Friday 29th March 2024

தலைப்புச் செய்தி :

முன்னேற்றம் குறைவாக தரும் மேற்கு மனை

வாஸ்து வியூக நுட்பங்கள்   

குதி – 5

 

விஜய் கிருஷ்ணாராவ்

Click for Previous Part

உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பண்பாடு, நாகரீகம் காலச்சாரம் என்கிற வகையில் பல அடையாளங்கள் இருக்கிறது. அந்த வகையில் நம் இந்தியத் திருநாட்டின் அடையாளம் ஆன்மிகம். பணத்தையும், ஆடம்பரத்தையும் தேடி உலகம் முழுவதும் சுற்றி திரியலாம். ஆனால் நிம்மதி வேண்டும் என்றால் – ஆத்மாவுக்கு  அமைதி வேண்டும் என்றால் அதற்கு ஒரே இடம் இந்தியாதான். இந்தியாவில் உள்ள ஒரு பணக்கார நோயாளி அமெரிக்க மருத்துவமனையில் மரணம் அடைவதை கௌரவமாக கருதுகிறான். ஆனால் ஒரு அமெரிக்க குடிமகன் கங்கையில் நீராடி காசியிலும் திருவண்ணாமலையிலும் தன் வாழ்நாள் கழிவதை புனிதமாக கருதுகிறான்.

கீழ்திருப்பதியில் உள்ளவனுக்கு மேல் திருப்பதியின் அருமை தெரியாது. அதுபோல இந்தியர்களாகிய நமக்கு இந்தியாவின் பெருமை புரியாது. இப்படி நமக்கு புரியாத தெரியாத அருமையான விஷயங்கள் நம் இந்தியத் தாயின் திருமடியில் அனேகம் உண்டு.

அப்படிப்பட்ட பொக்கிஷங்கள்தான் ஆன்மிகத்தின் கிளைகளாக உள்ள ஜோதிடக் கலை. அந்த ஜோதிடக்கலைகளில் இருக்கும் இன்னொரு கிளைதான் வாஸ்துகலை. வாஸ்து என்றால் இடிப்பதும் – உடைப்பதும் என்கிற கொத்தனார் வேலை அல்ல. அது நம் ஜாதகயோகத்தை மேலும் அழகுப்படுத்திக் காட்டுகிற கண்ணாடி. சட்ட விதிகளை மதித்து நடக்கும் போது நமக்கு நீதியின் பாதுகாப்பு கிடைப்பதை போல கட்டிட சாஸ்திர விதிகளை மதித்து நடக்கும் போது இயற்கையின் பாதுகாப்பு கிடைக்கிறது.

பொய்கள் நிலைத்து இருப்பதில்லை என்பதுதானே உலக தர்மம்.

ஆண்டாண்டு காலமாக ஒரு கலை வளர்ந்து வருகிறது என்றால், அதில் ஏதோ ஒரு உண்மை, ஒரு விஷயம் இல்லாமல் இருக்காது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு வீடு அல்லது ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எண்ணற்ற விதிமுறைகள் வாஸ்துகலையில் இருக்கிறது.

அதையெல்லாம் நாம் தெரிந்துக் கொண்டாலும் வாடகை வீடு தேடும்போதும் சொந்த வீடு அமையும் போதும், வாஸ்து ரீதியாக எது நமக்கு எளிதாக இயலுமோ அதன்படி நம்பி நடப்பதில் தவறே இல்லை. இருந்தாலும், வாஸ்துவின் அடிப்படை விதிகள் என்று சில விஷயங்கள் இருக்கிறது. அதை மட்டும் நாம் மீறக்கூடாது.  உதாரணமாக,

கிழக்கும் – மேற்கும் ஆண்களின் திசை. வடக்கும் – தெற்கும் பெண்களின் திசை.

கிழக்கு – மேற்கில் குறை இருந்தால் அது ஆண்களை பாதிக்கும் என்றும், வடக்கு – தெற்கில் குறை இருந்தால் அது பெண்களை பாதிக்கும் என்றும் நாம் அறிய வேண்டும்.

இந்த வாஸ்துகுறையை எப்படி அறிவது?

வடக்கும் – கிழக்கும் இணைகிற பகுதி வடகிழக்கு. இந்த வடகிழக்கு துண்டித்து இருந்தாலோ குறுகி இருந்தாலோ அது வாஸ்துகுறை. அதுபோல,

தெற்கு – மேற்கு இணைகிற திசை தென்மேற்கு. இந்த தென்மேற்கு குறுகி இருக்கலாம் ஆனால் நீண்டு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது வாஸ்துகுறை.

வாஸ்து குறை அப்படி என்னதான் செய்யும்? என்கிற கேள்வி எழுலாம். இந்த கேள்விக்கு பதில் பெறுவதைவிட ஒரளவாவது வாஸ்துபடி உள்ள வீட்டில் குடியேறி நிம்மதி பெறுவதுதான் புத்திசாலிதனம்.

வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு வாஸ்து பாதிக்காது என்று நினைக்கக் கூடாது.

வாடகை வீடு தேடுபவர்களுக்கு முக்கிய வாஸ்து விதி சில உண்டு.

தென்கிழக்கில் குளியல் கழிவறை போன்ற நீர்நிலைகளோ, தென்மேற்கில் சமையலறையோ இருக்கக் கூடாது. குறிப்பாக எந்த வீட்டுக்கும் வடகிழக்கு துண்டித்து இருக்கக் கூடாது.

தென்மேற்கில் படுக்கையறை இருப்பது சிறப்பை தரும். அடுத்ததாக, அனுபவ ரீதியாகவும் – ஆராய்ச்சி ரீதியாகவும் இரண்டு விஷயத்தை நான் தெரிந்துக் கொண்டேன். அதை பற்றிய கட்டுரைகளும் எழுதி உள்ளேன்.

முதலாவது –

ஈசான்ய மூலை எனும் வடகிழக்கில் பூஜையறை அமைத்துவிட்டால், பூஜையறையில் நாம் வைக்கின்ற விளக்கின் தீப ஒளியின் தொடர் தாக்கத்தால் அந்த வீட்டின் பிள்ளைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.

ஆனால் வடகிழக்கில்தான் பூஜையறை அமைக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். இந்த வாஸ்து தொடர்பான நிறைய புத்தகங்களும் இப்படிதான் சொல்கின்றது. ஆனால் அது மிகவும் தவறு. தீபம் நெருப்பில்தானே இயங்குகிறது. நெருப்புக்கு ஆகாத பகுதி வடகிழக்கு. சமையல் அறையாக இருந்தாலும் பூஜை அறையாக இருந்தாலும் வடகிழக்கில் அமைப்பது தவறுதான். காரணம் தீபம் எரிவது நெருப்பில். ஊதபத்தி – கற்பூரம் – நெய்விளக்கு ஆராதனை இப்படி எதுவாக இருந்தாலும் அது அக்னி தொடர்பானது. ஆனாலும் ஒரு கேள்வி எழலாம். “வடகிழக்கு எனும் ஈசான்ய மூலையில் சமையலறை அமைக்கக் கூடாது என்பது சரி… ஆனால் தீப எண்ணெய் விளக்கை குறிப்பிட்ட நேரம்வரைதானே வைக்கிறோம். ஊதபத்தி – கற்பூரம் பலமணி நேரமா எரிகிறது?“ என்று கேட்கலாம்.

சின்ன நெருப்புதானே ஊதபத்தியில் உள்ள நெருப்பு, அதை நம் கையில் அழுத்தினால் சுடாதா? நெருப்பு நெருப்புதான். வடகிழக்கில் பூஜையறை தவறு தவறுதான். வடகிழக்கு பகுதி, குழந்தையின் சரீரத்தை போல மென்மையானது. வடகிழக்கில் பூஜையறை அமைப்பது பிஞ்சு குழந்தையின் தொடையில் நெருப்பு வைப்பதுபோல் தவறானது.   

இரண்டாவதாக –

கிழக்கு நோக்கியமனை – வடக்கு நோக்கியமனை – தெற்கு நோக்கியமனை – மேற்கு நோக்கியமனை என்று நான்கு மனைகள் உள்ளன.

இதில் மிகச் சிறப்பான முதலிடம் பெறுவது EAST FACING அதாவது கிழக்கு நோக்கிய மனை.

இரண்டாமிடம் – வடக்கு நோக்கிய மனை. மூன்றாமிடம் – தெற்கு நோக்கிய மனை. கடைசி இடம் – மேற்கு நோக்கிய மனை. அதாவது – WEST  FACING PLOT.

இந்த மேற்கு நோக்கிய மனையில் மட்டும் நாம் என்னதான் வாஸ்து சிறப்புடன் கட்டடம் கட்டினாலும் பலன்களை ஒரளவுதான் தருகிறது. குறிப்பாக – நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் லாபத்தை மட்டும் மிகமிகக் குறைவான அளவிலேயே தருகிறது. காரணம் –

மேற்குமனை அஸ்தமன சூரியனின் கதிர்களை பெறுகிறது. காலையில் சுறுசுறுப்பு, மாலையில் மந்தம் ஏற்படுவதை போல, மாலை சூரியனின் கதிர்களை பெறுகிற மேற்குமனை மந்தமான யோகத்தைதான் தருகிறது.

அதையும் மீறி மேற்கு நோக்கிய மனையில் வசிப்பவர்கள் சிலர் சிறப்பாக இருப்பதாக நாம் கருதினால், அது மனைக்குரியவரின் பூர்வ புண்ணிய யோகமே காரணம் எனலாம். குறை இல்லாத மனிதனே இருக்க முடியாது. ஆனால் குறைகளே மனிதனாகவும் இருக்கக் கூடாது. அதற்காகதான் அண்ணல் அம்பேத்கர் சட்டவிதிகளை தந்ததைபோல, ஆண்டவன் சாஸ்திர விதிகளை தந்திருக்கிறான்.

மேற்கு மனை வாங்கி விட்டோம். இனி என்ன முடியும்? என கவலை வேண்டாம். அதற்குரிய சில கட்டட அமைப்பு உண்டு. அதன்படி அந்த மேற்கு மனையில் கட்டடம் கட்டி நல்ல பலனை பெறலாம். அதற்கு முன் மேற்குமனைக்கு முக்கியமான விஷயம் பூமி பூஜை நாள்.

Click for Next Part

விஜய் கிருஷ்ணாராவ்

வாஸ்துகலை நிபுணர்

(M) 98411 64648  /  98406 75946

E-Mail : vijaykrisshnarau@yahoo.in

© 2011  bhakthiplanet.com   All Rights Reserved

Posted by on Apr 28 2011. Filed under வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech