நவரத்தின மகிமைகள் – பாகம் 1
நவரத்தின மோதிரம் அணியலாமா?
வி.ஜி.கிருஷ்ணாராவ்
ஜோதிட வல்லுனர்
(M) 98411 64648
நவரத்தினங்கள் என்றால் நவகிரகங்களால் உருவாக்கப்பட்டது என்று நினைப்பார்கள். இதில் ஒரு அசுரன் ரத்தினமாக மாறிய கதை உங்களக்கு தெரியுமா?
வலாசுரன் சிவனை நினைத்து கடும் தவம் இருந்து வந்தான். அவன் தவத்தை ஈசன் ஏற்றார். இறைவனிடம் அந்த அசுரன் ஒரு வரம் கேட்டான்.
“சர்வலோக நாயகனே… அண்டம் காக்கும் சிவனே… நான் வேண்டும் வரம் எதுவென்று நீயே அறிவாய். இருப்பினும் நானே சொல்கிறேன். எனக்கு எதிரிகளால் மரணம் நேரக் கூடாது. அப்படியே வந்தாலும் நான் அழியாமல் இந்த உலகத்திலேயே வாழ என் உடலை எரித்தாலும் ஜொலிக்க வேண்டும். உடலால் நான் அழிந்தாலும் வேறு ஒரு ரூபத்தில் நான் வாழ்ந்திட வேண்டும். அதற்கு நான் ரத்தினமாக உருவாக வேண்டும். ஒவ்வொரு ரத்தினங்களிலும் நான் உயிர் வாழ வேண்டும்.“ என்ற வரத்தை கேட்டு பெற்றான் வலாசுரன்.
சிவவரம் பெற்றறவனின் அதிகாரம் எல்லாலோகத்திலும் எதிரோலித்தது. யாவும் அவன் வசமானது. இந்திரன் வலாசுரனிடம் போர் செய்து வெல்ல முடியாமல் தந்திரமாக பேசினான்.
“வலாசுரா உனக்கு என்ன வரம் வேண்டும் என்பதை கேள் தருகிறேன்”
இந்திரனின் இந்த பேச்சை கேட்டு அகிலம் அதிரும்படி சிரித்தான் வலாசுரன்.
“நீ எனக்கு வரம் தருகிறாயா? அட தேவேந்திரா… உனக்கு என்ன வரம் வேண்டும் என்பதை நீ கேள் நான் தருகிறேன்” வலாசுரனின் இந்த ஆணவப் பேச்சிதான் இந்திரனுக்கு சாதகமாக இருந்தது. இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று தன் திட்டத்தை நிறைவேற்றினான் இந்திரன்.
“வல்லமை மிக்க வலாசுரரே… பசு தெய்வீக தன்மை கொண்டது. நீயோ அசுரன். உன்னால் பசுவாக மாற முடியுமா?“ என்று இந்திரன் சீண்டி விட வலாசுரன் எதையும் யோசிக்காமல் பசுவாக மாறினான். உடனே சற்றம் தாமதிக்காமல் பசுவாக மாறிய அசுரனை தருப்பைக் கயிற்றால் கட்டி ழூச்சை அடக்க செய்து அசுரன் இறந்ததும் தீயில் போட்டு எரித்து விடுகிறான் இந்திரன். வலாசுரன் அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் இறக்கும் போது புனிதமான பசுவாக மாறி இறந்ததால் தெய்வத்தன்மையடைந்தான்.
பசுவின் ரத்தம் மாணிக்கங்களாகவும், பற்கள் முத்துக்களாகவும் இப்படி ஒவ்வோரு உறுப்புக்களும் ஒவ்வோரு ரத்தினங்களாக மாறியது.
ஜாதகத்தில் ஒரே ராசி கட்டத்தில் எல்லா கிரகங்களும் சேர்ந்து ஒன்றாக இருந்தால் அதை “கிரக யுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதேபோல் நவரத்தின கற்களையும் ஒன்றாக சேர்த்து அணிந்தால் நமது முயற்சியில் தடை, எதிர்பாராத பகை நிம்மதி இல்லாமல் இருப்பது போன்ற பாதிப்புகள் இருந்துக் கொண்டிருக்கும். காரணம் சூரியனுக்கு சனி பகை. சூரியனுக்கு உகந்தது மாணிக்கம். சனிக்கு உகந்தது நீலம். இவை ஒன்றாக நவரத்தின மோதிரத்தில் சேர்ந்து அமைவதால் ஒன்றுக்கொன்று பகை ஏற்பட்டு அதை அணிபவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தர முடியாது. ஒன்பது ரத்தினத்தை ஒன்றாக சேர்த்து நவரத்தின மோதிரமாக அணியாமல் ஜாதகத்தை உங்கள் ஜோதிடரிடம் காண்பித்து எந்த ரத்தினம் அணிந்தால் நல்லது என்று தெரிந்து செய்து அந்த ரத்தினத்தை மட்டும் அணிந்து சுகமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.
ரத்தினத்தை அணிந்தால் எப்படி நன்மை ஏற்படும்? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த ஏழு சக்கரங்களுக்கும் ஒவ்வோரு நிறமும் அந்த நிறங்களுக்கு உகந்த சக்திகளும் இருக்கிறது. இதை பற்றி ஒவ்வோரு ரத்தினத்தை குறிப்பிடும் போது விளக்கமாக சொல்கிறேன்.
உடலில் இருக்கும் சக்கரத்துக்கும் அதன் சக்திகளையும் செயல்படுத்தவே நவரத்தினங்களை அணிய வேண்டும். உடலில் ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருந்தால் அந்த இடத்தில் சிகப்பு நிறத்தை காட்டி சீரான ரத்த ஒட்டத்தை உண்டாக்குவார்கள் மருத்துவர்கள். அதுபோல் நாம் அணியும் ரத்தினத்தின் மேல் சூரிய ஒளிபட்டு அந்த ரத்தினத்தின் நிறம் உடலுக்குள் ஊடுருவி இயங்க ஆரம்பிக்கிறது.
பொதுவாக உயர்ந்த ஜாதி இரத்தினத்தை அணிந்தால்தான் நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது சிலருக்கு. ஆனால் குறைந்த விலை ரத்தினம் கூட ஏற்றத்தை கொடுக்கிறது பலருக்கு.
உயர்ந்த ஜாதி ரத்தினங்கள் வாங்கலாமா? அல்லது விலை குறைந்த இரத்தினங்கள் வாங்கலாமா? என்று பார்ப்பதை விட வாங்கப்படும் இந்த இரத்தினம் தோஷம் இல்லாமலும், விரிசல் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும் என்கிறது இரத்தின சாஸ்திரம்.
நம்மை நிமிர்ந்த உட்கார வைக்கவும் நடக்க வைக்கவும் மூலாதாரச் சக்கரம் இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த சக்கரம் நம் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது.? இந்த சக்கரத்துக்கு உகந்த தெய்வம் எது? ரத்தினம் எது? எந்த வகையில் அது ஏற்றத்தை தருகிறது? அந்த ரத்தினத்தின் பெயர் என்ன?
(ஜொலிக்கும்)
தொகுப்பு : நிரஞ்சனா