Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

இராவணனின் அரண்மனையில் அமைந்த வாஸ்து குறை

வாஸ்து வியூக நுட்பங்கள்

பகுதி 9

விஜய் கிருஷ்ணாராவ்

(M) 98411 64648 / 98406 75946

E-Mail : bhakthiplanet@gmail.com

 

by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்

சிவபெருமானிடமிருந்து பிராணலிங்கம் பெற்ற இராவணன், அதை இலங்கைக்கு எடுத்து செல்ல புறப்பட்டான். பிராணலிங்கத்தை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால் பிறகு இராவணனை யாராலும் வீழ்த்த  முடியாது. அவனது அட்டகாசத்துக்கும் ஒரு அளவில்லாமல் ஆகி விடும். இதனால் அன்னை பார்வதி யோசித்தாள். இலங்கைக்கு இராவணன் பிராணலிங்கத்துடன் செல்வதை தடுக்க, தன் மகன் விநாயகரால்தான் முடியும் என்று தீர்மானித்தாள். அதனால் மனதிலே தன் மூத்த மகன் விநாயகரை நினைத்து அவருக்கு ஒரு கட்டளையிட்டாள்.

தன் தாயின் கட்டளை விநாயகருக்கு தெரிந்தது. புறப்பட்டு இராவணனை நோக்கி சென்றார். நடுவே குறுக்கிட்டார்கள் தேவர்கள். இராவணன், பிராணலிங்கத்தை பெற்ற விஷயத்தை சொன்னார்கள். “எங்களை காக்க வேண்டும்” என வேண்டினார்கள்.

“முதலில் வணங்க வேண்டிய என்னை வணங்க தவறினீர்களே நன்றாக அனுபவியுங்கள்.” என்று பொய் கோபம் கொண்டார் ஆனைமுகன். பதறினார்கள் தேவர்கள்.

“விநாயகப் பெருமானே.. எங்களை மன்னியுங்கள். எங்கள் பிரச்சினையில் முதலில் வணங்க வேண்டிய தங்களை மறந்தோம். மறந்தோம் என்பதை விட, விதி எங்கள் விழியை மறைத்தது. எங்கள் வழியை மாற்றியது. மன்னித்துவிடுங்கள். எங்களுக்கு நல்வழிகாட்டுங்கள். இராவணனால் எங்கள் இன்பங்களை, செல்வ செழிப்பை இழந்தோம். எங்களை காப்பாற்றுங்கள்.” என்று வேண்டினார்கள்.

“சரி. போதும் உங்கள் புலம்பல் புராணம். எனக்கு வழியை விடுங்கள். நீங்கள் பஞ்ச பாட்டுபாடி முடிப்பதற்குள் இராவணன் பிராணலிங்கத்தை இலங்கைக்கு போய் சேர்த்து விடுவான். பரவாயில்லையா?.” என்றார் விநாயகப் பெருமான்.

தேவர்கள் விநாயகரை வணங்கி அனுப்பி வைத்தார்கள்.

சிறுவன் வடிவில் விநாயகப் பெருமான் இராவணனின் வழியில் குறுக்கிட்டு, இராவணன் பிராணலிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்லாமல் தடுத்த இடம் இன்று திருக்கோகர்ணம்  என்று அழைக்கப்படுகிறது. சிவபக்தனான இராவணனுக்கு சில வரங்களை தந்தார் விநாயகர். இராவணன் பிராணலிங்கம் இல்லாமல் இலங்கை திரும்பினான். ஒருவேளை பிராணலிங்கத்தை இராவணன் தன் நாட்டில் பிரதிஷ்டை செய்து இருப்பானாகில், அவனை அழிக்க சிவபெருமானே வந்தால்தான் முடிந்திருக்கும்.

இந்தளவு புகழ்-பெருமை-அற்புதமான சிவபக்தி போன்றவை இராவணனுக்கு இருப்பதை கண்டு மகிழ்ச்சி கொண்டதால்தான், மயன் தன் மகள் வண்டோதரி எனும் மண்டோதரியை இராவணனுக்கு திருமணம் செய்து தந்திருந்தார். இலங்கை நகரத்தை வடிவமைத்து, அரண்மனை கட்டுமானம் போன்றவற்றை மயன் ஏற்று சிறப்பு செய்தார். இன்றும் “பாதாள லோகம் என்று நம் பாதத்திற்கு கீழே இருக்கும் லோகத்தை மயன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஆட்சி-அதிகாரம் செய்வதாக சாஸ்திர நூல்கள் சொல்கின்றன.

அதனால்தான் கட்டடவேலை தொடங்குவதற்கு முன்னதாக பூமி பூஜை என்பதை இந்தியர்களாகிய நாம் மிக முக்கிய நிகழ்ச்சியாக கடமையாக பொறுமையுடன் செய்கிறோம். இதிலே வாஸ்து தேவனை மட்டும் நாம் வணங்கவில்லை. பூமி தாய் மற்றும் மயனையும் சேர்த்தே நாம் மறைமுகமாக வணங்குகிறோம்.

இத்துணை சிறப்புடன் இலங்கையையும் இராவணனின் அரண்மனையையும் வடிவமைத்த மயன், அதில் ஒரு குறை வைத்தார். அது என்ன குறை?- எங்கே குறை? என்பதை பற்றி ஆரம்பத்தில் அவரே கூட அறியவில்லை. தாம் கண்டறிந்த கட்டட சாஸ்திர விதிமுறைக்கு முரணாக முக்கிய தவறுகள் இலங்கை கட்டுமானத்தில் உண்டாகிவிட்டிருந்தது.

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே அதுபோல.

இந்த விஷயமும் மயனுக்கு முன்பே தெரிந்திருக்கவில்லை. இந்திரலோகத்தில் தேவர்கள் சிலர் இலங்கையின் கட்டட சிறப்புகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு கட்டட சாஸ்திரம் தெரிந்த தேவர்கள் சிலர், இராவணனின் அரண்மனையில் மயனே அறியாமல் செய்திருந்த கட்டட சாஸ்திர குறைகளை பற்றி பேசினார்கள். தீவு நாடான இலங்கையில் இராவணனின் அரண்மனையை சுற்றி இருக்கக்கூடிய குறை மற்றும் மேற்கு பகுதியில் நீர் நிலைகளையும், தென்மேற்கிலும் நீர் நிலைகள் அமைந்திருப்பதையும் வேறு சில குறைகளும் பேசப்பட்டது.

இது இராவணனின் காதுக்கு எட்டுவதற்கு முன்னதாக மயனுக்கே எட்டியது. அத்தோஷக் குறையினை தாமதமின்றி திருத்திட இலங்கைக்கு புறப்பட்டார். ஆனால் மயன், அக்கட்டட சாஸ்திர குறைகளை நிவர்த்தி செய்திடக் கூடாது. அப்படி நடந்தால் அது இலங்கை வேந்தன் இராவணனுக்கு இன்னொரு அசுர பலமாக மாறும் என்பதை உணர்ந்து பயந்த தேவர்கள், நாரதரின் துணையை நாடினார்கள். அவசரமாக இலங்கைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த மயனை நாரதர் சந்தித்தார்.

ஏதேதோ பேசி மயனின் கவனத்தை திசை திருப்பி பயணத்தையும் தடை செய்ய முயன்றார். ஆனாலும் மயனின் கவனம் இலங்கையை நோக்கியே இருந்தது. அதனால் நாரதர் வேறு வழியின்றி தன் மாய வேலையை செயல்படுத்தினார்.




ஆம் –

அது மாயவேலை என்று சொன்னாலும் அதனை சூழ்ச்சி எனவும் சொல்லலாம்.

மயனின் ஞாபக சக்தியில் இருந்து, இலங்கையில் உண்டான கட்டட சாஸ்திர குறையை மறக்கச் செய்தார் நாரதர். தாம் எதற்காக இலங்கை செல்ல வேண்டும்? என்பதையே மறந்தே போனார் மயன். நாரதரின் தந்திர வேலை வெற்றி பெற்றது. தேவர்களும் சரி- அசுரர்களும் சரி ஒருவரை ஒருவர் மந்திர தந்திரத்தினாலேயே வெற்றி பெறுவது ஒரு சாமர்த்தியமாக அல்லது திறமையாக எண்ணப்படுகிறது.

ஆகவே –

நாரதரின் தந்திரமும் இராவணனின் வீழ்ச்சிக்கு மறைமுக காரணமாக இருந்திருக்கிறது. ஒருவேளை, இலங்கை கட்டுமானத்தில் மயனின் கவனக்குறைவால் உண்டான தவறு திருத்தப்பட்டிருந்தால்-நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால் இராவணன் செய்யக் கூடாத செயல்கள் செய்திருக்க மாட்டான். அவனை வென்றிருக்கவும் முடியாது.

ஆனால் – தர்ம நெறிக்கு எதிராக துன்பக்கெடுதல் பல செய்து பிறகு சாமியே சரணம் என்றால் இறைவன் மன்னித்துவிட மாட்டான் என்கிற தத்துவ உண்மையை – கருத்துண்மையை நமக்கெல்லாம் உணர்த்திடத்தான் இறைவன், தன் பக்தனையே ஒரு கருவியாக்கி காட்டினான். அதனால் இராவணனின் வெற்றி-தோல்வியாவும் இறைவனின் செயலாகவே அது நிகழ்ந்தது.

இந்த காவிய நிகழ்வுகளின் பயனாக நாம் அறிய வேண்டிய வாஸ்துகலை கருத்து என்னவென்றால் சிலர் சொல்லக் கேட்டிருப்போம். அதாவது தம் வீட்டை வாஸ்துபடிதான் கட்டினேன் என்பார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் காண முடியவில்லை, தங்கள் வாழ்க்கை நிலையிலும் மாற்றமில்லை. அப்படியேதான் இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படி சொல்பவர்களுக்கு இந்த காவிய நிகழ்வு நல்ல பதிலாக இருக்கிறது.

அது எப்படி? –

This Article is Sponsor By

கட்டட சாஸ்திரக்கலையின் அதன் சக்தியின் மீது எந்த குறையும் இல்லை. அது அந்தந்த மனைக்கு, அதன் தன்மைக்கேற்ப கட்டடம் கட்டப்பட்டுள்ளதா? என பார்த்து அதற்கேற்பவே சாதக-பாதக பலன்களை தருகிறது. இதுதான் கட்டட சாஸ்திரத்தின் முக்கிய வேலை. ஆனால் நம்மையும் அறியாமல் நாம் கட்டிய கட்டடத்தில் ஏதேனும் வாஸ்துகுறை உண்டாகிவிட்டிருக்கும். அதனை அந்த தவறை மிகச் சரியாக கண்டறிந்து நாம் நிவர்த்தி செய்திட நமது முயற்சி மட்டுமல்லாமல் இறைவனின் அருளும் வேண்டும். ஜோதிடம் – வாஸ்து பார்த்தும் எந்த பயனும் இல்லை என்பவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் நிறுத்த வேண்டும்.

யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எல்லா சாஸ்திர கலைகளும் பயன் உள்ளதுதான்-சக்தி நிறைந்ததுதான். அதன் வேலையை அது செய்து கொண்டுதான் இருக்கும். இனிப்பு இனிக்கும் என்று நம்பாவிட்டாலும் இனிக்கத்தான் செய்யும். ஆனால் அதை தயாரிப்பவர் கைபக்குவத்தில் இருக்கிறது திறமை. அதுபோல சாஸ்திரகலைகள் பயன்தரக் கூடியதுதான் – அதனை கணித்து சொல்வதில்தான் வெற்றி இருக்கிறது.

வயிற்றுவலிகாரனுக்கு இருமல் மருந்து தருவது மருத்துவனின் தவறே தவிர மருத்துவத்தின் தவறு அல்ல. அதுபோல, சாஸ்திர விஷயங்களை அனுசரித்தும் பலன் உண்டாகவில்லை எனில், செயல்முறையில் ஏதோ தவறு இருக்கலாமே அன்றி, சாஸ்திரக்கலைகளில் குறை இருக்க முடியாது.

ஒரு குடும்பத்தில் ஏற்படுகிற பொருளாதர நெருக்கடிகளுக்கு கட்டட சாஸ்திர ரீதியான காரணம், வடக்கு திசையில் ஏதேனும் வாஸ்து குற்றம் ஏற்பட்டு இருந்தால் தோஷம் ஏற்படுகிறது. அந்த வடக்கு பகுதியில் சின்ன வாஸ்து தவறு உண்டாகி இருந்தாலும் படிபடியாக முன்னேற்றத்தை நமக்கே தெரியாமல் தடைப்படுத்தும் என்கிறது வாஸ்துகலை. இவ்வாறான வாஸ்து கருத்துகள் மயன் நூல்களிலும் – விஸ்வகர்மா நூல்களிலும் இருக்கிறது.

மனையடி சாஸ்திரம் என்கிற கட்டட சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட சாஸ்திர விதிகளுக்கு முரணாகவும் சில கோயில்கள் உள்ளன.

வடக்கு-வடகிழக்கு-கிழக்கில் நீர் நிலைகள் இருக்க வேண்டும் என்பது கட்டட சாஸ்திர விதி. ஆனாலும் சில கோயில்களில் அக்னிமூலை என்று அழைக்கப்படும் தென்கிழக்கில் நீர் நிலைகளும், நிருதி மூலை என்று அழைக்கப்படும் தென்மேற்கில் கோயில் குளம் எனப்படும் நீர் நிலைகளும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதனை அந்தந்த கோயில்களின் ஸ்தலபுராணத்தில், இந்த கோயில் குளம் அக்னி திக்கில் இருப்பதை அக்னி தீர்த்தம் என்றும், நிருதி திக்கில் இருப்பதை நிருதி தீர்த்தம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவற்றை பார்க்கும் போது நமக்கு சில கேள்விகள் எழலாம்.

நீர் நிலைகள் கிழக்கு-வடக்கில் இருக்க வேண்டும் என்று கட்டட சாஸ்திரம் என்கிற வாஸ்துகலை சொல்கிறது. ஆனால் சில கோயில்களில் தெற்கிலும் மேற்கிலும் குளம் அமைந்திருக்கிறது. கட்டட சாஸ்திர விதிமுறைகள் புராண காலத்தில் இருந்தே வழி வழியாக அனுசரித்து வரப்படுகிறது என்கிறபோது-அக்காலத்தில் இருந்தவர்கள் எவ்வாறு சாஸ்திரத்திற்கு எதிராக கட்டட அமைப்பை உண்டாக்கினார்கள்?

இவ்வாறு புகழ்பெற்ற கோயில்களிலேயே அக்னி மூலையில் குளம் இருக்கும் போது, நமது வீட்டிலும் அக்னி மூலையில் கிணறு –ஆழ்துளை கிணறு போன்றவற்றை அமைப்பதில் என்ன தோஷம் ஏற்பட்டுவிட போகிறது.?

கேள்வி நியாயமானதுதான். ஆனாலும் அது அப்படி அல்ல.

கோயிலாக பிற்காலத்தில் மாறும் ஒரு இடத்தில் அக்னி பகவான், இறைவனை வழிப்பட்டு வரும் காலத்தில், அவரின் வழிபாடுக்கு தீர்த்தம்(தண்ணீர்) தேவைப்படுகிறது. அதனால் அவர் தனக்குரிய திசையில்தான் தீர்த்தம் எனப்படும் குளத்தை அமைக்க முடியும். அதை விடுத்து அவர் பிற திசைகளில் அல்லது திக்குகளில் தீர்த்தம் அமைக்க இயலாது. இவ்வாறு கிரகங்களுக்கும்-திசை தெய்வங்களுக்கும்-இந்திரன்-பிரம்மன் முதலான தேவர்களுக்கும் அவரவரின் தன்மைக்கு ஏற்பவே தேவலோக சிற்பி என அழைக்கப்படும் விஸ்வகர்மா, பூமியில் அவர்கள் இறைவனை வழிபட கோயிலாக, அந்த கோயிலில் குளங்களாக அமைத்து தந்திருக்கிறார். இதனால்தான் சில கோயில்களில் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல –

பிற்காலத்தில் விஸ்வகர்மா கட்டிய கோயில்கள் இயற்கைக்கு கட்டுப்பட்டு சேதம் அடைதல்,மண்ணில் புதைந்து போவது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு மறைந்திருந்தன. அதன் பின்வரும் காலங்களில் பேரரசர்கள் முதல் சிற்றரசர்கள் வரை தெய்வ செயலால் – சித்தர்கள் வழிகாட்டுதலால் அல்லது இறைவன் கனவில் காட்சி தந்ததால் அதே இடங்களில் அவரவர்களின் பெயர், புகழோடு நிலைக்க வேண்டும் என மீண்டும் கோயில்களை சீரமைத்து எழுப்பினார்கள். அந்த காரணங்களாலும் சில கோயில்களில் கட்டட சாஸ்திர விதிக்கு மாறாக சில விஷயங்கள் அமைந்துவிடுவதுண்டு.

அதனால் இன்றைய கோயில்களில் உள்ள கட்டட அமைப்பை பார்த்து அதன்படி நாம் கட்டுகிற வீடுகளும் இருக்க வேண்டும் என கருதக் கூடாது. ஒரு மனையில் வீடு கட்டும் போது அந்த வீடு எப்படி கட்டட சாஸ்திரபடி அமைய வேண்டும் என்ற விதிமுறைகள் உண்டு.

ஏன் ஒரு வீடு வாஸ்து என்கிற கட்டட சாஸ்திர விதியின்படி அமைக்க வேண்டும் என்பதை பற்றி சொல்கிறேன்.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

வாஸ்து தொடர்பான பொதுவான கேள்விக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலில் “வாஸ்து கேள்வி-பதில் என்று தலைப்பிட்டு, கேள்வியை bhakthiplanet@gmail.com என்ற மின்னஞசல் முகவரிக்கு அனுப்பவும்.

உங்கள் கட்டடத்தின் விரிவான வாஸ்து பலன் அறிய, கீழ்கண்ட குறைந்த கட்டண சேவையை பார்க்கவும்.

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 15 2011. Filed under Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech