மகான் சீரடி சாயிபாபா – பகுதி -1
மகான் சீரடி சாயிபாபா
பகுதி -1
நிரஞ்சனா
பத்ரிஎன்ற ஊரில் ஹரிஸாடே என்றவருக்கு நல் குணவதியான மனைவி. அவள் பெயர் லகூஷ்மி. இல்லரத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாததால் மன கவலையில் இருந்தார்கள். இதனால் எந்நேரமும் இறைவனை வேண்டி வந்தார்கள். வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. ஆம் லகூஷ்மி கற்பவதியானாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள். செல்வங்களிலேயே உயர்ந்த செல்வம் மழலை செல்வம். அந்த செல்வத்தை வரமாக கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.
காலம் நகர்ந்தது. குழந்தைக்கு ஜாதகம் எழுத வேண்டும் என்று எண்ணினார் ஹரிஸாடே.
தன்னை நம்பி வரும் பக்தர்களின் விதியை மாற்ற போகும் தெய்வக் குழந்தை இது என்று அறியாமல் தெய்வத்தின் ஜாதகத்தையே கணிக்க நினைத்தார். என்ன செய்வது? தாமரை பூவின் அருமை அடைக்கலம் தரும் குளத்திற்கு தெரியாது என்பது போல தன் குழந்தையின் அருமை பாவம் ஹாரிஸாடேவுக்கு தெரியவில்லை.
“ஹாரி… ஆண் மூலம் அரசாலும் என்பார்கள். ஆனால் உன் மகனோ அரசனையே ஆள்வான். மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் உன் மகனிடம் கை கட்டி நிற்பார்கள்” என்றார் ஜோதிடர்.
“என்ன…? என் மகன் அந்த அளவுக்கு செல்வந்தனாக, உயர்ந்த அந்தஸ்தில் வருவானா?“ என்று ஆசையாக கேட்டார் ஹாரி.
ஆதிசங்கரர் துறவரம் போக போகிறேன் என்றவுடன் அவர் தாய் மனம் பதறி தன் மகனிடம் சண்டையிட்டாள். ஆம்… பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல உத்தியோகத்தில் அமர்த்தி திருமணம் செய்து வைத்து பேரன் பிள்ளைகளோடு கொஞ்சி விளையாட வேண்டும் என்று ஆசைபடுவார்களே அதுபோல்தான் ஹாரிஸாடேவும் தன் பிள்ளையும் இப்படியெல்லாம் வளமோடு வாழ வேண்டும் என்று கனவு கண்டார்.
“நீ பெற்றேடு்த்தது சராசரி குழந்தையாக இருந்தால் நீ நினைப்பது போல் நடக்கும். ஆனால் உனக்கு பிறந்த பிள்ளையோ தெய்வீக குழந்தை. இந்த யுகம் முழுவதும் உலகமே இவனை வணங்கும். ஆனால் இவன் உங்களிடத்தில் வளர மாட்டான். இவனை தத்தெடுக்க ஒருவர் வருவார். மறுக்காமல் வருபவரிடம் கொடுத்து விடு. வாழை மரம் கன்றுயிட்டவுடன் அந்த பெரிய மரம் பட்டு விடும். அதுபோல் நீங்கள் இருவரும் இறைவனடி சேர்வீர்கள். இப்படி சொன்னதற்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் நடக்க போவதோ இதுதான். விதிபடியே நடக்கும். மனதை சமாதானம் செய்து கொள்“ என்று கூறி முடித்தார் ஜோதிடர்.
மனிதனாக பிறந்தால் மரணம் நிச்சயம் என்று எல்லொருக்கும் தெரியும். ஆனால் இன்னும் சில நாட்களில் இறப்பாய் என்று கூறினால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும். மகிழ்ச்சியை மறந்து விடுவோம். அதுபோல்தான் ஹாரிஸாடே தம்பதிகளின் முகத்தில் சந்தோஷம் இல்லாமல் கவலையுடனே இருந்தார்கள். இருந்தாலும் மனதை தேற்றிகொண்டு குழந்தையை முன்பை விட அதிகமாகவே சீராட்டி வளர்த்தார்கள். ஒருநாள் தெய்வீக குழந்தையை பெற்றேடு்த்தவர்களுக்கு ஒரு கனவு வந்தது. அதுவும் ஒரே கனவு.
திடுக்கிட்டு எழுந்தார்கள். ஹாரிஸாடேவிடம் அவரின் மனைவி லகூஷ்மி “என்னங்க… நாளை காலை ஒரு முகமதியர் வருவார். அவரிடம் உன் குழந்தையை கொடுத்து விடு.“ என்று என் கனவில் இறைவனின் குரல் கேட்டது“ என்றாள்.
“உன் கனவில் மட்டும் அல்ல. என் கனவிலும் இதுபோல் கனவுதான் வந்தது”. என்றார். இப்படியே பேசி கொண்டு இருக்கும் போது பொழுதே விடிந்துவிட்டது. கனவு நினைவாகும் என்பது போல் யார் வீட்டுக்கும் பிச்சை எடுக்க செல்லாமல் சொல்லி வைத்தது போல் ஹாரிஸாடோ விட்டுக்கு பிச்சை கேட்டு வந்து நின்றார் ஒரு பக்கீரி. பக்கீரியின் குரல் கேட்டவுடன் நம் குழந்தையை அழைத்து செல்ல வந்துவிட்டார் முகமதிய பக்கீரி என்பதை உணர்ந்துகொண்டு குழந்தையை மறைத்து வைத்துவிட்டு அரிசியை கொடுக்க சென்றாள்.
“என்னம்மா… எனக்கு உங்க குழந்தையை தத்து கொடுக்க இறைவன் உங்கள் கனவில் வந்து சொல்லவில்லையா? அல்லா என் கனவில் கூறியதாக சொன்னாரே“ என்று சொன்னதும் பெற்ற மனம் துடித்தது. அழுதுகொண்டெ வீட்டுக்குள் ஒடினாள். இதை கண்ட ஹாரி “ஏன் அழுகிறாய்“ என்று கேட்டு கொண்டெ வெளியே வந்து பார்த்தார். முகமதியரை பார்த்தவுடன் “ஒ…வந்துட்டிங்களா கொஞ்சம் இருங்க வரேன்“ என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று தன் குழந்தையை தூக்கி கொண்டு வெளியில் இருந்த முகமதியரிடம் கொடுத்து அனுப்பினார்.
“ஏன் அழுகிறாய்.? பாதுகாப்பான இடத்தில்தான் நம் குழந்தை வளர போகிறான் என்று மனமகிழ்ச்சியுடன் இரு.“ என்று கூறினார் ஹாரி. சில நாட்களிலேயே ஹாரிஸாடோ தம்பதிகள் ஜோதிடர் கூறியது போல் முக்தியடைந்தார்கள்.
“அல்லாவே இந்த குழந்தையை தந்தார்.“ என மகிழ்ச்சி அடைந்து குழந்தைக்கு “கபீர்“ என்று பெயர் வைத்து அந்த குழந்தையை தான்பெற்ற குழந்தைபோல் வளர்த்தாள் முகமதிய பக்கீரியின் மனைவி.
பல வருடங்கள் கடந்தது. கபீர் குழந்தை பருவத்தில் இருந்து சிறுவனாக வளர்ந்தான். வளர்ப்பு தந்தைக்கோ அதிக வயதானது. அதிக வயதே மரண பயத்தை கொடுக்கும். மரண பயமே உடலில் நோய்களுக்கு வழியை காட்டும்.
ஆம்… பக்கீரிக்கு உடல் நலம் இல்லாமல் போனது. அதனால் தன் மனைவியை அழைத்து “நான் அதிக நாட்கள் வாழ மாட்டேன். என் உடல் நிலை மிகவும் மோசமாக போய் கொண்டு இருக்கிறது. என் மறைவுக்கு பிறகு நீ “சேலு“ என்ற ஊருக்கு போ. அங்கு “கோபால்ராவ் தேஷ்முக்“ என்ற ஜமீன்தார் இருக்கிறார். அவர் நல்ல உள்ளம் படைத்தவர். அவரிடம் நான் அனுப்பினேன் என்று கூறு. நிச்சயம் அவர் உன்னை தன் சகோதரிபோல கவனித்து நம் குழந்தையையும் நல்லபடியாக பார்த்து கொள்வார்.“ என்று கூறி மன அமைதியுடன் கண்னை மூடினார்.
ஜமீன்தார் கோபால்ராவ் தேஷ்முக்கை சந்தித்து நடந்ததை கண்ணீர் மல்க கூறினாள் முகமதியரின் மனைவி. “அம்மா கவலைப்படாதே. உங்கள் குழந்தையின் முகம் தெய்வீக கலையுடையது. அவனை காப்பாற்றுவது நான் செய்த பாக்கியம். நீங்கள் எதை பற்றியும் வருந்த வேண்டாம். நீங்கள் என் சகோதரியை போல.“ என்று கூறி கபீரை தன் அருகில் அழைத்து தன் இருக்கையின் பக்கத்தில் அமர வைத்தார்.
காலம் நகர்ந்தது. சிறுவன் கபீர் வளர்ந்து இளைஞனாக இருந்தான். பல சாஸ்திரங்களை கற்று கொடுத்தார் ஜமீன்தார் கோபால்ராவ் தேஷ்முக். அவரை குருவாகவே மதித்து நடந்தான் கபீர்.
நம்மை காட்டிலும் நம் குரு பக்கிரியின் மகன் மேல் அதிக பாசமாக இருக்கிறாரே என்று மற்ற சீடர்களுக்கு கவலை ஏற்பட்டது. அது பொறாமையாக மாறியது. ஒருநாள் காட்டு பகுதியில் குரு கோபால்நாத்தும் கபீரும் பேசி கொண்டிருந்தார்கள். அப்போது அடர்த்தியாக இருக்கும் செடியின் அருகே பொறாமைகார சீடர்கள் எப்படியாவது கபீரை கொல்ல வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். செங்கல் ஒன்றை எடுத்து கபீரின் தலையை குறி பார்த்து அடித்தார்கள். இறைவனை அடித்தால் அவன் அரசனாக இருந்தாலும் அவன் முதுகிலும் அடி விழும் என்பதை அறியாத மூடர்களாக இந்த காரியத்தை செய்தார்கள். அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது.
பறந்து வந்த கல் கபீரின் இருகில் வந்ததும் ஒரு நிமிடம் நின்றுவிட்டு பிறகு கீழே விழுந்தது.
தூரியோதனனுக்கு தன் விஸ்வரூப காட்சியை காட்டினான் கிருஷ்ணன். அப்போது கண் பார்வை இல்லாத திருடாஷ்டருக்கு கூட கிருஷ்ணனின் விஸ்வரூப காட்சி தெரிந்தது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இறைவனின் அவதாரம் என்பதை உணர்ந்தும் திருடாஷ்டருக்கு பிள்ளை பாசம் கண்னை மட்டுமல்ல புத்தியை கூட குருடாக்கியது. துரியோதனுக்கோ மண் ஆசையால் ஆனவம் தலைகேறி பல மடங்கு சக்தி வாய்ந்த பரமாத்மாவையே எதிர்த்து பேசினான். அதுபோல தெய்வ சக்தி கூடி கொண்டு இருக்கும் ஒருவர் மேல் கல் எறிகிறோமே என்ற சிறு தயக்கமோ பயமோ அறிவோ இல்லாமல் மறுபடியும் இன்னொரு செங்கல்லை எடுத்து கபீரின் மேல் குறி பார்த்து எறிந்தார்கள் மடையர்கள்.
அந்த செங்கல் கபீரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த குரு கோபால்ராவ் தேஷ்முக் தலை மேல்பட்டது. நெற்றியில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. கல் எறிந்த கோஷ்டியில் இருந்தவர்களின் ஒருவன் தன் குருவின் நெற்றியில் வரும் ரத்தத்தை பார்த்தவுடன் பயத்திலேயே அங்கேயே மரணம் அடைந்தான். இதை கண்ட மற்றவர்கள் அஞ்சி நடுங்கி போனார்கள்.
அப்போது மேய்சலுக்காக ஒருவன் மாட்டை ஓட்டி கொண்டு வந்தான். அந்த மாட்டுகாரனை அழைத்து “இந்த மாட்டில் இருந்து இந்த கமண்டலத்தில் பால் கறந்து கொடு“ என்றார் கோபால் நாத். “சாமி இது மலட்டு மாடு. பால் கறக்காது. என்றான்.
“நீ…..கறந்தால் பால் வராது. ஆனால் இந்த மகான் தொட்டாலே போதும் பசு தானாகவே பால் சுரக்கும்“ என்று தன் அருகில் இருந்த கபீரிடம் கமண்டலத்தை கொடுத்து “பால் கறந்து வா“ என்றார் குரு. மலட்டு மாடு எப்படி பால் கறக்கும் என்று தன் குருவிடம் கேள்வி கேட்கவில்லை.
கைலாயத்தில் இருந்து ஒரு முனிவர் சிவனை பார்த்துவிட்டு வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு நாரத முனிவரும் அவருடன் வேறு ஒரு முனிவரும் இருந்தார்கள். “என்ன முனிவரே… இப்போது சிவ பெருமான் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.?“ என்றார் நாரத முனிவர்.
“ஊசியின் காதில் யானையையும் ஒட்டகத்தை நுழைத்து விளையாடி கொண்டு இருக்கிறார்“ என்றார் முனிவர்.
என்ன உளருகிறீர்…? ஊசியின் காதில் எப்படி யானையும் ஒட்டகமும் போகும்?“ என்றார் நாரத முனிவர்.
“ஏன் போகாது…? ஈசன் நினைத்தால் உங்களையும் என்னையும் ஏன்… இதோ தகவல் சொன்ன இவரையும் ஊசியின் காதில் நுழைத்து விடும் சக்தி ஈசனுக்கு உண்டு“ என்றார் நாரத முனிவரின் அருகில் இருந்த முனிவர்.
அதுபோல “மலட்டு மாடு எப்படி பால் கறக்கும்.?“ என்று எதிர் கேள்வி கேட்காமல் தன் குருவின் கமண்டலத்தை வாங்கி பசுவின் அருகில் சென்று அதை மூன்று முறை தடவி கொடு்த்த பிறகு அதன் காம்பில் பால் கறந்தான் கபீர். என்ன ஆச்சரியம்… மலட்டு மாடு பால் சுரந்தது. இதை கண்ட மாடு மேய்ப்பவன் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான். இந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த பொறாமைகார சீடர்கள் ஓடோடி வந்து குருவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள்.
“குருவே எங்களுடன் வந்த ஒருவன் இறந்து விட்டான். அவனை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.“ என்றார்கள்.
“பிருங்கி மகரிஷி தன் சக்தியை இழுந்ததுபோல நான் இருக்கிறேன். எப்போது என் உடலில் இருந்து ரத்தம் கீழே சிந்தியதோ அப்போதே என் சக்தியும் போயிற்று. என் சக்தி எல்லாம் இந்த கபீரிடம் இருக்கிறது. உங்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால்… இந்த பக்கிரியிடம் இருக்கிறது. இவன் மனம் வைத்தால் இறந்தவன் பிழைப்பான்.“ என்றார் குரு.
செய்த தவறை உணர்ந்து கபீரிடம் மன்னிப்பு கேட்டார்கள் சீடர்கள். குரு தன் கமண்டலத்தை கபீரிடம் கொடு்தது “இந்த பாலை இறந்தவன் மேல் தெளி. அத்துடன் அவன் வாயிலும் ஊற்று. இறந்தவன் உன் சக்தியால் மீண்டும் எழுவான் கபீர்.“ என்றார் கோபால்நாத் குருஜி. குருஜி கூறியது போல் செய்தார் கபீர். தூக்கத்தில் இருந்து விழிப்பவன போல் எழுந்தான் அவன்.
சில மாதங்க்ள நகர்ந்தது. கோபால்நாத் கபீரை தன் அருகில் அழைத்து “இனி நான் உயிரோடு இருக்க போவது இல்லை. முக்தி அடையும் காலம் நெருங்கி விட்டது. ஒரு குருவியானது கூடு கட்டி குஞ்சி பொறித்து அந்த குஞ்சிக்கு பறக்கும் சக்தி வந்தவுடன் கட்டிய கூட்டை அதுவே அழித்தும் விடுகிறது. காரணம் உலகம் என்றால் என்ன.? காற்றிலும் மழையிலும் போராடி எப்படி வாழ வேண்டும் என்று தன் வாரிசுகளுக்கு தைரியம் கொடுக்க இப்படி செய்கிறது. அதுபோல இத்தனை வருடங்கள் என் அரவனைப்பில் இருந்தாய். இனி நீ யார் என்பதை உலகம் அறிந்து அவர்கள் உன் அரவனைப்புக்குள் வருவார்கள். கபீர்… என் மேல் விழுந்த அந்த செங்கல்லை நீ பத்திரமாக பாதுகாக்க வேண்டும். என் மறைவுக்கு பிறகு நீ மேற்கை நோக்கி செல். அங்கு “ஷிரடி“ என்ற ஒரு ஊர் இருக்கிறது. அங்கே போ. இனி எல்லாம் நன்மையாகவே நடக்கும்.“ என்றார் குருஜி கோபால்ராவ் தேஷ்முக்.
எதற்காக குருநாதர் குறிப்பாக சீரடியை சொன்னார்.? என்று கேள்வி கேட்காமல் குருவின் உத்தரவே வேதம் என்று நம்பினார் கபீர்.
கபீர் ஷிரடி சென்றாரா? அந்த ஊர் மக்கள் கபீரை உடனே ஏற்றுக் கொண்டார்களா? அந்த சமயம்தான் ஷிரடி என்னும் அந்த ஊர் முழுவதும் ஒரு மர்மநோய் தாக்க இருந்தது. ஷிரடி மக்களை தாக்க இருந்த அந்த மர்மநோய் என்ன…?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved