விரதங்ளும் அதன் கதைகளும். பகுதி-2
நிரஞ்சனா
விநாயகர் விரதம்
கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்?
வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி “ஒரு கரும்பு தாங்க“ என்று உரிமையோடு கேட்டான். விற்பனைக்காக எடுத்துட்டு போகும் கரும்பை ஒசியில் கேட்கிறானே என்ற கோபத்தில் இந்த கரும்பு இனிக்காது கசக்கும் என்று ஏதோ சாக்குபோக்கு சொல்லி சமாளித்து சென்று விட்டான் கரும்பு வியபாரி.
மறுநாள் அத்தனை கரும்பும் கறிக்க ஆரம்பித்தது. நேற்று ஒரு சிறுவன் தன்னிடம் கரும்பு கேட்டானே அவன் சாதாரண சிறுவன் இல்லை… விக்னேஸ்வரன் என்பதை உணர்ந்து அந்த ஆலயத்திற்கு பதறி அடித்து கொண்டு ஒடி செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கரும்பை படைத்து வணங்கினாராம் வியபாரி. பிறகே கசப்பாக இருந்த கரும்புகள் யாவும் பழைய மாதிரி தித்திப்பானது. இதனால்தான் கரும்பாயிரம் பிள்ளையார் என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.
விக்னேஸ்வரனின் ஆசி இருந்தால் விக்ணங்கள் அகலும். மஞ்சளிலும் பிள்ளையார் பிடிக்கலாம் ஏன் மார்கழி மாதத்தில் பசுச் சாணத்தில் பிள்ளையாரை பிடித்து கோலத்தின் நடுவில் வைத்து அதன் மேல் பூ வைப்பார்கள். மறுநாள் பிள்ளையாராக பிடித்து வைத்திருந்த சாணத்தை தண்ணீரில் கரைத்து வாசல் முன் தெளித்தால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள் அகலும் என்கிறது சாஸ்திரம்.
ஒரு காலத்தில் வித்தியுன்மாலி என்ற அரசர் இருந்தார். பட்டு சட்டை உடலில் இருந்தாலும் அந்த பட்டு துணி மன்னருக்கு பாரமாக இருந்தது. அந்த அளவுக்கு வியாதிகள். தலைவலி வந்து போனால் கால்வலி வந்துவிடும். கால்வலி வந்து போனால் இடுப்புவலி வந்துவிடும். இப்படி ஒன்று போனால் ஓன்று வரும். வலிகளுக்கான மருந்தை சாப்பிட்டால் அந்த வியாதிகள் பாதி் குணமாவதற்குள் வேறு வியாதிகள் அரசரின் உடலில்… “புதுவியாதி புகுவிழா“ நடத்தி குடிப்புகும். இதனாலேயே பல மருந்துகள் சாப்பிட்டதால் உடலில் உஷ்ணம் அதிகரித்தது. உடலில் பல இடங்களில் கட்டிகள் தோன்றியது. இனி மன்னருக்கு மருந்துவம் செய்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் கைவிட்டார்கள்.
உயிரோடு இருப்பதை விட இறப்பதே மேல் என்று கூறினார் அரசர். அந்த நேரத்தில் இறைவனே மானிட ரூபத்தில் வந்தது போல் ஒரு முனிவர் ராஜாவின் எதிரில் வந்து நின்று “இது முன் ஜென்ம கர்மா. நீ்ங்கள் ஸ்ரீவிநாயகப் பெருமான் விரதத்தை கடைப்பிடித்தால் பாவம் போகும். பாவம் போனால்தான் ரோகம் போகும்“ என்றார். இதை கேட்டு சினம் கொண்டார் மன்னர். “நான் பாவம் செய்தவனா? மூடனே… காவி உடையில் நீ முனிவராக இருக்க வாய்ப்பே இல்லை. தீங்கு செய்தவன் அரசனாவானா? என்பதை அறியாதவனா நீ? புண்ணியவானே அரசால்வான் என்பதை எப்படி மறந்தாய்?“ என்றார் மன்னர்.
“ஏற்கனவே உடம்பெல்லாம் ரிப்பேரு… இந்த லட்சணத்தில் முனிவர் சாபம் வேறு வாங்கி தொலையப்போகிறான் இந்த மங்கி மன்னன்.“ என்று சுற்றி நின்றவர்கள் நிச்சயம் நினைத்திருப்பார்கள்.
முனிவருக்கு கோபம் வந்துவிட்டது.
“செல்வந்தர்கள் எல்லோரும் புண்ணியவான் என்று உனக்கு எந்த மடையன் சொன்னது.? விமோசனகாலம் விபரீதபுத்தி என்பது உன் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. உன் வினை தீர வேண்டும் என்ற நல்எண்ணத்தில் சொன்னேன். விதி வலிமையானது என்பதை அறிந்தும் உனக்கு பரிகாரம் சொல்ல வந்த நான் நீ சொன்னது போல மூடன்தான்.“ என்று கூறி கொண்டே நல்ல வேலையாக சாபம் தராமல் அரண்மனையை விட்டு சென்றார் முனிவர்.
முனிவர் கூறியதை சிந்தித்து தன் தவறை உணர்ந்து விநாயகர் விரதத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தார் மன்னர். ஆச்சரியப்படும் அளவில் மன்னர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். நோய் எதனால் வந்தது? என்று தெரியாது. அது எப்படி போனது? என்றும் தெரியாது என்பதை போல அரசர் நல்ல உடல்நலம் பெற்றார். இந்த விநாயகர் விரதத்தின் மகிமையால் இன்னும் பல நாடுகளை கைப்பற்றினார். உடல்நலமே செல்வத்தை கொடுக்கும் என்பதை அந்நாட்டு மக்கள் தம் அரசரின் மூலம் அறிந்தார்கள். உடல் நலமாக இருந்தால்தான் செல்வமும் பலமும் நம்முடன் இருக்கும்.
சரி… இந்த விநாயகர் விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும்?
வியாழ கிழமையிலோ அல்லது வெள்ளி கிழமையிலோ இந்த விரதத்தை அனுசரிக்க வேண்டும். வீட்டில் விநாயகர் சிலையிருந்தால் பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்து பிள்ளையாரை நம் வீட்டு பிள்ளைகளை அலங்கரிப்பது போல நன்கு அலங்கரிக்க வேண்டும். அருகம்புல்லால் பூஜிக்க வேண்டும். நைவேதியமாக கொழுக்கட்டையை படைத்து வணங்க வேண்டும். பிறகு ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் விநாயகப் பெருமானுக்கு உங்களின் சக்திக்கேற்ப வஸ்திரம் ஒன்றை வாங்கி அணிவிக்கலாம். அத்துடன் அருகம்புல்லையும் கொழுகட்டையையும் கொடுக்க வேண்டும். தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். வீட்டுக்கு திரும்பி வந்த பிறகு ஒரு வேலையாவது விரதம் இருந்து பிறகு இறைவனுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். உடல் நிலை சரியி்ல்லாதவர்கள் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மனதால் இறைவனை வணங்கி பிரசாதத்தை சாப்பிடலாம். தீராத வினைகளும் விக்னேஸ்வரால் நிச்சயம் தீரும். வெற்றி மேல் வெற்றிதான். இனி வாழ்வெல்லாம் வசந்தம்தான்.