Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

கோடி நன்மை தரும் சோமவாரவிரதம்

விரதங்ளும் அதன் கதைகளும்.   பகுதி 3

                                         நிரஞ்சனா

 சோமவார விரதம்  

 இந்த சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்தால் சகல விதமான வசதிகள் கிடைக்கும். முன்னோரு காலத்தில் “ஸீமந்தினி“ என்ற அரசகுமாரி, சோமவார விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைபிடித்து வந்தள். அவளின் பக்தியை தங்களுக்கு சாதகமாக நினைத்த திருடர்கள் ஸீமந்தினியிடம் “நாங்கள் கணவன் – மனைவி இருவரும், சோமவார விரதம் இருப்பவர்களிடத்தில்தான் உணவு அருந்துவோம். இன்று திங்கட்கிழமை நீங்களோ விரதத்தை சரியாக கடைபிடிப்பவர் என்று ஊர் மக்கள் சொன்னார்கள். அதனால்தான் உங்களை தேடி எங்கள் வயிற்று பசியை போக்க வந்தோம். என்று அப்பாவி முகத்தை வைத்து கொண்டு நயவஞ்சகமாக பேசினார்கள் அந்த இரண்டு கள்வர்கள்.

 பசி என்று வந்தவர்கள், உண்மையான பக்தர்கள் என்று நினைத்து அவர்களுக்கு பாதபூஜை செய்து உணவு படைத்தாள் ஸீமந்தினி. என்ன ஆச்சரியம்… ஆண்களான இருவரும் கணவன் மனைவி போல் நடித்த அந்த திருடர்கள், உண்மையிலேயே இருவரில் ஒருவன் பெண்ணாகவே மாறினான். சோமவாரம் விரதம் இருப்பவர்களின் கையால் சாப்பிட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். சுபிட்சம் ஏற்படும். சோமவாரம் விரதம் இருப்பவர்களை எந்த துஷ்ட சக்திளும் அண்டாது. தீய சக்திகளிடம் இருந்து தப்பிப்பார்கள்.

 வசிஷ்ட மகரிஷி, சோமவாரம் விரதத்தை பல மாதம் கடைபிடித்தால், நல்ல உள்ளம் படைத்த அருந்ததியை திருமணம் செய்தார். வசிஷ்டரை மறந்தாலும் இன்றுவரை அவரின் பத்தினியை யாரும் மறக்கவில்லை – மறக்கவும் முடியாது. அந்த அளவிற்கு, திருமணம் செய்யும் போது வானத்தை பார்த்து “அருந்ததியை பார்“ என்று சொல்லும் வழக்கம் இன்று வரை இருக்கிறது.

விபு என்ற அரசருக்கு குழந்தை செல்வம் இல்லாமல் வேதனைப்பட்டார். “பல தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. ஆனால் தலைமுறையில்லையே…“ என்று ஒரு முனிவரிடம் தன் மனகுறையை சொல்லி வேதனைபட்டார். அதை கேட்ட முனிவர் சோமவார விரதத்தின் மகிமையை சொல்லி “அதை நீங்கள் ஏன் கடைபிடிக்கக் கூடாது பிரபு?“ என்றார். சாமியாரின் ஆலோசனை, அந்த சாமியே நேரில் வந்த சொன்னது போல் இருந்தது விபுக்கு.

 “பட்ட மரம் தலைக்குமா? என்னதான் விரதம் இருந்தாலும் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். புழு கூட தங்காத வயிற்றில் எப்படி குழந்தை பிறக்கும்“ என்று விபுவின் மனைவியின் காதுபட பேசினார்கள், உறவினர் உருவில் வ்நத வஞ்சகர்கள். அந்த பேச்சு மனக்கவலையை கொடு்ததாலும், முனிவரின் வார்த்தையை மதித்து சோமவார விரதம் இருந்தார்கள் அரசரும் அரசியும். அதே ஒரு சோமவார நாளில் அரசி கருத்தரித்தாள். அழகான பல பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள்.

 கீசகன் என்ற அந்தணர், பல இடங்களில் பீச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். “இறைவனே உலகம் – அவனின்று ஒர் அணுவும் அசையாது. எது தர வேண்டுமோ அதை கடவுள் நிச்சயம் தன் பக்தனுக்கு கொடுப்பார்“ என்ற நம்பிக்கையுடன் சோமாவார விரதம் இருந்து வந்தார். அதன் பலனாக அவருக்கு பி்சசை அளித்தவர்கள் அவரிடமே உதவி கேட்கும் அளவிற்கு செல்வ வசதியோடு வாழ்க்கை அமைந்தது.

 குசேலன் முன்ஜென்மத்தில் இறைவன் கொடுத்த செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல், தானே அனுபவித்தான். மறுபிறவிலும் கையேந்தும் நிலை வந்ததை போல், மறுபிறவி மேல் அதிக நம்பிக்கையுள்ள கீசகன், “இனி பிறவியே வேண்டாம்.“ என்ற எண்ணத்தில் செல்வத்தை கண் மூடி தானமாக வாரி வாரி கர்ண பிரபு போல் தானம் வழங்கினார் ஏழைகளுக்கு. இதன் பலனால் ஸ்ரீதேவியின் அக்காளையும் – யமபகவானையும் தன்னை நெருங்க விடாமல் விரட்டியடித்தார் கீசகன்.

 தர்ம வீரியன் என்பவன், தனக்கென்று ஒரு சிறுகுடிசை கூட இல்லாமல் வாழ்ந்து வந்தான். அவன் சோமவார விரதம் இருந்து, அதன் பயனால் தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொண்டான்.

 விரடன் என்ற கள்வன். அவன் எல்லா இடத்திலும் திருடி, தன் வாழ்க்கையை சுபபோகமாக அனுபவித்து வந்தான். ஒருநாள் அரண்மனையிலேயே அவனுடைய கைவரிசையை காட்டி விட்டான். விடுவாரா அரசர்? “ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதர்களையே கடிப்பது போல், என் அரண்மனையிலேயே வேலையை காட்டிய அந்த திருடனை பிடித்து வாருங்கள்“ என்று ஆணையிட்டார். நான்கு திக்கிலும் காவலர்கள் தேடினார்கள். காவலர்கள் தேடுவதை அறிந்த வீரியன், ஒரு காட்டில் தஞ்சம் அடைந்தான். அங்கு சமைத்த உணவு இல்லாததால் காய் – கனிகளை பறித்து சாப்பிட்டு வந்தான். அந்த சமயம், மகாராஜாவின் மகள் அரண்மனை பாதையை மறந்து பாதை மாறி காட்டுக்கு வழி தெரியாமல் தடுமாறினாள். அதை கண்ட விரடன், “பாவம் பெண் ஒருத்தி வழி தெரியாமல் தவிக்கிறாளே…“ என்று கல்லுக்குள் ஈரம் இருப்பது போல் அந்த திருடனுக்குள்ளும் நல்ல உள்ளம் இருந்ததால், அந்த பெண்ணிடம் விசாரித்து, அவளை அரண்மனைக்கு அழைத்து சென்றான். அரசரிடம் மாட்டினால் தன் உயிர் போவது நிச்சயம் என்பதை தெரிந்தும், அவளின் தந்தையான அரசரின் முன் வந்து நின்றான் திருடன்.

 நடந்ததை விளக்கமாக தன் தந்தையிடம் சொன்னாள் இளவரசி. அதை பொறுமையாக கேட்ட அரசர், “மறப்போம் – மன்னிப்போம் என்ற உயர்ந்த குணம்தான் மனித மனிதகுணம். ஆகவே உன்னை மன்னித்து விடுகிறன். நல்ல வேலை கிடைக்காத காரணமாகதான் திருடினேன் என்றாய். இனி உன் வாழ்க்கையில் வறுமையே அண்டாது. மகாலஷ்மி உன் நிழல் போல் பின் தொடரும் அளவிற்கு தனாதிபதியாக திகழ்வாய். அந்த அளவிற்கு ஒரு அரசு பணியும், பொன்னும் – பொருளும் தருகிறேன்“ என்று பேச்சு பேச்சோடு இல்லாமல் அரசர் செயலிலும் காட்டினார்.

 “கடுகளவு கூட புண்ணியம் செய்யாதவன், மலையளவு பாவ செயலை செய்தவன் அதுவும் சுமங்கலி பெண் என்று கூட பாராமல் மாங்கல்யத்தை பறித்த படுபாதகன் அந்த கள்வன் விரடனுக்கு எப்படி குருட்டு அதிர்ஷ்டம் வந்தது?“ என்ற பேச்சு ஊர் மக்களிடம் புகைக்க ஆரம்பித்தது.

 அதை கேட்ட ஒரு சந்யாசி ஒருவர், “சோம வாரத்தில் மழையில் குளித்து, சமைத்த உணவை அருந்தாமல் காட்டில் கிடைத்த காய் – கனியை சாப்பிட்டு, நடுஜாமத்தில் வில்வ மரத்தின் மேல் ஏறி இலைகளை பறித்து அந்த மரத்தின் கீழ் இருந்த லிங்கத்தின் மேல் தன் பக்தியை செலுத்தி சுபிட்சத்தை கண்டான் அவன். தேன் இனிக்கும் என்று தெரியாமல் சாப்பிட்டாலும் அது இனிக்கதானே செய்யும். அதுபோல், சோமவார விரதத்தை தெரியாமல் விரடன் செய்திருந்தாலும் அதன் பயனாக அவனுக்கு ஏற்றம் ஏற்பட்டது.“ என்றார் சந்யாசி.

 சோமவார விரதத்தின் முறை

 “திங்கள்கிழமை விடிய காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, சிவனை முதலில் வணங்கி பிறகு ஆலயதிற்கு சென்று சிவனுக்கு வில்வ இலையிலும் – அம்மனுக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு உங்களால் முடிந்த உணவை பிரசாதமாக கொடுக்க வேண்டும். ஒரு ஆணுக்கும் – பெண்ணுக்கும் அன்ன தானம் செய்ய வேண்டும். அவர்களை சிவனாகவும் பார்வதிதேவியாகவும் மனதில் நினைக்க வேண்டும். இப்படி முறையாக விரதத்தை கடைபிடித்தால், ஈசனுக்கு பிரியமானவராக மாறுவோம். இதனால் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல கோடியாண்டு இன்னல் இல்லாமல் வாழ்வார்கள்“ என்கிறது கந்த புராணம்.

Posted by on Mar 6 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், விரதங்களும் அதன் கதைகளும். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »