சில ஆண்டுகள் சிலையில்லாமலே வழிபாடு நடந்தது திருக்கோயிலில்.
நாயக்க மன்னர் எவ்வளவோ முயற்சி எடுத்தும் சிலை எங்கு இருக்கிறது? என்று கண்டுபிடிக்க முடியாமல் வேதனை அடைந்தார். ஒருநாள் இரவு, “கோவிலுக்கு நேராக இருக்கும் கடலில் சிறிது தூரம் பயணம் செய்தால் ஒரு எழுமிச்சை பழம் மிதக்கும். அத்துடன் கருடன் வானில் அந்த இடத்திற்கு நேராக வட்டமிடுவான்” என்று முருக பெருமான் நாயக்க மன்னரின் கனவில் தோன்றி கூறினார். பொழுது விடிந்தது. நாயக்க மன்னரே தன் பரிபாலர்களுடன் படகில் பயணம் செய்தார். அதிசயமாக முருக பெருமான் கூறியது போல் நடுகடலில் எழுமிச்சை மிதந்தது, அத்துடன் வானத்தில் அந்த எழுமிச்சைக்கு நேராக கருடன் வட்டமிட்டு கொண்டு இருந்தது.
மன்னரின் பணியாளர்கள் உடனே கடலில் குதித்து முருகனின் சிலையை கண்டெடுத்தார்கள். இறைவனால் மீட்கபட்ட சிலையை நல்ல நேரம் பார்த்து பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தார்கள்.
ஐந்து வயது வரை பேச முடியாமல் ஊமையாக இருந்த குமரகுருபரரை தன் வேலால் முருகன் அவர் நாவில் எழுதிய பிறகுதான் பேசவே ஆரம்பித்தார். இப்படி சக்திவாய்ந்த இறைவனான திருச்செந்தூர் முருகனை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்தால் பிணிகள் அகலும். தோஷங்கள் விலகும். சுமத்தப்படும் வீண் பழிகள் விலகும். வழக்கில் வெற்றி பெறுவோம்.
கந்தனுக்கு ஆரோகரா… முருகனுக்கு அரோகரா என்று உச்சரிப்போம். முன் ஜென்ம பாவங்களை விரட்டுவோம். வேல் இருக்க வினையில்லை.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved